ஒரு பெண் எம்.பி.க்கே இந்த அவலமா?

3 Min Read

கொல்கத்தாவில் இருந்து புதுடில்லி விமானத்தில் வந்துகொண்டு இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொத்ராவை பா.ஜ.க.வினர் சூழ்ந்துகொண்டு ‘‘ஜெய் சிறீராம்’’ கோஷம் போட்டது மட்டுமல்லாமல், விமானம் நின்ற பிறகும் அவரை இறங்கவிடாமல் தொடர்ந்து ‘‘ஜெய் சிறீராம்’’ என்று  மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டு இருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஹுவா இதுதொடர்பாக புகார் அளிக்க முனைந்த போது விமான நிலைய காவல்துறையினர் புகாரைப் பெற மறுத்துவிட்டதோடு, அவரைத் தொந்தரவு செய்த பா.ஜ.க.வினரைக் வெளியே செல்ல அனுமதி கொடுத்து விட்டனர்.

பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்ெகனவே பொதுப் போக்குவரத்துகளான ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்து வரும் நிலையில், தற்போது உயர்தரப் பயணமாகக் கருதப்படும் விமானங்களிலும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில் சாதாரண பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளான பெண் எம்.பி-க்களுக்கும்கூட பொதுவெளியில் அச்சுறுத்தல் ஏற்படுவது பா.ஜ.க.வினரின் உள்மனதில் ஒளிந்துள்ள பெண்களுக்கெதிரான வன்மத்தையும், ஆணாதிக்க மனநிலையையும் வெளிப்படையாகவே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தங்கள் வீட்டுப் பெண்கள், சகோதரிகள் அல்லது மகள்களுக்கு இதுபோன்ற அவமரியாதையும், மிரட்டலும் பொதுவெளியில் நேர்ந்தால் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு அவர்களின் குடும்பப் பெண்களே புரிய வைத்தால்தான் உண்டு என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பெண்களை அவமதிப்பதன் மூலமே பா.ஜ.க.வின் ஆணாதிக்கக் கொள்கைகள் திருப்தியடைவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய கீழ்த்தரமான நடத்தைகளைக் கண்டிக்க ‘கண்டனம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கூட அந்த வார்த்தைக்கே அவமானம் தரும் வகையில் இந்தச் செயல்கள் அமைந்துள்ளதாக மிகக் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் கடுமையான கண்டங்களைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்தனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சியில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும்  மேற்கொண்ட திட்டங்கள்போல வேறு எந்த மாநிலத்தில் நடந்துள்ளது என்று விரலை நீட்டிச் சொல்ல முடியுமா?

பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள்பற்றி, குற்ற ஆவணக் காப்பகத்தில் சமீபத்திய 2024–2025 தரவுகளின்படி பாலியல் வன்கொடுமை (RAPE) அதிகம் நடைபெறும் மாநிலங்களின் (வழக்குகள்) பட்டியலைப் பார்க்கும்போது, அதில் பா.ஜ.க. மாநிலங்கள்தான் முன்வரிசையில் நிற்கின்றன.

(1) இராஜஸ்தான் – 4,871

(2) உத்தரப்பிரதேசம்      – 3,209

(3) மகாராட்டிரம்   – 3,091

(4) மத்தியப் பிரதேசம்    – 3,061

இவை எல்லாம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான்!

அதுவும், இராஜஸ்தான் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

யூனியன் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் தலைநகரான டில்லி முதலிடத்தில் உள்ளது (1,058 வழக்குகள்)

‘குறைவான பாலியல் அத்துமீறல்கள்’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, நாகாலாந்து மாநிலங்களில்தான் மிக மிகக் குறைவு.

விமானத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க.வினர் சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுக்கின்றனர் என்றால் ‘நாம் வாழ்வது 2026ஆம் ஆண்டில்தானா!’ என்று நம் உடலையே கிள்ளிப் பார்க்க வேண்டியுள்ளது.

பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸின் தத்துவப் பிள்ளை! ஆர்.எஸ்.எஸ். என்பது இந்துத்துவாக் கொள்கையின் மூல ஊற்று. இந்துத்துவாவில் பெண்களுக்குரிய இடம் மிகவும் கேவலமானது.

‘பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள்’ என்றுதானே கீதை சொல்கிறது (அத்தியாயம் – 9; சுேலாகம் – 32).

‘படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்’ என்று சொல்லுவதுதானே மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் –9; சுலோகம் – 17).

இவற்றையெல்லாம் இன்றுவரை ‘தெய்வ வாக்கு’ என்று ஏற்றிப் போற்றும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங்பரிவார்க் கும்பல் பெண்களை சிறுமைப்படுத்துவதும், போகப் பொருளாகப் பார்ப்பதும் இயல்புதானே!

‘‘பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்தால் கண்டவாளுடன் ஓடிடுவாள்’’ என்று ‘திருவாய்’ மொழிந்தவர்தானே சங்கராச்சாரியார்; அவரை மகான் என்றுகூறி, தன் படுக்கை அறையில்கூட மாட்டியிருக்கும் ‘துக்ளக்’ குருமூர்த்தி ‘‘இந்தக் காலத்துப் பெண்களில் 30 சதவீதத்தினர் பெண்மையற்றவர்கள்’’ என்று தவறாக உளறி வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

இந்தக் கூட்டத்தின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்திருப்பது மிகப் பெரிய அபாயகரமானதாகும்! முதலில் பெண்கள் இதனை உணர வேண்டும் என்பதே நமது அழுத்தமான வலியுறுத்தல் ஆகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *