82 ஆண்டுகளுக்கு முன்னால் கடலூரில்…. எதிர்நீச்சலில் வென்ற பெரியார் ! முனைவர் அதிரடி க. அன்பழகன்

5 Min Read

தந்தை பெரியார்….

எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத நெஞ்சுரத்திற்குச் சொந்தக்காரர்!

மலைகுலையினும் நிலைகுலையா மாவீரத்தின் பிறப்பிடம்!

சரணாகதி என்ற சொல்லைச் சுட்டுப் பொசுக்கிய பெருநெருப்பு!

‘சொற்களில்’ சுயமரியாதைக்கு நிகரான சொல்லில்லை’’ என்றுரைத்த சுயமரியாதையின் மொத்த வடிவம் தந்தை  பெரியார். திராவிடர் இனத்தின் சுயமரியாதைக்காகப் போரிட்டார். ‘உலக மனித குலத்திற்கு மானமும் – அறிவுமே அழகென்று’ ஆர்ப்பரித்தார். மானமுள்ளவனே மனிதனென்றார்.

அப்பெரும் தத்துவத்தின் ஊற்றான தந்தை பெரியார் திராவிடர் களின்  சுயமரியாதை காக்க – ஆரியர் இனத்திடம் அடிமை கொண்ட இழிவை நீக்க சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். சுயமரியாதை எனும் சொல் உயிரானது; ஏன் – உயிரினும் மேலானது என்று களமாடினார் –  மானங்காக்கப் போராடினார்.

1925ஆம் ஆண்டு தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு 1944இல் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டினார். பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை –கல்வி – வேலை வாய்ப்பினை மய்யமாக்கிய சமூகநீதிக்காக, அதற்குத் தடையாக நிற்கும் ஜாதி, மதம், கடவுள் தத்துவங்களை தவிடு பொடியாக்கிட ஓய்வின்றி பணி செய்தார். உறங்காது பயணித்தார்.

திராவிடர் கழகம் பெயர் மாற்றத்திற்குமுன் தென் ஆற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் 29.7.1944 அன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான்   தந்தை பெரியார் மறைந்தபோது (24.12.1973இல்) தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையில் எந்த சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று’’ அனைவரையும் அம்மா தலைமையில் சூளுரை ஏற்கச் செய்திட்ட, இன்றைய கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள், மாநாட்டிற்கு முதல்நாள் இரவு சத்திரம் ஒன்றில் தங்கியிருந்த தந்தை பெரியாரை 10 வயது சிறுவனாக   முதன் முதலில் நேரில் பார்க்கிறார். அய்யாவிற்கு வணக்கம் கூறிவிட்டு வந்துவிட்டார். எதிர்காலத்தில் இயக்க வரலாற்றில் புதுவரலாற்றை உருவாக்கப் போகும் சந்திப்பு வெகு சாதாரண சந்திப்பாக அன்று அமைந்தது.

அடுத்த நாள் மாநாட்டில் பேசிய சிறுவன் வீரமணியின் பேச்சைக் கோடிட்டுக் காட்டி அண்ணா ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ எனும் பொருள்படப் பேசினார்.

அதைக் கேட்டு தந்தை பெரியார் பலமாகச் சிரித்து மகிழ்ந்தார்.

மாநாடு முடிந்ததும் தந்தை பெரியார் ஆசிரியர் அய்யாவிடம் ‘‘நீ என்ன படிக்கிறாய்?’’ என்று கேட்கிறார். அய்ந்தாம் வகுப்பு என்று கூறியதும், நன்றாகப்படி என்று தட்டிக் கொடுத்தார் தந்தை பெரியார்.

இந்நிகழ்வு தமிழர் தலைவரின் மனதில் நீங்கா பதிவை உருவாக்கிவிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.

தென் ஆற்காடு மாவட்ட திராவிடர்  மாநாடு  கடலூர் முதுநகர் திருப்பாதிரிப்புலியூரில் 29.7.1944 அன்று காலை முத்தையா டாக்கீஸ் திரைப்பட அரங்கில் நடைபெற்றது. காங்்கிரஸ்காரர்கள் வழக்கம்போல எதிர்ப்புக் குரல் எழுப்பிய நிலையில் தந்தை பெரியார்  அவர்கள் சலிக்காமல் – சளைக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார். தோழர்கள் கொதித்து எழுகிறார்கள்.

‘‘தந்தை பெரியார் தோழர்களை அைமதிப்படுத்தி, அமரச் செய்து, தனது வெண்கலக் குரலில் சிங்கமாக சிலிர்த்தெழுந்து பேசினார்,’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 1இல் குறிப்பிட்டுள்ளார்.

