வல்லம், ஜூலை 31 குறை என்பது வேறு; குற்றம் என்பது வேறு. குறை என்பது திருத்தப்பட வேண்டியது; குற்றம் என்பது தண்டிக்கப்பட வேண்டியது. ஆகவே, குறையும், குற்றமும் இரண்டும் ஒரே நிறை கிடையாது. அந்த வகையில், குறையும் இல்லை, ராம்பகதூர் மீது குற்றமும் இல்லை. தனித்தன்மையானவர் அவர்! எல்லோருக்கும் சம வாய்ப்பு உண்டு; எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால்தான், வெற்றி என்பது. அது ஒரு கூட்டு முயற்சியாகும்! ராம்பகதூர் வெற்றியைப் பாராட்டுகின்ற நேரத்தில், பல மடங்கு இந்த வெற்றிக்கான பங்கு அவருடைய வாழ்விணையருக்கு உண்டு. அவர்களை வெகுவாகப் பாராட்டுகிறோம். பணித்தோழர் ராம்பதூர் அவர்களுக்கு, நம்முடைய ‘சல்யூட்’ என்றார் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பணி நிறைவு பாராட்டு விழா!
கடந்த 26.6.2026 அன்று தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 41 ஆண்டுகள் பணியாற்றிய காவல் பணியாளர் (ஸ்பெஷல் கிரேடு) எல்.ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, அக்கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அவர் ஆற்றிய பாராட்டுரை வருமாறு:
நம்முடைய பணித்தோழர் ஏறத்தாழ 41 ஆண்டுகள் பணிபுரிந்த இந்த நிறுவனத்தினுடைய மூத்த உறுப்பினராக இருக்கக்கூடிய அருமை நண்பர் ராம்பகதூர், அவருடைய வாழ்விணையர் திருமதி ராம்குமாரி ஆகிய அருமைத் தோழர்களே! கல்லூரியினுடைய முதல்வர் பொறுப்பிலே இருக்கக்கூடிய தோழர் வெள்ளியங்கிரி அவர்களே, துணை முதல்வராக இருக்கக்கூடிய டாக்டர் ரோஜா அவர்களே, துணை முதல்வராக இருந்து ஓய்வு பெற்றும், என்றைக்கும் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய டாக்டர் பர்வீன் அவர்களே மற்றும் பணித் தோழர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘மூன்று வகையான உறவுகள்
எனக்கு உண்டு!’
இன்றைய காலைப் பொழுது, ஒரு மகிழ்ச்சிகரமான, அதே நேரத்தில் கொஞ்சம் வருத்தம் கலந்த மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றதொரு பொழுதாகும், மகிழ்ச்சி, 41 ஆண்டுகள் நாணயமாய், ஒழுக்கமாய், நேர்மையாய், நம்மோடு எந்தவிதமான பிணக்கும் இல்லாமல் ராம்பகதூர் பணியாற்றியுள்ளார் என்பது! நிர்வாகத்திற்கும், பணியாற்றக் கூடியவர்களுக்கும் இருக்கிற உறவு, இங்கே பர்வீன் அவர்கள் சொன்னதைப் போல, ஒரு குடும்ப உறவு. நான் அடிக்கடி, இயக்கக் கூட்டங்களிலே சொல்வது உண்டு. ‘மூன்று வகையான உறவுகள் எனக்கு உண்டு’ என்று சொல்வேன். அதைக் கேட்டு, சில பேர் அதிர்ச்சியாகப் பார்ப்பார்கள்.
‘‘நல்ல ஒழுக்கமான ஆள் என்று நினைத்தால், இந்த மாதிரி சொல்கிறாரே, ஏதாவது நமக்குத் தெரியாமல் கள்ள உறவு ஏதாவது இருக்குமோ?’’ என்று நினைப்பார்கள்.
கல்லூரி முதல்வர்கள் உள்பட அத்தனை பேரும் நம் பாராட்டுக்குரியவர்கள்!
