புதுடில்லி, ஜூலை 24 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டங்களால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் (23.7.2026) 4 ஆவது நாளாக முடங்கின.
மழைக்காலக் கூட்டத்தொடரின் 4 ஆவது நாளான நேற்று (23.7.2026) , மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் விவகாரத்தையும், ஒன்றிய கல்வி அமைச்சரின் பதவி விலகலையும் வலியுறுத்தி பதாகைகளுடன் அவையின் மய்யப்பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
அவைக்குத் தலைமை தாங்கிய திலீப் சைகியா, அவையின் கண்ணியத்தைக் காக்குமாறும் நடவடிக்கைகளுக்கு இடை யூறு விளைவிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாததால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதே போன்ற சூழலே நீடித்தது. அவை கூடிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய அமைச்சர் பிரதான் பதவி விலகுவது குறித்து அரசிடமிருந்து தெளிவான அறிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்களவைத் துணைத் தலைவரின் வேண்டுகோள்!
தொடர்ந்து நடந்த அமளியால் அவை பிற்பகல் 2 மணி, 3 மணி என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், ‘‘இன்றோடு 4 நாள்கள் ஆகிவிட்டன; குறைந்தபட்சம் மசோதாக்கள் மீதாவது விவாதம் நடத்த அவையைச் செயல்பட விடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், போராட்டம் தொடர்ந்ததால் அவையை இன்று வரை ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.
அவை நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுகதா ராய் மற்றும் மஹூவா மொய்த்ரா ஆகியோரும் மக்களவைத் தலைவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை:
காங்கிரஸ் உரிமை மீறல் அறிவிக்கை
காங்கிரஸ் உரிமை மீறல் அறிவிக்கை
பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் மிகக் கடுமையாகக் கையாண்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சத்ராசல் மைதானத்திற்குக் கொண்டு சென்றதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மீறப்பட்ட தாகக் கூறி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஏதென் மக்களவைப் பொதுச்செயலாளரிடம் அதிகார உரிமை மீறல் தீர்மானத்திற்கான அறிவிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆளும்கட்சி – எதிர்க்கட்சி எம்பிக்கள் மோதல்
நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அரசியல் களம் சூடாக இருந்தது. நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதேவேளையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரண்டு, வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேவையின்றி அரசியல் ஆக்குவதாகக் குற்றம்சாட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
