தொல்லியல் கல்வி என்பது வெறும் கடந்தகால எச்சங்களை வகுப்பறையில் அறிமுகப்படுத்தும் எளிய பாடப்பிரிவு அல்ல. அது ஒரு சமூகத்தின் கூட்டு வரலாற்று நினைவுகளை (Collective Historical Memory) அறிவியல் முறையில் கட்டமைக்கும் மகத்தான துறையாகும். மண் ணுக்குள் புதைந்துள்ள தொல்பொருட்கள், கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழாய்வுத் தரவுகள் ஆகியவை மறைந்துபோன கடந்தகாலத்தின் வெறும் சாட்சியங்கள் மட்டுமல்ல, அவை மனித சமூக மாற்றங்கள், தொழில்நுட்பப் பரிணாமங்கள், உலகளாவிய பண்பாட்டுப் பரிமாற்றங்கள் மற்றும் சமத்துவப் போராட்டங்களின் உயிரோட்டமுள்ள ஆவணங்களாக விளங்குகின்றன.
மரபுவழி வரலாற்றுக் கல்வி நீண்டகாலமாக அரசு களின் எழுச்சி-வீழ்ச்சி, போர்களின் வெற்றி-தோல்வி, அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆதிக்க வர்க்கங்களின் வாழ்க்கையை மய்யப்படுத்திய ஒற்றைப்பரிமாண அணுகுமுறையிலேயே கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவாக, பொதுமக்கள், உழைக்கும் சமூ கங்கள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வரலாற்றுப் பங்களிப்புகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ உள்ளன. இந்தக் குறுகிய பார்வையிலிருந்து விடுபட, தொல்லியல் கல்வியை பொருள்சார் சான்றுகளின் அடிப் படையில் மனித சமூகத்தின் பன்முகப் பரிணாமத்தை அறிவியல் பூர்வமாக விளக்கும், தொழில் நுட்ப ஒருங்கிணைப்பை வலியுறுத்தும், சமூக நீதி மற்றும் பண்பாட்டு உள்ளடக்கத்தை மேம்படுத்தும், சுற்றுச் சூழல் பொறுப் புணர்வை வளர்க்கும், ஜனநாயகக் குடிமை உணர்வை வலுப்படுத்தும் மாற்றுக் கல்வியாக (Transformative Education) மறுவரையறை செய்வது இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இன்றியமையாத தேவையாகும்.
தொல்லியல் என்பது மனிதநேய விழுமியங்களையும் (Humanistic Values), துல்லியமான அறிவியல் முறை களையும் (Empirical Science) இணைக்கும் நவீன அறிவுசார் பாலமாக விளங்குகிறது. ஒரு சமூகத்தின் கூட்டு வரலாற்று நினைவுகள் திட்டமிட்டுச் சிதைக்கப்படும்போது அல்லது மறைக்கப்படும்போது, அச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமும் (Cultural Identity), அறிவுசார் சுதந்திரமும் (Epistemic Freedom) கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. இதை எதிர்கொள்ள, தொல்லியல் கல்வியை ஏட்டுக்கல்வியாகவோ, நிறுவனக் கல்வி யாகவோ மட்டும் முடக்காமல், அதனை ஒரு பரந்த மக்கள் அறிவியல் இயக்கமாக (People’s Science Movement) பொதுத்தளத்தில் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தப் புதிய அணுகுமுறை மூலமே இளைய தலைமுறையினரிடம் பகுத்தறிவு, அறிவியல் உலகப்பார்வை (Scientific Temper), பூர்வகுடி அடையாளங்கள் (Indigenous Identities) குறித்த தன்னம்பிக்கை மற்றும் வரலாற்றுப் பெருமிதத்தை ஆழமாக நிலைநிறுத்த முடியும்.
அறிவின் ஜனநாயகமயமாக்கலில்
மின்னணு தொல்லியலின் பங்கு
மின்னணு தொல்லியலின் பங்கு
இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் (ICT), தொல்லியல்துறையை புதிய அறிவியல் பரிணாமத்துக்கு உயர்த்தியுள்ளது. இந்த மாற்றத்தின் மய்யமாக விளங்கும் மின்னணு தொல்லியல் (Digital Archaeology), தரவுகளை உருவாக்குதல், சேமித்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல் மற்றும் பகிர்தல் ஆகிய அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புவியியல் தகவல் அமைப்பு (GIS), LiDAR, ஒளிப்பட அளவியல் (Photogrammetry), மேகக் கணினி (Cloud Computing), மாற்றமுடியாத தரவுப் பதிவேட்டு முறை (Blockchain), மெய்நிகர் யதார்த்தம் (VR), மிகைப்பு யதார்த்தம் (AR) மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வு (Big Data Analytics) போன்ற தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் தொல்லியல் அறிவு, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களின் எல்லைகளைத் தாண்டி சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பகிரப்படும் அறிவின் ஜனநாயகமயமாக்கல் (Democratisation of Knowledge) சாத்தியமாகிறது. மின்னணு தொல்லியல் தொழில்நுட்ப அடுக்கு (AI, GIS, LiDAR, Cloud, Blockchain), மெய்நிகர் அடுக்கு (VR, AR, Metaverse Museums) மற்றும் சமூக அடுக்கு (Citizen Science, Open Science, Epistemic Justice) ஆகிய மூன்று பரிமாணங்களின் ஒருங்கிணைப்பு மூலம் திறந்த அறிவியல் (Open Science), குடிமக்கள் அறிவியல் (Citizen Science) மற்றும் அறிவுசார் நீதி (Epistemic Justice) ஆகியவற்றை வலுப்படுத்தி, தொல்லியல் கல்வியை உள்ளடக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட நவீன அணுகுமுறையாக மாற்றுகிறது.
திறந்த அணுகல் தொல்லியலும் தரவுப் பரவலாக்கலும்: அறிவுசார் சமத்துவம்
பாரம்பரிய வரலாற்று ஆய்வியலில், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணம் பெறும் ஆய்விதழ்களின் (Paywalled Journals) கட்டுப்பாட்டில் இருந்த தரவுகளை திறந்த அணுகல் தொல்லியல் (Open Access Archaeology) அமைப்பு உலகளாவிய பொதுச் சமூகத்துக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது. முதன்மை அகழாய்வு அறிக்கைகள், கல்வி வளங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைத் தடையின்றி வழங்கும் இந்த அமைப்பு கல்விசார் சமத்துவத்தையும் (Academic Equity), அறிவியல் வெளிப்படைத்தன்மையையும் (Scientific Transparency) உறுதி செய்கிறது. இதன் விளைவாக, பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வளரும் நாடுகளின் நிறுவனங்கள் சமமான உலகளாவிய ஆய்வு வாய்ப்புகளைப் பெறுகின்றன. மேலும், இந்தத் தடையற்ற தரவு அணுகல் ஆதிக்கக் கோட்பாடுகளுக்கு மாற்றான பன்முக விளக்கங்கள் மற்றும் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்து, தொல்லியல் அறிவை சமூக நீதிக்கான (Social Justice) முதன்மைக் கருவியாக மாற்றுகிறது.
திறந்த தரவுக் களஞ்சியங்களும்
மின்னணு பாதுகாப்பும்
மின்னணு பாதுகாப்பும்
திறந்த தரவுக் களஞ்சியங்கள் (Open Data Repositories) அகழாய்வுப் பதிவுகள், GIS, LiDAR, 3D மாதிரிகள் மற்றும் கதிரியக்க காலக்கணிப்பு தரவுகளை நீண்டகாலப் பாதுகாப்புடன் சேமித்து, மறுபகுப்பாய்வு மற்றும் திறந்த அணுகலுக்கு வழிவகுக்கின்றன. இதன் மூலம் அறிவு பாதுகாக்கப்பட்டு, எதிர்கால ஆய்வுகளுக்கான நிலையான அறிவியல் முதலீடும் தொடர்ச்சியும் உறுதிப்படுத்தப்படுகின்றன.
மின்னணு பாரம்பரியத் தளங்கள் உயர்தரப் ஒளிப்படங்கள், 3D மாதிரிகள் மற்றும் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் புவியியல் எல்லைகளைத் தாண்டி பண்பாட்டு வளங்களை அணுகச் செய்கின்றன. அழியும் நிலையிலுள்ள நினைவுச்சின்னங்களை ஆவணப் படுத்துவது நவீன பாதுகாப்பு உத்தியாகும். மெய்நிகர் அருங்காட்சியகங்கள் VR, AR மற்றும் AI தொழில்நுட்பங்கள் மூலம் தொல்பொருட்களை 360° கோணத்தில் ஆராயும் வசதியைத் தருகின்றன. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்கி, பண்பாட்டு ஜனநாயகத்தை (Cultural Democracy) நிலைநாட்டுகிறது.