அது அப்படியில்லை. ஒன்று, குருதி உறவு, இரத்த உறவு. இரண்டாவது, கொள்கை உறவு, இயக்கத்துக்கா ரர்கள். மூன்றாவது, கல்வி உறவு. அதுதான் நம்முடைய கல்வி நிறுவனங்கள். அதனால், எல்லாமே ஒரே வகைதான். ஒன்று உயர்ந்தது; இன்னொன்று தாழ்ந்தது என்கிற கிரேடு கிடையாது. அப்படி வரும்போது, முதன்முதலில், காடாய், புதராய் இருந்த இந்த இடம், இப்பொழுது வசதியாக அமர்ந்திருக்கின்றோம். இங்கெல்லாம் காலை வைக்க முடியாது, 1979 இல். எம்ஜிஆர். அவர்கள் அனுமதி கொடுத்தார். அவருடைய பெருந்தன்மையை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். ஏனென்று கேட்டால், அரசியலில் அவரை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவருடைய அரசு நமக்கு எந்தவிதமான தொல்லையும் கொடுக்கவில்லை, உதவி செய்தார்கள். ஒவ்வொரு கட்டமாகப் பார்த்தீர்கள் என்றால், பழைய ஒரு கட்டடம், தெற்கு வீதியில். அந்தக் கட்டடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வந்து, முட்புதர்களாக இருந்த இந்த இடத்தை சீரமைத்து, இங்கே வந்தோம். அப்படி பெருமைக்குரிய இந்த பாலிடெக்னிக், தமிழ்நாட்டின் தலைசிறந்த பாலி டெக்னிக்காக வருவதற்கு உழைத்த, முதல்வர்கள் உள்பட அத்தனை பேரும் நம் பாராட்டுக்குரியவர்கள்.
முதலில், சுலோச்சனா அவர்கள், இன்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பெருமையான நிகழ்ச்சி. பெங்களூருவில் இருக்கிறார். அந்த அம்மையார்தான் முதலில் ‘ஸ்பெஷல் ஆபீசராக’ வந்தார்கள். அதற்கடுத்து திருமதி சுந்தரி வெள்ளையன் அவர்கள் வந்தார்கள். அதற்கடுத்து நம்முடைய ராஜா அவர்கள் வந்தார். அந்த ராஜசேகரன் இருக்கிறார். இன்றைக்கும் நமக்குத் துணையாக இருந்து கொண்டிருக்கிறவர். இப்படி வரிசையாக வந்து, அதற்கடுத்தது மல்லிகா அவர்கள்.
ராம்பகதூர், தன்னுடைய
கடமையைச் செய்வார்!
பர்வீன் போன்றவர்கள், அவருடைய வாழ்விணையர் ராமச்சந்திரன். இங்கே இருந்துதான் அவர்கள் இரண்டு பேரும் வாழ்க்கைத் துணையானார்கள், அப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு. ஒரு குடும்பம் மாதிரி இங்கே இருக்கக்கூடியது. அன்றைக்கும், இன்றைக்கும் ஒரு குடும்பமாக நான் கருதுவது – பாலிடெக்னிக்குக்கு வந்த உடனே ரொம்ப மகிழ்ச்சியோடுதான் நான் இருப்பேன் எப்பொழுதுமே! அது மட்டுமல்ல, எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. நம் எல்லோருக்கும் பாதுகாப்பு யார்? என்றால், ராம்பகதூர் தான். அவர் தன்னுடைய கடமையைச் செய்வார்.
41 ஆண்டுகளுக்கு முன்னால், அவர் எவ்வளவு ‘சின்னப் பையனாக’ இருந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். சிறப்பான ஓர் இளைஞராக நேபாளத்தில் இருந்து வந்தவர். பொதுவாகவே, கொஞ்ச நாள்கள் இருப்பார்கள். பிறகு, ‘மைக்ரேட்டிங் பேர்ட்ஸ்’ மாதிரி, வேறிடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அல்லது ஊருக்குப் போய்விடுவார்கள்.
ஆனால், இவர், இங்கேயே இருந்து, தமிழைக் கற்றுக்கொண்டு, தமிழில் நன்றாக உரையாடுவது மட்டுமல்ல, நம்முடைய கல்வி குடும்பத்தில் ஒரு நல்ல உறுப்பினராக இருந்து மிக நெருக்கமாகி விட்டார். எவ்வளவு நேர்மையானவர் என்றால், எங்களுக்குப் பெரியார் திடலுக்கு சில நேரங்களில் முழு பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்தால், இங்கே இருந்து இவரை அழைத்துக் கொள்வோம். இது ஒன்றே போதும், அவருடைய கடமை உணர்வுக்கு அடையாளம். அனாவசியமாக யாரிடமும், எதுவும் பேச மாட்டார். இங்கே வந்து தமிழைக் கற்றுக்கொண்டார்; திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் எல்லாம் நல்ல அளவிற்கு இருக்கிறார்கள். இப்போது அவர் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.
