புதுடில்லி, ஜூலை 15 ஹிந்தி நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் வகையில் பேசியது தொடா்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிய தற்காக, நகைச்சுவைப் பேச்சாளரும் யூடியூபருமான சமய் ரெய்னா, 4 இன்ப்ளுயன்சா்களுக்கு (சமூக ஊடகத்தில் தங்கள் செல்வாக்கு மூலம் விளம்பரப்படுத்துவோர்) தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அவமதிப்பு
உச்சநீதிமன்றத்தில் க்யூா் எஸ்எம்ஏ இந்தியா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இண்டியாஸ் காட் லேடன்ட் என்ற ஹிந்தி நிகழ்ச்சியை சமய் ரெய்னா தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் முதுகுத்தண்டு தசைச் சிதைவு (எஸ்எம்ஏ) நோய்க்கான சிகிச்சைக்கு ஏற்படும் பெரும் செலவு குறித்து அவா் பொறுப்பற்ற, காயப்படுத்தக் கூடிய கருத்துகளைத் தெரிவித்து அத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை இழிவுபடுத்தும் வகையிலும் அவா் கேலி செய்தார்
இதேபோல தங்கள் நிகழ்ச்சிகளில், குறிப்பாக இண்டியாஸ் காட் லேடன்ட் நிகழ்ச்சியில் விபுன் கோயல், பல்ராஜ் பரம்ஜீத் சிங் கய், சோனாலி தாக்கா், நிஷாந்த் ஜகதீஷ் தன்வா் ஆகிய 4 இன்ப்ளுயன்சா்களும் மாற்றுத்திறனாளிகளை ஏளனமாகப் பேசியுள்ளனா். மாற்றுத் திறனாளி களின் வாழ்வுரிமை, கண்ணியத்துக்கு எதிரான இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனுவை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டவா்களை ஏளனம் செய்து பேசியதற்காக தங்கள் நிகழ்ச்சிகளில் சமய் ரெய்னா, விபுன் கோயல், சோனாலி உள்ளிட்ட 5 போ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதுகுத்தண்டு தசைச் சிதைவு போன்ற அரிய நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு நிதி திரட்டும் நோக்கில், தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அவா்கள் மாற்றுத் திறனாளிகளை அழைக்கலாம்’ என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகி யோர் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று (14.7.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்ற உத்தரவுக்கு ஏற்ப, தங்கள் நிகழ்ச்சிகளுக்கு மாற்றுத் திறனாளிகளை அழைக்கவில்லை என்று க்யூா் எஸ்எம்ஏ இந்தியா அறக் கட்டளைத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகை யில், ‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறியதற்காக சமய் ரெய்னா, விபுன் கோயல் உள்பட 5 பேருக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் சமய் ரெய்னா உத்தரவை பின் பற்றத் தவறியதுடன், நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை பின்பற்றத் தவறினால், அபராதம் ரூ.30 லட்சமாக அதிகரிக் கப்படும்’ என்று எச்சரித்தனா்.
