மதுரை, ஆக.4 ஸநாதனம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என தமிழ்நாடு சட்டமன்ற சார்பு செயலாளர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த மே 18 அன்று மதுரையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவின் மதுரை மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில்: உதயநிதி ஸ்டாலின் தனது பதவிப் பிரமாண உறுதி மொழிக்கு மாறாக, “ஸநாதனத்தை ஒழிப்பேன்” எனப் பேசியுள்ளார். இது மதங் களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும், இந்து மதச் சம்பிரதாயங்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு சட்டசபை சார்பு செயலாளரால் பதில் மனு அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய குறிப்பிட்ட சில காரணங்கள் மட்டுமே உள்ளன. சட்டமன்ற ஊதியம் தவிர்த்து ஆதாயம் தரும் பிற பதவிகளில் ஊதியம் பெறுதல். மனநலம் பாதிக்கப்பட்டவர் (பித்துப்பிடித்தவர்) என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுதல்.
கடனை அடைக்க முடியாத திவாலானவர் என அறிவிக்கப் பட்டு அதில் விடுவிப்பு பெறாமல் இருத்தல். இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல். நாடாளுமன் றத்தால் இயற்றப்பட்ட சட்டங் களின்படி தகுதியற்றவராக அறிவிக் கப்படுதல்.
மேலே குறிப்பிட்ட காரணங் களைத் தவிர வேறு காரணங் களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், இக்கோரிக்கையின்மீது சட்டமன்ற செயலகத் தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது.” இவ்வாறு சட்டமன்ற சார்பு செயலாளர் சந்திரசேகரன் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