மின்னணு புரட்சியின் விளைவாக தொல்லியல் கல்வி வகுப்பறைச் சுவர்களைத் தாண்டி உலகளாவிய காணொலி கற்றல் சூழலாக மாறியுள்ளது. MOOCகள் (Massive Open Online Courses) உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் சொற்பொழிவுகள், ஆய்வகப் பயிற்சிகள் மற்றும் மின்னணு நூல்களை இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ வழங்குகின்றன. இது பணியில் இருப்பவர்கள், தனி ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் (Lifelong Learning) வாய்ப்பை உருவாக்குகிறது. MOOCகள் புவியியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை உடைத்து, உயர் தொழில்நுட்பத் திறன்களை உலகளாவிய மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன.
இடஞ்சார்ந்த நீதி (Spatial Justice) என்பது எட்வர்ட் சோஜா மற்றும் டேவிட் ஹார்வி போன்ற சமூகப் புவியியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு. இது சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறை மற்றும் நீதி ஆகியவை புவியியல் ரீதியாக எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. தொல்லியலில் ஜிஅய்எஸ் (GIS) தொழில்நுட்பம் பாரம்பரிய வளங்களை வரைபடமாக்குவதோடு, அதிகார வர்க்கத்தால் ஆவணப்படுத்தப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் உண்மை நிலையை உலகுக்கு வெளிப்படுத்தும் சமூக நீதிச் செயல்பாடாகும்.
பாரம்பரிய வளங்களின் சமமான வரைபடம்
பாரம்பரிய வரைபடமாக்கல் பெரும்பாலும் ஒற்றைத்தன்மை வாய்ந்ததாகவும், ஆதிக்க மய்யங்களை முன்னிறுத்துவதாகவும் இருந்தது. ஜிஅய்எஸ் (GIS) பன்முகத் தரவு அடுக்குகளை (Data Layers) ஒருங்கிணைத்து, விளிம்புநிலைச் சமூகங்களின் அடையாளங்களையும் உள்ளடக்கிய சமத்துவ வரைபடத்தை உருவாக்குகிறது. Point data (தொல்பொருட்கள்), Line data (வணிக வழிகள்), Polygon data (குடியிருப்புகள்) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு பண்பாட்டு நிலவியல் வரைபடம் (Cultural Landscape Mapping) உருவாக்கப்படுகிறது. இது ஒருதலைப்பட்சமான நிதியுதவியை மாற்றி, அனைத்துச் சமூகங்களின் மரபுச் சின்னங்களுக்கும் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஜிஅய்எஸ் (GIS) மற்றும் ரிமோட் சென்சிங் (Remote Sensing) மூலம் இதுவரை கவனிக்கப்படாத கிராமப்புற, கடலோர மற்றும் காட்டுப் பகுதிகளின் தொல்லியல் சான்றுகள் கண்டறியப்படுகின்றன. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். இது வரலாற்று வரைவியலில் புவியியல் ரீதியான சமநிலையின்மையைத் தகர்க்கிறது.
பாரம்பரிய வரைபடமாக்கல் (Heritage Mapping)
இது ஒரு புவியியல் பரப்பில் உள்ள அசையும் மற்றும் அசையா பாரம்பரிய வளங்களை (Tangible and Intangible Heritage) மின்னணு முறையில் ஆவணப்படுத்தி பகுப்பாய்வு செய்யும் முறை. GPS & GNSS மூலம் துல்லியமான ஆயத்தொலைவுகள் சேகரிக்கப்படுகின்றன. புவியியல் உயர மாதிரி (DEM-Digital Elevation Model), நீர் ஆதாரங்கள், மண் வளம் ஆகியவற்றுடன் தொல்லியல் தரவுகள் அடுக்குகளாக (Layers) வைத்து ஆராயப்படுகின்றன. இது பெருநிறுவன ஆக்கிரமிப்புகள் அல்லது உள்கட்டமைப்புத் திட்டங்களால் உள்ளூர் மக்களின் பாரம்பரிய நிலங்கள் அழிவதைத் தடுக்க உதவுகிறது.
ஏற்ெகனவே கண்டறியப்பட்ட தளங்களின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நிலப்பரப்பில் புதிய தளங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை புள்ளியியல் மற்றும் கணினி மாதிரிகள் (Logistic Regression, MaxEnt, Machine Learning) மூலம் கணிக்கும் முறை. இது குறைந்த செலவில் தொலைதூரப் பகுதிகளில் மறைந்திருக்கும் எளிய மக்களின் வாழ்விடங்களைக் கண்டறிய உதவுகிறது. இதன் மூலம் அகழாய்வுத் திட்டங்கள் அரசியல் அல்லது இன மய்யவாத நோக்கங்களுக்குத் திசைதிருப்பப்படுவது தடுக்கப்படுகிறது.
