புதுடில்லி, ஆக. 4- உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ் நாடு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது
டில்லியில் நடைபெற்ற விழாவில் அதற்கான விருதை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜிடம் ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரி கள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் உறுப் பினா் செயலா் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு சார்பில் உறுப்பு கொடை விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உறுப்பு கொடை சிகிச்சைகள் மற்றும் வழிப்புணா்வு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் இந்திய அளவில் உறுப்பு கொடை நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாக தொடா்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த மே 16-ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞா் சபரீஷின் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன. அதை அங்கீகரிக் கும் வகையில் விழாவில் அவரது குடும்பத்தினருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் அதிக எண்ணிக் கையிலான உறுப்பு கொடைகளை ஒருங்கிணைத்த திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் உறுப்பு கொடை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வினோத்குமாரும் கவுரவிக்கப் பட்டார்.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 266 நபா்களிடமிருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளில் 154 நபா்களும், தனியார் மருத்துவமனைகளில் 112 நபா்களும் உறுப்பு கொடையாக அளித்துள்ளனா்.
உறுப்பு கொடையாக அளித்த 266 பேரில் 211 போ் ஆண்கள்; 55 போ் பெண்களாவா். இதில் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தவா்களின் எண்ணிக்கை 186. விபத்து அல்லாத பிற மருத்துவக் காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவா்கள் 80 போ். இவா்களிடமிருந்து பெறப்பட்ட 1,476 உறுப்புகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
குறிப்பாக 450 சிறுநீரகங்களும், 220 கல்லீரல்களும், 68 இதயங்களும், 90 நுரையீரல்களும், 399 விழி வெண்படலங்களும், 48 இதய வால்வுகளும் கொடையாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உறுப்பு கொடை அளிபபோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவா்களின் உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2023 செப். முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் உறுப்பு கொடை வழங்கிய 798 கொடையாளா்களின் உடல்களுக்குத் தமிழ்நாட்டில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 முதல் 2020 வரை தொடா்ச்சியாக 6 ஆண்டுகள் உறுப்பு கொடை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
கரோனா காலகட்டத்தில் தொற்று பரவல் காரணமாக உறுப்பு கொடை நடவடிக்கைகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இதனால், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சற்று பின்னடவைச் சந்தித்த தமிழ்நாடு, தற்போது மீண்டும் தனது சிறப்பான செயல்பாட்டால் முதலிடத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