இதோ பெரியார் பேசுகிறார்:

‘‘நான் சொல்வதை அப்படியே நம்புங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இங்கு வரவில்லை. உங்களுக்கு அறிவு, பகுத்தறிவு இருக்கிறது. அதனால் பயன்படுத்திச் சிந்தியுங்கள். சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்! இல்லையேல் விட்டுத் தள்ளுங்கள். எனது கருத்தை மறுக்க எவருக்கும் உரிமை உண்டு. அதனால்தான் அதை எடுத்துச் சொல்லும் உரிமை எனக்கும் உண்டு’’ என்று  பேசிய பேச்சில் இருந்த நியாயத்தைக் கேட்டு உற்சாகம் அடைந்தார்.

அன்று மாலை மஞ்சை நகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் கொட்டும் மழைக்கிடையே அய்யாவின் கொள்கை மழை. இறுதியில் கொள்கை மழை வென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கேட்டனர்.

கூட்டம் முடிந்ததும் அய்யா, அம்மா தோழர்கள் அனைவரும் திருப் பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்தை நோக்கி நடந்து வருகிறார்கள். அய்யா அவர்களை மட்டும் ஆள் இழுக்கும் ரிக்‌ஷா வண்டியில் ஏற்றி உட்கார வைத்து அழைத்துச் சென்றனர். தோழர்கள் ரிக்‌ஷாவைச் சுற்றி செல்கின்றனர். ரிக்‌ஷா கெடிலம் பாலம் அருகில் வரும்போது பாம்பு ஒன்று வீசப்படுகிறது. தோழர்கள் அதைப் பிடித்து எறிந்துவிட்டனர் (தண்ணீர் பாம்பு). சற்று தூரம் வந்ததும் பெரியார் ரிக்‌ஷாவை திருப்பச் சொல்கிறார். குறிப்பிட்ட தூரம் வந்ததும் பெரியார் மீண்டும் ரிக்‌ஷாவைத் திருப்பி பழையபடி போகச் சொல்கிறார்.

தோழர்கள், அய்யா ஏன் இப்படி சொல்கிறார் என்பது புரியாமல் செல்கி்னறனர். புகைவண்டி நிலையம் வந்துவிட்டோம். அய்யாவோ, நான் ஏன் வண்டியை திருப்பச் சொன்னேன் தெரியுமா?’’ என்று ஆரம்பித்து ஒரு செருப்பு தன்மீது விழுந்ததையும், மறு செருப்பிற்காக தான் திருப்பி வண்டியை போகச் சொன்னதையும், இரண்டாவது செருப்பும் தன்மீது எதிரிகள் வீசியதும் ‘‘இரண்டையும் எடுத்து வந்து விட்டேன்’’ என்று செருப்பைக் காட்டுகிறார். ‘‘ஆளுக்கு ஒரு செருப்பு இருந்தால் பயன் இல்லை. இப்போதும் இரண்டும் என்னிடம்’’ என்று அய்யா அந்த நேரத்திலும் நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.

பாம்பு வீசிப்பட்ட போதும், செருப்பு வீசப்பட்டபோதும் கவலைப்படாது தன் கொள்கைப் பயணத்தை நடத்திய கொள்கைக் கோமான் தந்தை பெரியார். எதிரிகள் அச்சுறுத்தியபோதும் அஞ்சாதுபயணித்த அரிமா தந்தை பெரியார்.

எந்த இடத்தில் தந்தை பெரியார்மீது செருப்பு வீசப்பட்டதோ அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு 13.8.1972 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் சிலை வைக்கப்பட்டது. அன்றைய தமிழ் நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் சிலையை திறந்து வைத்தார்.

தந்தை பெரியார்மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வை வரலாற்றுக் குறிப்பாக கல்வெட்டில் செதுக்கி சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. கவிஞர் கருணானந்தம் அவர்கள் ‘செருப்பொன்று ேபாட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிதை எழுதினார்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் எந்தப் பெரியாரை தாக்கி இழிவுபடுத்தினார்களோ அதே பெரியார் சிலை திறப்பில் பெரியாரே கலந்துகொள்கிறார். முதலமைச்சர்  தந்தை பெரியாரின் சிலை திறந்து வைக்கிறார். பணமுடிப்பும் – பரிசுப் பொருட்களும் பெரியாருக்கு குவிந்தன.

எந்த நிகழ்வில் தந்தை பெரியாரை, ஒரு சிறுவனாகப் பார்த்து வியந்து நின்றாரோ, அதே இடத்தில் தந்தை பெரியாருக்குச் சிலை திறப்புச் செய்தார்; வரலாற்றை மாற்றி எழுதினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி! அதைத்தான் “செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்!” என்றார் கவிஞர் கருணானந்தம்.

தந்தை பெரியார் வாழ்நாளெல்லாம் எதிர்நீச்சல் போட்ட தலைவர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத தலைவர். எதிர்ப்பை வென்ற தலைவர், பெரியாரை எதிர்த்தோர் அவரை வாழ்த்தியதே வரலாறு. பெரியாரை இகழ்ந்தோர் அவரை புகழ்ந்ததே வரலாறு. கடலூரில் நடந்த நிகழ்வும் எதிர்ப்பை வென்றிட்ட பெரியாரின் வெற்றிக் காவியம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *