சென்னை, ஆக. 3- தமிழ் நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.
நீட் தேர்வு வினாத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் அண்மைய காலத்தில் போராட்டம் நடத்தப் பட்டது.
இதில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஜூலை 20ஆம் தேதி சிஜேபி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் பட்டது.
அப்போது மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. போராட்டக் காரர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், சூரத், பாட்னா, அய்தராபாத் என பல்வேறு நகரங்களிலும் காலவரையற்ற போராட்டங்கள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம், தியாகராய நகர் பாலன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைஉலகினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து 36 நாட்கள் நடைபெற்ற போராட்டம் காரணமாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப் பட்டது.
மேலும், ‘போராட்டத் தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண் டும்’ என மாணவர் சங்கங்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.
1,000-க்கும் மேற்பட் டோர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ள தால், மாணவர்கள் மீதான வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.
அதற்காக, வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தனர்.
