சென்னை, ஆக. 3- பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்து, பணி ஓய்வு பெற்றவர்களின் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் வகுப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து, அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகும் விசாரணை நடத்த முடியுமா? என்பது குறித்த வழக்கை, இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பணி ஓய்வு பெற்ற பிறகு மாநில அளவிலான குழு, அவர்களின் வகுப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த முடியுமா? ஓய்வு பெறும் முன் துவங்கிய விசாரணையை ஓய்வு பெற்ற பின்பும் தொடர முடியுமா? என்பது குறித்து முடிவெடுக்க, தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதிகள் கே.குமரேஷ் பாபு, ஜி.அருள்முருகன் ஆகியவர்கள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த வழக்குகளை விசாரித்த அமர்வு, போலி வகுப்புச் சான்றிதழ் அளித்து மோசடியாக பணி நியமனம் பெற்றிருந்தால், பணி ஓய்வு பெற்ற பின் அதற்கான சட்டவிரோத நடவடிக்கை இல்லாமல் போய்விடாது. அதன் காரணமாக பணி ஓய்வுக்கு பிறகும் வகுப்புச் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து விசாரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது.
ஓய்வு பெறும் முன் துவங்கிய விசாரணை, ஓய்வு பெற்ற பின் காலாவதியாகி விடாது என்பதால் விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
மேலும், வகுப்புச் சான்று சரிபார்ப்புப் பணிகளை தாமதப்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அவற்றை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசு ஊழியர் பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அவர்களின் வகுப்புச் சான்றுகள் சரிபார்ப்புப் பணிகளை முடிக்க வேண்டும் எனவும், அரசு ஊழியர் ஓய்வு பெற்றுவிட்டால் அவரது சான்றிதழ் குறித்த விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