எல்லோரும்
‘‘பணித் தோழர்கள்!’’
ஒரு இன்ஸ்டிடியூஷன், ஒரு கல்வி அமைப்பு, நிறுவனம் என்று சொன்னால், அதில், முதல்வர் மிக முக்கியமானவர்; தலைவர் மிக முக்கியமானவர். கரஸ்பாண்டன்ட் அங்கே மிக மிக முக்கியமானவர். தாளாளர் முக்கியமானவர். பேராசிரியர் முக்கியமானவர். துணை முதல்வர் என்று, கிரேடு வாரியாகப் பதவி அது. ஆனால், பிறப்பு உறவு என்பது இருக்கிறதே, எல்லோரும் சேர்ந்த கூட்டுப் பணிதான் அது. எனவே, இங்கே பிரின்சிபலுக்கும், கடைசியாக இருக்கிற காவல ருக்கும், வாட்ச்மேனுக்கும் இரண்டும் ஒரே கிரேடுதான். அதுதான் ‘‘பணித் தோழர்கள்.’’ ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளைச் செய்கிறோம். எல்லோரும் முக்கியத்துவம் வாய்ந்த வர்கள்தான்.
அவருடைய பணி நேர்மையான பணி. அப்பேர்ப்பட்டவர் ஓய்வு பெறுகிறார். இந்த மாதிரி ஒரு நேர்மையானவரைக் கண்டுபிடிப்பதுதான் இப்பொழுது ரொம்பக் கஷ்டம்.
குறை என்பது திருத்தப்பட வேண்டியது;
குற்றம் என்பது தண்டிக்கப்பட வேண்டியது!
பல ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், 30 ஆண்டுகள், 35 ஆண்டுகள் இருந்தவர்கள் கூட சில நேரங்களில் தவறு செய்த செய்திகள் வருகிறபோது, நம்மால் நம்ப முடியவில்லை. எப்படி இவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறவர், எப்படி இப்படித் தவறு செய்கிறார் என்று. ஆனால், அந்த மாதிரி ஒரு சின்னக் கோளாறு, சின்னக் குறைகள்கூட இல்லாதவர். இரண்டு வகைகள் இருக்கிறது. குற்றங்குறைகள் இருந்தால். அதை அழுத்திச் சொல்லிச் சொல்லி, ஏதாவது குற்றம் குறைகள் இருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று வழக்கமாகச் சொல்லுவார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. குறை என்பது வேறு; குற்றம் என்பது வேறு. குறை என்பது திருத்தப்பட வேண்டியது; குற்றம் என்பது தண்டிக்கப்பட வேண்டியது. ஆகவே, குறையும், குற்றமும் இரண்டும் ஒரே நிறை கிடையாது. அந்த வகையில், குறையும் இல்லை, அவர் மீது குற்றமும் இல்லை.
எல்லோருடைய
கூட்டு உழைப்பும் இருக்கிறது!
