‘திராவிடர் நிறத்தை’ ஓங்கி ஒலித்த மகளிர்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

நான், ஜூலை 14ஆம் தேதி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘ஆதி காலத்து அலங்கார மாளிகை’ எனும் வர்த்தக நிறுவனத்திற்கு என் வாழ்விணையர், மகள் ஆகியோருடன் பொருட்கள் வாங்க சென்று இருந்தேன். உள்ளே பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு, துணி விற்பனைப் பிரிவுக்கு வந்து ஆடைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அருகே புத்தாடைகள் எடுக்க வந்த இரண்டு மகளிருக்கு அந்தப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஆடை ரகங்களை எடுத்துக்காட்டி, அதற்கான விலைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த இரு பெண்களில் ஒருவர் ‘‘இந்த நிறம் நன்றாக இருக்கிறது, துணியும் நன்றாக இருக்கிறது, உனக்குப் பொருத்தமாக இருக்கும்   – இதை எடுத்துக் கொள்ளலாம்’’ என்று தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணிடம் கூறினார்.

அதற்கு அவர் ‘‘இது என் நிறத்திற்கு (அவர் சிகப்பாக இருந்தார்) சரியாக இருக்குமா?’’ என கேட்டார். அப்போது, அங்கு அவர்களுக்கு உதவியாக இருந்த அந்தக் கடையின் பெண் ஊழியர்  ‘‘உங்கள் (சிகப்பு) நிறத்திற்கு இந்த புத்தாடை சரியாக இருக்காது, என்னைப் போன்று கருப்பாக இருப்பவர்களுக்குத் தான் பொருத்தமாக இருக்கும்’’ என்றார்.

உடனடியாக துணி வாங்க வந்த அந்தப் பெண் ‘‘கருப்பு நிறம் என்பது ஏன் அழகு இல்லையா? உங்களுக்கு ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை!’’ என சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாது; உடனடியாக,  ‘‘இது இந்தியர்கள் நிறம்’’ என்று குறிப்பிட்டவர், ஒரு சில நொடிகள் கூட தாமதிக்காமல் அதனை மாற்றிக் கொண்டு ‘‘மன்னிக்கணும்… மன்னிக்கணும்… இது திராவிடர்களின் நிறம்’’ என்று உரக்க ஓங்கி ஒலித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் ‘‘ஆமாம்!’’ என்று கூற, கடையின் சக ஆண் ஊழியர்கள் அதனை ஆமோதித்தனர்.

அருகில் இருந்து இதனை நான் பார்த்துக் கொண்டும்,   கேட்டு (ரசித்து)க் கொண்டுமிருந்த எனக்கு ‘‘ஆகா, அருமையாகச் சொன்னாரே, உடனடியாக அவரை நாம் பாராட்டி விட வேண்டும்’’ என எனக்குத் தோன்றியது. காரணம் என்னவென்றால், அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை’ நாளிதழில் ஆசிரியராக இருந்தபோது அவர் எழுதிய சிறப்பான ஒரு தலையங்கத்தை படித்துவிட்டு அய்யா தந்தை பெரியார் அவர்கள் மாடிக்கு படியேறிப் போய் அண்ணாவை பாராட்டியதாகவும் அதற்கு அண்ணா அவர்கள் ‘‘ஏன் படியேறி  வருகிறீர்கள், நாளை கூட நான் நேரில் வரும்போது பாராட்டியிருக்கலாமே?’’ என்று கூறிய போது, ‘‘இல்லை… இல்லை… பாராட்ட வேண்டியதை உடனடியாக பாராட்டி விட வேண்டும்’’ என்று அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் வாழ்வியல் சிந்தனைகள் தொடரிலும் குறிப்பிட்டு இருக்கிறார். அதனை நான் கேட்டும், படித்தும், உள் வாங்கியவன் என்ற காரணத்தினால் உடனடியாக நான் அங்கு நான் நின்ற இடத்தில் இருந்து விரைந்து போய் அவர்களிடம் ‘‘மிகச் சரியாக சொன்னீர்கள்! கருப்பு என்பது திராவிடர்கள் நிறம்… உறுதியாக சொல்லி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி, பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…!’’ என்று கூறிவிட்டு அந்த கடையின் பணிப்பெண்ணிடம் ‘‘கருப்பு நிறம், என்பதை நீங்கள் தாழ்வாகப் பார்க்க வேண்டாம் கர்வமாகவும் கம்பீரமாகவும் ‘திராவிடர் நிறம்’ என்பதில் நீங்கள் மகிழ்ச்சியோடு இருங்கள்’’ என்று சொன்னேன்.

அவர்கள் கைதட்டி மகிழ்ச்சியோடு ‘‘ஆமாம், ஆமாம்’’ என்று ஆமோதித்தார்கள். மன நிறை வோடு அங்கிருந்து நான் கிளம்பினேன்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் திராவிட இயக்கம், கொள்கைகள் மகளிர் மத்தி யிலும் திராவிடர்கள் நிறம் கருப்பு என்பதனை பதிய வைத்திருப்பது மன நிறைவைத் தந்தது.

– மன்னை சித்து, மன்னார்குடி – 1

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *