புதுடில்லி, ஜூலை 28- ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே 26.7.2026 அன்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அபிஜீத் தீப்கே, ”எதிர்கால உத்தியை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்கள் போராட்டம் 25.7.2026 அன்றுதான் முடிவடைந்தது. எனவே எங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பஞ்சாப் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
கரப்பான்பூச்சி ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மாணவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதியக்கூடாது.வினாத்தாள் கசிவு தொடர்பான சட்டத்தில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையிலான திருத்தங்களை அரசு முன்மொழிந்துள்ளது. இதில் விரைவு நீதிமன்றங்கள், துரித விசாரணைகள், 10 கோடி ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் குறைந்தபட்ச சிறைத்தண்டனையை மூன்றிலிருந்து அய்ந்து ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனையை பத்து ஆண்டுகளாகவும் உயர்த்துவது ஆகியவை அடங்கும்.
இருப்பினும், வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தெளிவான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் மூலம் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்வதையே முன்கூட்டியே தடுப்பதற்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஒரு கூட்டாட்சி நாடாக, மாநிலங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்தியா அதிகாரமளிக்க வேண்டும். அதேவேளையில், இந்திய அரசு பாதுகாப்புத் தரநிலைகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும்” என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.
