புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் சர்ச்சையும் சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நீதிபதி மாற்றம்: வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அனு குரோவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அஜய் குப்தா என்ற புதிய நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் ஆஜரான சிபிஅய் வழக்குரைஞரும் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நீதிபதியும் மாற்றப் பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.
விசாரணையை
முடக்க திட்டமா?
விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விரைவான விசார ணையை முடக்குவதற்கும், வழக்கை திசை திருப்புவதற்கும் பயன் படுத்தப்படும் பழைய உத்தியே இந்த திடீர் இடமாற்றம் என சமூக ஆர்வலர்களும் விமர் சகர்களும் குற்றம் சாட்டு கின்றனர்.
“வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” எனப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக் குறுதிகள் அனைத்தும் வெறும் போலி வாக்குறுதி களாகவே தோன்றுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித் துள்ளன. அரசின் உள் நோக்கம் முற்றிலும் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
அடுத்தடுத்து நடக்கும் இந்த அடையாளம் தெரியாத சம்பவங்கள், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர் புடைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்குமா என்ற பெரும் கேள்விக் குறியை உருவாக்கியுள்ளது.
