காவடி தூக்கத்தான் கல்வியா?

3 Min Read

மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களின் ஊரில் இருந்து கங்கை நீரை தூக்கிச்சென்று, அரித்துவாரில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றி, பிறகு அரித்துவாரில் இருந்து தங்கள் ஊருக்கு கங்கை நீரைக் கொண்டுவந்து ஊரில் உள்ள சிவன் கோவிலில் ஊற்றுவார்கள்.

இதுதான் காவடி யாத்திரையில் நடக்கும் நிகழ்வு!

சிவனுக்கு உகந்த மாதம் என்று கூறி சாவன் மாதம் (தமிழில் ஆடி) முழுவதும் இப்படிச் செல்வார்கள்!

சுமார் ஒரு மாதம் யாத்திரை செல்லும் போதும் 25 லிட்டர் தண்ணீரை இரண்டு குடங்களில் சுமக்கிறார்கள். மீண்டும் வரும்போது அதே போன்று சுமக்கிறார்கள்!

இப்படிச் சுமப்பவர்களில் ஒருவர் கூட உயர் ஜாதியினர் இல்லை.

பார்ப்பனர்கள், வீட்டுத்தண்ணீரை எடுத்து மந்திரம் ஓதினால் அது கங்கை நீராக மாறிவிடுமாம்.

இப்படி நடப்பவர்கள் அனைவருமே இடைநிலை ஜாதியினர்.  முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டாமை காரணமாக உயர் ஜாதியினர் உள்ள பகுதிகளில் நடக்கத் தடைவிதித்தனர். ஆனால் இப்போது தாழ்த்தப்பட்டமக்களும் கூட்டம் கூட்டமாக காவடி தூக்கிக்கொண்டு செல்லத்துவங்கியுள்ளனர்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரியானா, உ.பி., மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு மிக மிக குறைவாக இருக்கும்

காரணம் எல்லோரும் குடும்பத்தோடு காவடி யாத்திரை புறப்பட்டு விடுவார்கள்!

குடும்பத்தில் ஒருவர் காவடி தூக்கினால் அனைவருமே செல்வார்கள். காவடி தூக்கிச்செல்பவருக்கு சமைத்துக் கொடுக்க, சமையல் பாத்திரம் சுமப்பார்கள். பல கிராமங்கள் காலியாகிவிடும்!

காவடி தூக்குவதற்கு 40 நாள் விரதமிருப்பார்கள். அதாவது ஜூன் இறுதிவாரத்தில் இருந்தே பள்ளி செல்வதை நிறுத்திவிடுவார்கள்.

சரி இவர்களுக்கு அரசு என்ன செய்கிறது?

இவர்கள் செல்லும் பாதையில் உள்ள நிழல் தரும் மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தியுள்ளது., குறிப்பாக அத்திமரங்களை காவடி யாத்திரைச் செல்பவர்கள் பார்ப்பது அவர்களுக்கு புண்ணியத்தைத் தராதாம்! ஆகையால் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 14 ஆயிரம் மரங்களை சாமியார் அரசு வெட்டி வீழ்த்தியுள்ளது மேலும் எலிகாப்டரில் இருந்து மலர் தூவுகிறார்கள் இது காவடி எடுத்துச் செல்பவர்கள்மீது விழவேண்டும் என்பதற்காகவும் இதர சாலையோர மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு புதிதாக காவடி யாத்திரை செல்பவர்களின் ‘புனிதம்’ காக்கவேண்டும் என்பதற்காக ஹிந்துக் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குவதை உறுதி செய்யும் வகையில் கடைகளில் பெரிய எழுத்துகளின் கடை உரிமையாளர்களின் பெயர் எழுத வேண்டும், கடையில் வேலை செய்பவர்களின் பெயரை கழுத்தில் அடையாள அட்டைபோல் தொங்கவிடவேண்டும் என்று உத்தரவு வேறு பிறப்பித்திருந்தனர்.

இது நாடா – கொடு மிருகங்கள் திரியும் காடா? என்று நினைக்கத் தோன்றுகிறதா இல்லையா?

காவடி எடுக்கும் இந்தக் கால கட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையாம்!

மதக் கிறுக்குத்தனத்துக்காக பள்ளிகளை இழுத்து மூடினால் பிள்ளைகளின் படிப்பு என்னாவது?’ என்ற அக்கறை அரசுக்கும் இல்லை; பெற்றோர்களுக்கும் இல்லை. ‘மதவாத பிஜேபி ஆளும் மாநிலங்களின் நிலை எவ்வளவுக் கீழ்த்தரமாக இருக்கிறது! 48 நாட்கள் விரதம் இருந்தால் அந்த நாட்களில் சம்பாத்தியம் எப்படி? வறுமையும், நோயும் போட்டிப் போட்டுக் கொண்டு பிய்த்துத் தின்றாலும் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

அரசு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்கிறதா என்று மக்களும் நினைக்கப் போவதி்ல்லை – அதுதான் மதம் என்ற கிறுக்குப் பிடித்து, மூளையை மழுங்கடித்து விடுகிறதே!

சமூக சீர்திருத்த இயக்கம் எத்தகைய தேவை என்பது இந்த மாநிலங்களைப் பார்க்கும்போது தெரிகிறதா, இல்லையா?

தந்தை பெரியாரின் தொண்டால், அவர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத் தொண்டால் கல்வியிலும், பொருளாதாரத்திலும், நாகரிகத்திலும், தமிழ்நாடு எந்த அளவுக்கு மேலோங்கி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

குளிக்கப் போனவன் சேற்றில் விழுந்ததுபோல்
என்.சி.இ.ஆர்.டி.யின் பாடத் திட்டங்கள் முழுவதும் புராணப் புளுகுகள் புழுக்களாக நெளிகின்றன!

மதவாதம் ஆட்சி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு பிஜேபி ஆளும் வட மாநிலங்களே சாட்சியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *