மாங்காய் மடையர்!
கோயில்களில் தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா? தேங்காயின் வெளிப்புற ஓடு ஒருவரின் செருக்கையும், அகங்காரத்தையும் குறிக்கிறது. கடவுளுக்கு முன் தேங்காயை உடைப்பதன்மூலம் பக்தர் ஒருவர் தனது அகங்காரத்தை அடையாளப்பூர்வமாக அர்ப்பணித்து,பணிவுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைகிறார். ஆணவத்தைக் கைவிட்டுப் பணியை மேற்கொள்ளும்போதே உண்மையான வெற்றி கிடைக்கிறது என்பதைத் தேங்காய் உடைப்பது நினைவூட்டுகிறது. ஆன்மாவை தூய்மையாக்குகிறது. தேங்காயை உடைக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் நீர் ஒருவரின் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களைக் குறிக்கிறது’’ என்று ஒரு சமூக வலைதாளம் ஆன்மிகத்திற்கு முட்டுக் கொடுக்கிறது.
கடவுள், பக்தி, மூடநம்பிக்கைகளைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சில வியாக்கியானங்களைச் சொல்லவேண்டிய பரிதாப நிலையைத்தான் இது காட்டுகிறது. முதலில் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள்ளிருக்கும் அர்ச்சகப் பார்ப்பனர்களின் ஜாதி அகங்காரம் ஒழிந்துள்ளதா? பிரசாதத்தைத் தூக்கித்தானே எறிகிறார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், தென்னைக்கும், இந்தியாவின் பூர்வீகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
தென்னை இந்தோ பசிபிக் பகுதி – குறிப்பாக கோஸ்டாரிக்கா தீவுதான் அதன் பூர்வீகம். கடல் வழி வணிக மூலமாக பல நாடுகளுக்கும் வந்து சேர்ந்தது; அப்படி வந்து சேர்ந்ததுதான் இந்தியாவுக்கும்.
இந்த நிலையில், இங்கே கோயிலில் தேங்காய் உடைப்பதற்குத் தத்துவார்த்தங்களைப் பிளந்து கட்டுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!
பஞ்சகவ்யம் என்ற ஹிந்து மதச் சடங்குகளில் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் சொல்லுவார்கள்.
பஞ்சம் என்றால், அய்ந்து; மாட்டு மூத்திரம், பால், சாணம், தயிர், வெண்ணெய் இவற்றை ஒரு கலக்குக் கலக்கிக் கொடுப்பார்கள். இதற்குத் தட்சணை வேறு கொடுத்துக் குடிப்பார்கள்! மாட்டு மூத்திரம் குடித்தால் நோய் நீங்கும் என்று அய்.அய்.டி. இயக்குநர் ஒருவரே கூறுகிறார்.
மனிதனை மாங்காய் மடையனாக்குவதற்கு மதத்தின் பெயரால் கேவலமான யுக்திகளைக் கையாண்டு, சுரண்டல் தொழிலை, ‘ஜாம் ஜாம்’ என்று நடத்துவதை என்ன சொல்ல!
– மயிலாடன்
