திரு.வி. கலியாணசுந்தரனார் பிறந்த நாள் இன்று (26.08.1883)
திரு.வி.க. அரசியல், சமுதாயம், எனப் பல துறை களிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ் நடையின் காரணமாக இவர் தமிழ்த் தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் (தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசலம் – சின்னம்மா இணையருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். கலியாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் மேற்கொண்டிருந்த ஆசிரியர் பணியில் இருந்து விலகினார்.
பின்னர் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் ‘திராவிடன்’, ‘நவசக்தி’ போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற் சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு 14.09.1947 இல் நடந்த போது திரு.வி.க. பெரியார் படத்தைத் திறந்து வைத்து, “திராவிடப் பெருமக்களின் தலைவன் எனது பழைய நண்பரும் உழுவலன்பனு மாகிய இராமசாமிப் பெரியார் படத்தைத் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர் ஓர் இயற்கை ஞானி என்றுதான் கூறவேண்டும். பெரும் காரியங்களை எல்லாம் எளிய முறையில் சாதிக்கும் திறமை இவரிடம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டு வந்தது. மனோதத்துவ ஆய்வின்படி இப்பெரியாரின் புற உறுப்புகளை நோக்கினால் அஞ்சாமை சாயல் இவருடைய கண்ணொளியில் பொலிவதைக் காணலாம். இந்தியா எங்கும் ஏன் உலகமெங்கும் கூட இந்த ஆகஸ்ட்15 ஆம் நாள் இந்திய சுதந்திர விழா கொண்டாடப்பட்ட காலத்தில் “நாம் எதிர்பார்த்த சுதந்திரம் அல்ல இது. சுரண்டல் சக்கரத்துடனும், சர்வாதிகார சக்கராயுதத்துடனும், வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியைத் துவங்கும் நாள் தான் இது” என்று கட்டளையிட்டார். தன் மனசாட்சிக்குத் தோன்றியதை யார் என்ன கூறினாலும் தனக்கு லட்சியமில்லை என்று வெளியிட எவ்வளவோ அஞ்சாமை வேண்டும். அஞ்சாமை உள்ள இடத்தில் உண்மை இருக்கும். உண்மை உள்ள இடத்தில் தான் அஞ்சாமை பிறக்க முடியும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.
அவரின் 144ஆவது பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம்.
