ஊத்துக்கோட்டை, ஆக.3- பூண்டி ஏரியில் 1.034 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரி மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் கிருஷ்ணாநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்ததை தொடர்ந்து சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 28ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
சராசரியாக வினாடிக்கு 340 கன அடி வீதம் வரும் கிருஷ்ணா நீர் முழுவதும் அப்படியே இணைப்பு கால் வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 1.034 டி.எம்.சி.யாக குறைந்துள்ளது.இதன் காரணமாக பூண்டி ஏரியில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி புல்வெளியாக மேய்ச்சல் நிலமாக மாறி காணப்படுகிறது.
மேய்ச்சல் நிலமாக மாறிய பூண்டி ஏரி
Leave a Comment
