சென்னை, ஜூலை 20- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், ஒன்றிய அரசின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (19.7.2026) நடைபெற்றது.
பிறகு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங் களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
டி.ஆர்.பாலு
அப்போது டி.ஆர்.பாலு கூறியதாவது: நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது எந்த அடிப் படையில் அமையப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான எந்தவொரு தகவலையும் ஒன்றிய அரசு இதுவரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கையை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்ட மிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் யாவும் அனுமானங்களின் அடிப்படையிலானவை; அதிகாரப்பூர்வ மானவை அல்ல.
அரசு சொல்லாதவரையில் நாங்கள் முடிவு எடுக்க முடியாது. அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.
இதற்கான நாடாளுமன்ற ஒத்தி வைப்புத் தீர்மான அறிவிக்கை முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது. அவையில் இதுகுறித்து பேசுவதற்கு அனுமதி கோருவோம். அவைத் தலைவர்கள் அனுமதி மறுத்தாலும், தொடர்ந்து வற்புறுத்தி இப்பிரச்சினையை எழுப் புவோம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பின்பும் கூட, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கு ஒவ்வொரு முறையும் கருநாடக அரசின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை நீடிக்கிறது. காவிரி மேலாண்மைக் குழு கூடி முடிவெடுத்தாலும் கருநாடகம் சரிவரத் தண்ணீர் திறப்பதில்லை.
எனவே கருநாடக அரசு மேகதாது வில் அணை கட்டுவதைத் தடுக்க தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசுவோம். உடனடியாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப் பினர்கள் தனித்தனியாக அமருவதற்கான அதிகாரப்பூர்வ இருக்கை ஒதுக்கீட்டு விவரங்கள் நேற்று (நேற்று முன்தினம்) அதிகாலைதான் வந்து சேர்ந்தன. இதற் கான கோரிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே நாங்கள் சமர்ப்பித்திருந்தோம்.
மாநில சுயாட்சி, தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ உரிமை, காவிரி விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி உரிமை ஆகிய எதிலுமே திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி சிவா
திருச்சி சிவா பேசுகையில், “தொகுதி மறுவரையறை தொடர்பாக தவறான தகவல் பரவியுள்ளது.
தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் வகையில் எந்த வடிவத்தில் இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டாலும், அதை திமுக எதிர்க்கும். மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப் பட்டால், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களிலோ அல்லது நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பின் போதோ தென் மாநிலங்களின் குரலுக் கான மரியாதையும் முக்கியத்துவமும் இல்லாமல் போய்விடும்.
தற்போது இருக்கும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், அதே எண்ணிக்கைக்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும். ஆனால் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த மசோதா குறித்து அரசுத் தரப்பில் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை; எந்தவிதக் குறிப்புகளும் எதிர்க்கட்சிகளுக்குத் தரப் படவில்லை” என்றார்.