அது மாதிரி நம்முடைய கல்வி நிறுவனத்தில் இதுதான் பெருமை. நல்ல சிறந்த முறையில், நம் கல்வி நிறுவனத்திற்குப் பரிசுகள், வளர்ச்சி இவை அத்தனையும் வந்திருக்கிறது என்றால், அதற்கு எல்லோருடைய பங்களிப்பும் மிக முக்கியம். யாராவது ஒருத்தரை அழைத்துத்தான், அந்த அடையாளம் கொடுப்பார்கள். ஒருத்தரை அழைத்துத்தான் அதாவது பிரின்சிபலை அழைத்துத்தான் கொடுப்பார்கள். அதனால், அந்தச் சிறப்புக்கு அவர் மட்டும்தான் காரணம் என்பது இல்லை. அவர் தலைமைப் பொறுப்பில் இருப்பதினால், அவரை அழைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அதற்குள், எல்லோருடைய கூட்டு உழைப்பும் இருக்கிறது, கூட்டு முயற்சி இருக்கிறது. இன்னொன்று, வந்திருக்கிறவர்களுக்கு எல்லாம் சொல்லி, நான் பகிர்ந்து கொள்கிறேன்; அவர் மாதிரி ஒவ்வொருவரும் உண்மையாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். அதற்கு ஒரு மாடல், ‘ரோல் மாடல்’ மாதிரி ராம்பகதூர் அவர்கள் இருக்கிறார் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
நான், நம்முடைய ‘விடுதலை’ அலுவலகத்தில் கூட ஓர் உதாரணம் சொல்லுவேன். தோழர்களிடம் சொல்லும்போது, உங்களுக்கு ‘விடுதலை’ ஏடு அஞ்சலில் வரும்போது, முகவரி அதில் ஒட்டி, எந்தப் பத்திரிகைக்கு நீங்கள் சந்தா கட்டினாலும், அப்படித்தான் வரும். அப்படி வரும்போது, தலையங்கத்தை எழுதி, அதை கம்ப்யூட்டரைஸ் செய்து, தலைப்புப் போட்டு, செய்திப் பிரிவில் இருப்பவர்கள் எல்லாம் அதைப் படித்து, திருத்தி, பிறகு, அதை லே–அவுட் செய்கிறவர் அந்தப் பணியை செய்து, பிறகு அச்சகத்திற்கு அனுப்பி, அச்சடித்து வந்தவுடனே, அது வெளியூருக்குச் செல்வதற்காக சந்தா பிரிவிற்குச் செல்லும். சின்ன பையனாக இருப்பார்; அவர் படிக்காதவராக இருப்பார் அல்லது சாதாரணமாக இருப்பார். எல்லா பேப்பரையும் எடுத்து, அருகில் வைத்துக்கொண்டு, முகவரி சிலிப்பில் பசையைத் தேய்து, அதைப் பேப்பரில் ஓட்டி அனுப்புவார். அவர் அந்த வேலையைச் செய்வதுதான் மிகவும் முக்கியம். ஏனென்று கேட்டால், பசையைக் கொஞ்சம் கூடுதலாகத் தடவி ஓட்டினார் என்றால், பேப்பரைப் பிரிக்கும் போது, தலையங்கம் பகுதி கிழிந்து வந்துவிட்டால், தலையங்கம்தான் ஒரு பத்திரிகையிலே மிகவும் முக்கியம். பேப்பர் கிழிந்துவிட்டால், என்ன வாசகம் என்று தெரியாது. ஆகவே, தலையங்கம் எழுதுகிறவர், ஆசிரியர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பசை ஓட்டுபவரும். அதுதான் பணியினுடைய தத்துவம்.
தனித்தன்மையானவர் ராம்பகதூர்!
அது மாதிரி, பிரின்சிபல் எவ்வளவு முக்கியமோ. அதே மாதிரிதான் வாட்ச்மேன். இவர் ஸ்பெஷல் கிரேடு அதில். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அவர் தனித்தன்மையானவர். இதுதான் மிக முக்கியம், பாராட்டிற்குரியது. உயர்நிலைப் பள்ளியில், நீங்களும் சில பேர் படித்திருக்கிற வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, ஓர் ஆங்கில செய்யுள், ‘இங்கிலீஷ் ஃபோயம்.’ அந்தப் போயட்ரியை நான் படித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
பெரிய நாடு, சிறிய நாட்டிடம்
தோற்றுப் போகிறது!
நான் வாழ்வியலில்கூட அதை எழுதியிருக்கிறேன். அதாவது சின்ன விஷயம், சாதாரண பதவியில் உள்ளவர் என்று ஒரு நிறுவனத்தில் யாரும், யாரையும் அப்படிக் கருதக்கூடாது. ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கிறது. அந்தப் போரில், பெரிய நாடாக ஒன்று இருக்கிறது. பெரிய நாடு, சிறிய நாடு ஒன்றிடம் தோற்றுப் போகிறது. வியட்நாம் மாதிரி, அமெரிக்கா மாதிரி என்று உதாரணம் சொல்ல வேண்டும். கியூபா மாதிரி என்றும் சொல்லலாம். அப்படி வரும்போது, அந்தப் போரை உருவகப்படுத்துகின்ற மாதிரி, அந்தப் பாடல் சில வரிகள்தான். மிக அருமையாக இருக்கும். அதை நான் வாழ்நாள் முழுக்க மறப்பதாக இல்லை.
அவ்வளவு பெரிய தேசம், சிறிய நாட்டிடம் எப்படித் தோற்றார்கள், அவர்கள் எப்படி வென்றார்கள்? என்று நினைக்கத் தோன்றும்.