இடஞ்சார்ந்த சமத்துவமின்மைப் பகுப்பாய்வு (Spatial Inequality Analysis)
கடந்தகால நாகரிகங்களில் ஜாதி, வர்க்கம் மற்றும் அதிகாரப் படிநிலைகள் புவியியல் ரீதியாக எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதை ஆராயும் முக்கியப் பிரிவு. அண்மைப் பகுப்பாய்வு (Proximity Analysis) மற்றும் பார்வைப்புலப் பகுப்பாய்வு (Viewshed Analysis) மூலம் பண்டைய நகரங்களில் அதிகார மய்யங்களுக்கு அருகில் வாழ்ந்தவர்கள் யார், தொலைவில் வாழ்ந்தவர்கள் யார், நீராதாரங்கள் யாருக்கு எளிதாகக் கிடைத்தன என்பதை ஆராயலாம். இது கடந்தகால அதிகாரக் கட்டுப்பாட்டு முறைகளை வெளிக்கொணர்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொல்லியல் கல்வியை புரட்சிகர மாற்றத்துக்கு உட்படுத்தியுள்ளது. Big Data பகுப்பாய்வு, Predictive Modelling, தானியங்கி வகைப்பாடு மற்றும் ஊடாடும் கல்வி அனுபவங்களை உருவாக்குகிறது. இது தொல்லியலை தரவடிப்படையிலான (Data-driven), முங்கணிப்பு (Predictive) மற்றும் உள்ளடக்கத் (Inclusive) துறையாக உயர்த்துகிறது. மாணவர்களுக்கு விமர்சன சிந்தனை, தரவுப் பகுப்பாய்வு மற்றும் பன்முக அணுகுமுறைகளை வளர்க்கிறது. தரவு சார்பு (bias), நெறிமுறை சிக்கல்கள் (ethics) மற்றும் மனித-செயற்கை நுண்ணறிவு நுட்பம் (human-AI collaboration) ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும்.
ஜெனரேட்டிவ் ஏஅய் (Generative AI) மற்றும் பெருமொழி மாதிரிகள் (Large Language Models) தொல்லியல் உள்ளடக்கத்தை தனிப்பயனாக்கி (personalized), பன்முகமாக (multimodal) உருவாக்குகின்றன. எழுத்திலிருந்து-படமாக்கல் (Text-to-Image), முப்பரிமாண மறுகட்டமைப்பு (3D Reconstruction), ஊடாடும் உருவகப்படுத்தல்கள் (Interactive Simulations) மூலம் வரலாற்று சூழல்களை உருவகப்படுத்தி immersive அனுபவம் அளிக்கின்றன. பெரிய அளவிலான உள்ளடக்கம், தனிப்பயன் ஏற்பு கற்றல் (adaptive learning), விளிம்புநிலை மொழிகளுக்கான உள்ளடக்கம் ஆகியவை நன்மைகள். மாணவர்கள் மெய்நிகர் அகழாய்வுகள் (virtual excavations) அல்லது பாரம்பரிய கதையாடல்கள் (heritage narratives) உருவாக்கலாம்.
இயந்திர கற்றல் (Machine Learning)
மூலம் தள அடையாளம்
மூலம் தள அடையாளம்
இயந்திர கற்றல் முறையில் முன்கணிப்பு மாதிரிகள் (Predictive Modelling) அகழாய்வுத் தளங்களை முன்னறிவிப்பதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. Random Forest, XGBoost, Neural Networks, GIS ஆகியவை நில அமைப்பு மாறிகள் (topographic variables), செயற்கைக்கோள் படங்கள் (satellite imagery), LiDAR data மூலம் சாத்தியக்கூறு வரைபடங்கள் (probability maps) உருவாக்கப்படுகின்றன. இதற்கு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் (அதாவது நிலப்பரப்பின் உயரம், சரிவுத் தன்மை, நீராதாரம் மற்றும் வளங்களின் அண்மை ஆகிய இயற்கைக் கூறுகளை — நவீனப் புவிசார் புள்ளியியல் மாதிரிகள் மூலம் பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் இதுவரை கண்டறியப்படாத புதிய தொல்லியல் தளங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் துல்லியமாக முன்கணிக்கும் ஓர் அதிநவீன கணினியியல் ஆய்வு வழிமுறையாகும்), சுவிட்சர்லாந்தின் சுரிச் மாதிரிகள் (இது வெறும் சுற்றுச்சூழல் காரணிகளை மட்டும் பார்க்காமல் மனிதன் மற்றும் நிலப்பரப்பு இடையிலான உறவு, சமூக அமைப்பு, வரலாற்று நில மாற்றங்கள் போன்ற அம்சங்களையும் இணைத்து ஆய்வு செய்கிறது) சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. மாணவர்கள் இயந்திர கற்றல் பயிற்சி, செய்து புவித்தொல்லியல் (Geoarchaeology), கணிணிவழி தொல்லியல் (Computational Archaeology) திறன்களை வளர்க்கலாம். இதில் செலவு குறைவு, பாதிப்பு குறைவு, இயற்கை மாற்றங்களை முங்கனிப்பது (climate change prediction) ஆகிய நன்மைகள் உண்டு.
