ரிஷிவந்தியம், ஜூலை 26- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதாது; ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணா புரம் அருகே உள்ள அத்தியூரில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வன்னி அரசு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு: “நீட் தேர்வு முறை என்பதே ஒரு மிகப்பெரிய ஊழல் ஆகும். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதைத் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட ஒரு சனாதன யுக்திதான் இந்த நீட் தேர்வு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே நீட் தேர்வை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
“கருநாடகா அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க மறுத்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சூழல் மிகவும் மோசமாக இருக்கும் இந்த நேரத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து வருகின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் கருநாடகாவுக்குச் செல்வது முற்றிலும் தேவையற்றது” என்று கூறினார்.