For want of a nail, the shoe was lost;
For want of a shoe, the horse was lost;
For want of a horse, the rider was lost;
For want of a rider, the battle was lost;
For want of a battle, the kingdom was lost;
And all for the want of a horseshoe nail!
இதன் தமிழாக்கம் இதோ:
ஆணி இல்லாததால், இலாடம் போனது;
இலாடம் இல்லாததால், குதிரை போனது;
குதிரை இல்லாததால், வீரன் போனான்;
வீரன் இல்லாததால், போர் போனது;
போர் இல்லாததால், நாடே போனது!
இவை அனைத்தும் ஒரு சிறிய குதிரையின் இலாட ஆணி இல்லாததால் நேர்ந்தவை!
(குறிப்பு: ‘‘shoe’’ என்பது இங்கு குதிரையின் காலில் அடிக்கும் இலாடத்தைக் குறிக்கிறது.)
வெற்றி என்பது. அது ஒரு கூட்டு முயற்சி!
ஆகவேதான், மிக முக்கியமான அளவுக்கு ஒருவர் எந்தப் பணியைச் செய்தாலும், அதில் பேதம் பார்க்கக் கூடாது. நீங்கள் கூட நினைக்கலாம், அவர் பிரின்சிபல் – நாம் வாட்ச்மேன் என்பது போன்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு நீங்கள் யாரும் ஆளாகக்கூடாது. எல்லோருக்கும் சம வாய்ப்பு உண்டு; எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால்தான், வெற்றி என்பது. அது ஒரு கூட்டு முயற்சியாகும்.
‘‘வெற்றிக்கு ஆயிரம் பேர்
உரிமை கொண்டாடுவார்கள்; தோல்வி அனாதை ஆகிவிடும்!’’
இன்னொன்று உண்டு, தேர்தல் வெற்றி, தோல்வி இதைப் பற்றித்தான் எல்லோரும் பெரிதாகக் கொண்டிருக்கிறார்கள். ‘‘வெற்றிக்கு ஆயிரம் பேர் உரிமை கொண்டாடுவார்கள்; தோல்வி அனாதை ஆகிவிடும்’’ என்பது ஆங்கிலப் பழமொழியாகும். அப்படித்தான் தோற்றுப் போனால் யாரும் கிட்டே வரமாட்டார்கள். வெற்றி என்றால், என்னால் தான் வந்தது, என்னால் தான் வந்தது என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், வெற்றி – தோல்வி இரண்டையும் சமம் என்று வாழ்க்கையில் நினைக்கவேண்டும்.
பணித்தோழர் ராம்பகதூர் அவர்களுக்கு,
நம்முடைய ‘சல்யூட்’
எனவே, பணித்தோழர் ராம்பகதூர் அவர்களுக்கு, நம்முடைய ‘சல்யூட்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்தவர்களுக்கு அந்த ‘சல்யூட்’ கொடுக்கிறோம் அவருக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர், நேபாளத்துக்குச் செல்லப் போகிறாரா? அல்லது இங்கேயே இருக்கப் போகிறாரா? என்று தெரியவில்லை.
நாடுகள், எல்லைகள் நம்மைப் பிரிக்கலாம். ஆனால், தந்தை பெரியார் சொன்னார், ‘‘நான் மானிடத்தை நம்புகிறவன்; எனக்குத் தேசியம் அது, இது எல்லாம் முக்கியம் இல்லை’’ என்றார். மானிடப் பரப்பு, வானம் வசப்பட வேண்டும் என்றார் புரட்சிக்கவிஞர்! எனவே, ‘‘பாரடா உந்தன் மானிடப் பரப்பு’’ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
ராம்பகதூர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
எனவே, நமக்கு நாடு முக்கியமல்ல; மனிதம் மிக முக்கியம். அதைவிட, நாட்டால் வேறுபட்டாலும், ஒரே அளவுக்கு அன்பால், பணியால், ஈர்ப்பால் ஒன்றுபடுவோம் என்ற செய்திக்கு ராம்பகதூர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவர் எங்கிருந்தாலும் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். ராம்பகதூர் வெற்றியைப் பாராட்டுகின்ற நேரத்தில், பல மடங்கு இந்த வெற்றிக்கான பங்கு அந்த அம்மையாருக்கு உண்டு. அவர்களை வெகுவாகப் பாராட்டுகிறோம். அதனால்தான், மேலே அழைத்து வந்து, அமர வைத்திருக்கின்றோம். நம்முடைய நாட்டில், ஆண்களைப் பாராட்டித்தான் பழக்கமே தவிர, பெண்களை ஒதுக்கி விடுவார்கள். அதனால்தான், ‘‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’’ என்று பழமொழிகூட இருக்கிறது. வெள்ளைக்காரனே அந்தப் பழமொழியை வைத்திருந்தான். நாம்தான் கேட்டோம், ‘‘அது ஏன் பின்னால் இருக்க வேண்டும்; நம்முடைய தத்துவப்படி, அவர்கள் முன்னால் இருக்க வேண்டும்’’ என்று வற்புறுத்தி வந்தோம். அல்லது குறைந்தபட்சம் பக்கத்திலேயாவது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி, என்றென்றைக்கும் இந்த நாள் மறக்க முடியாத நாள். எப்போதும் போல, இந்த நிறுவனத்திற்கு நீங்கள் வரலாம்; இந்த உறவு நீடிக்கும். நீங்கள் நேபாளத்தில் இருந்தாலும் சரி அல்லது உலகின் பூமிப் பந்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, நம்முடைய உறவு என்பது மனித உறவு; அது பிரிக்க முடியாத பாசத்திற்குரிய ஒன்று. என்றைக்கும், ஒவ்வொருவருக்கும் ராம்பகதூர், ஓர் எடுத்துக்காட்டு.
எனவேதான், ராம்பகதூர் போன்றவர்களுடைய பணி நிறைவு விழாவில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் எல்லாம் பாலிடெக்னிக் கல்லூரியில் உரிய இடத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், காவலர்தானே, வாட்ச்மேன்தானே என்று நினைக்கக் கூடாது. அவர் அனுமதி கொடுத்தால்தான், நாம் உள்ளேயே வர முடியும். அவர் அனுமதி இல்லை என்றால், எப்பேர்பட்டவராக இருந்தாலும் உள்ளே வர முடியாது.
ஒரு சிறிய புகார்கூட
அவர் மேல் யாரும் சொன்னது கிடையாது!
ஆகவே, மிகச் சிறந்த பாதுகாவலராக இருந்தார், எந்தவிதமான குறையும் அவர் மேல் இல்லை. பெண்கள் நிறுவனமாக முதலில் தொடங்கப்பட்டது. ஒரு சிறிய புகார்கூட அவர் மேல் யாரும் சொன்னது கிடையாது. பிறகுதான், இந்நிறுவனம் இருபால் மாணவர்களும் படிக்கக்கூடிய நிறுவனமாக ஆனது.
ஆகவே. அவருடைய பணியை சிறப்பாகச் செய்தமைக்காகப் பாராட்டுத் தெரிவித்து, நல்ல உடல்நலத்தோடு அவர் எங்கிருந்தாலும் சிறப்பாக வாழ வேண்டும் என்று கூறி, அதேபோல, கோவிந்தராஜன் இங்கே நிற்கிறார்; கோவிந்தராஜனும் சிறப்பாக பல ஆண்டுகள் இங்கே பணியாற்றியவர். எதற்குமே அவர் இல்லை என்று சொல்ல மாட்டார்; அவரைத் திட்டினால் கூட மகிழ்ச்சியோடுதான் தலையாட்டுவாரே தவிர, எதிர்த்துப் பேச தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாடு. அதனால் தான் பாருங்கள், பல ஆண்டுகளாகப் பணியாற்றிய பிற்பாடும், மல்லிகா நம்மோடு இருக்கிறார்; பர்வீன் நம்மோடு இருக்கிறார்.
பணிக்கு ஒரு வரம்பு உண்டே தவிர,
அன்புக்கு வரம்பு கிடையாது!
ஆகவே, இங்கே பணிக்கு ஒரு வரம்பு உண்டே தவிர, அன்புக்கு வரம்பு கிடையாது; அதே மாதிரி பற்றுக்கு வரம்பு கிடையாது. அப்படிப்பட்ட கொள்கைக் குடும்பமாக இந்தக் கல்வி குடும்பம் என்றென்றைக்கும் தழைத்தோங்க வேண்டும் என்று கேட்டு முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