இயற்கை மொழி செயலாக்கம் பண்டைய எழுத் துருக்களை பகுப்பாய்வு செய்கிறது. Pythia model சேதமடைந்த எழுத்துருக்களை மறு உறுவாக்கம் செய்கிறது. இதற்கு பொருள் சார்ந்த தேடல் (semantic search), இயந்திர மொழியாக்கம் (machine translation), மொழியியல் பகுப்பாய்வு (linguistic analysis) உதவுகின்றன. ஏனியஸ் மாதிரி Aeneas model இலத்தின் கல்வெட்டுகளை ஆய்வு செய்யப் பயன்பட்டது. இந்த இயற்கை மொழி செயலாக்கம் மூலம் மாணவர்கள் அமைப்பியல் ஒழுங்க்குகளை (patterns) கண்டறியலாம். தரவு பற்றாக்குறை (Data scarcity), எழுத்து முறை வேறுபாடுகள் (script variations), சூழல் தெளிவின்மை (contextual ambiguity) ஆகிய சவால்களும் இதில் உள்ளன. இதை போக்க வேண்டுமென்றால் மொழியியலாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெற்றவர்கள் இணைந்து பணியாற்றுவது அவசியம்.
சமூக நீதி மற்றும் பாரம்பரிய மேலாண்மை
பாரம்பரிய மேலாண்மை என்பது சமூக நீதியின் ஒரு விரிவாக்கமாக மாறியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரிய மேலாண்மை அணுகுமுறை (Inclusive Heritage Management) சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொள்கிறது. பகிரப்பட்ட பாரம்பரியம் (Shared Heritage) பண்பாட்டு பன்முகத் தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. தொல்குடி அறிவு (Indigenous Knowledge) பழங்குடியின மக்களின் மரபுவழி அறிவையும், அனுபவ அறிவையும் மேம்படுத்துகிறது. பங்கேற்பு சார்ந்த பாதுகாப்பு முறை (Participatory Conservation) உள்ளூர் சமூகங்களைப் பாரம்பரியப் பாதுகாப்பின் முக்கியப் பங்காளர்களாக மாற்றுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals – SDGs) இணைந்து, நீடித்த மற்றும் சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறது. புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பு, பள்ளி அளவிலான தொல் லியல் கல்வி, சமூக அடிப்படையிலான பயிற்சி, மின்னணு தொழில்நுட்ப திறன்கள், பல்துறை கல்வி ஆகியவை மாணவர்களை சுயசார்பு ஆய்வாளர்களாக மாற்றும்.
பாரம்பரியப் பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். எதிர்கால கல்வி மிண்ணனு மனிதவியல் துறை (Digital Humanities),மேகக்கணிணி (Cloud Computer), மாற்றமுடியாத தரவுப் பதிவேட்டு முறை (Blockchain), குடிமக்கள் அறிவியல் (Citizen Science) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திறந்தநிலை அறிவியல் கல்வி (Open Science) மாதிரியாக வளர வேண்டும்.
சமூகப் பொறுப்பு – அறிவுசார் முதலீடு
தொல்லியல் கல்வி என்பது வெறும் கடந்தகாலத்தை அறியும் துறையாக மட்டுமல்ல, அது மக்களாட்சியின் அடிப்படை மதிப்புகளை வலுப்படுத்தும் அறிவுத் தளமாகும். சமத்துவம், பன்முகத்தன்மை, பங்கேற்பு, சமூக நீதி போன்ற கருத்துகளை மாணவர்களிடையே ஊட்டுவதன் மூலம், தொல்லியல் கல்வி சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலம், தொல்லியல் கல்வி சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது. இது அறிவியல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் வட்டார அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பல்துறை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகு முறை, மாணவர்களுக்கு கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பொறுப்புணர்வுள்ள குடிமக்களாக உருவாகும் வாய்ப்பையும் வழங்குகிறது. தொல்லியல் கல்வி, பாரம்பரியப் பாதுகாப்பிற்கான கருவியாக மட்டுமின்றி, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அறிவார்ந்த மக்களாட்சிச் சமூகத்தை உருவாக்கும் சக்தி வாய்ந்த வழி முறையாக விளங்குகிறது.
