பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தால் மக்களின் நேரமும், செலவும் குறையும்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 24- ‘வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தின்மூலம் பொதுமக்களின் நேரமும், பயணச்செலவும் குறையும்’ என்று பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதல்முறை நிலம் மற்றும் வீடு வாங்குபவர்கள் பதிவுத்துறை அலுவலகம் செல்லாமல் இணையத்திலேயே பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப்பதிவு திட்டம்’ ஆக.17-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இத்திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் சென்னை ரிப்பன் கட்டடத்தில் நேற்று (23.7.2026) நடைபெற்றது.

இதில் பதிவுத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன், தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகையில்லாப் பதிவு முறை தொடர்பான செயல்விளக்கம் வழங்கப்பட்டது. மேலும், வங்கியாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டட விற்பனையாளர்கள் முன்வைத்த சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பொதுமக்களுக்கு அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நோக்கில் அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்பங்கள் திறம்பட பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக நிலம் மற்றும் வீடுகளை முதல்முறை வாங்குபவர்களின் ஆவணங்கள் ஆக.17 முதல் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

பாதுகாப்பான முறை

இந்த நடைமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் பாதுகாப்பான முறையில் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இதனால் மக்களின் நேரமும், பயணச்செலவும் குறைவதுடன், பதிவு செயல்முறையின் தரமும் மேம்படும்.

இதுதவிர கட்டுமான நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோர் இந்த புதிய நடைமுறையின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.

தற்போது அளிக்கப்படும் பயிற்சிகளால் பதிவு ஆவணங்களில் ஏற்படக்கூடிய பிழைகள் குறைந்து, பதிவு செயல்முறை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *