சென்னை, ஜூன் 11 பெண்களுக்கு எதிராக உடல் ரீதியாகவும், இணைய வழி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மன ரீதியாகவும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை காவல்துறை தலைவர் (அய்ஜி) பவானீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (10.6.2026) செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை தலைவர் பவானீஸ்வரி கூறியதாவது:
நேரடி விழிப்புணர்வு: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அய்டி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் நேரடியாகச் சென்று பெண்களுடன் பேசுவார்கள். அவர்களுக்குத் தேவையான தைரியத்தை ஏற்படுத்துவார்கள். காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக் களையும் ஒருங்கிணைத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். தமிழ்நாடு காவல்துறைக்கென தனிச் சிறப்பான 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இது அனைத்து மகளிர் காவல்துறையினருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
நடவடிக்கை
“தமிழ்நாட்டின் அனைத்து இடங்களையும் பெண்களுக்கு முழு மையான பாதுகாப்பான இடமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. பெண்களுக்கு உடல் ரீதியாகவோ அல்லது இணைய வழி மூலமாகவோ குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று சிங்கப் பெண் அதிரடிப்படை காவல்துறை தலைவர் பவானீஸ்வரி கூறினார்.
