ஒற்றையாட்சி என்னும் மத யானையின் முன்னறிவிப்பே விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான்!

4 Min Read

அடுத்த ‘அஸ்திர’த்தைக் (ஆயுதத்தை) கையில் எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஒன்றிய அரசு. “விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான்!” கடந்த ஆண்டு டிசம்பர் 15 அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவுதான்! என்றாலும், இந்த மழைக்காலக் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்று முனைப்போடு காய்களை நகர்த்துகிறதாம் ஒன்றிய அரசு.

என்ன செய்யப் போகிறது இந்தச் சட்டம்? உயர்கல்வி ஒழுங்காற்று அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) உள்ளிட்ட அனைத்தையும் ஒரே சாக்கில் கட்டி முடிச்சுப் போடப் போகிறது. அந்தச் சாக்கைக் கொண்டுபோய் ஒன்றிய அரசிடம் கொடுக்கப் போகிறது. அவ்வளவுதான்!

இந்தச் சட்ட வரைவில் உயர்கல்வி ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் அதிகப்படியான அதிகாரங்களைக் குவிக்கும் பிரிவுகளாக 45, 47 ஆகியவை அமைந்திருக்கின்றன. பிரிவு 45-இன் மூலம் ஒன்றிய அரசு விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டானுக்கும், அதற்குள் கொண்டுவரப்பட்ட உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் கட்டாயமான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தைப் பெறும்.

அந்த உத்தரவுகளில் ஒன்றிய அரசுக்கும் ஒழுங்காற்று அமைப்புகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அல்லது சர்ச்சைகள் ஏற்பட்டால், அதில் ஒன்றிய அரசின் முடிவே இறுதியானது என்றும் உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்தச் சட்ட வரைவின் பிரிவு 47, இந்த ஆணையத்தையோ, உயர்கல்வி ஒழுங்காற்று அமைப்புகளையோ ஆறு மாதங்கள் வரை இடைநிறுத்தவும், அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தித் தன்வசப்படுத்தவும் ஒன்றிய அரசுக்கு அவசர அதிகாரங்களை வழங்குகிறது; அத்துடன், இந்தக் கால அளவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான வாய்ப்பையும் இது அளிக்கிறது. ஆக மொத்தம் ஓராண்டுக்கு முழுமையான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசால் வைத்துக் கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி, ஒழுங்குமுறை, அங்கீகாரம் வழங்குதல், தரநிலைகள் நிர்ணயித்தல் போன்ற பணிகளிலும், வி.பா.சி.அ. ஆணையத்தின் தலைவர், பிற அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்களை நியமிப்பதற்கான செயல்முறை, அதற்கான தேடல், தேர்வுக் குழு குறித்த விதிகள் உருவாக்குவதிலும் ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை பிரிவுகள் 18 முதல் 21 வரை தருகின்றன.

இந்த சட்ட வரைவு குறித்து பரிசீலிக்க, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் புரந்தேஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் பல்வேறு மாநிலங்களும் எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. அதில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட பா.ஜ.க. கூட்டணியினர் ஆளும் மாநிலங்களும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மையும் சுதந்திரமும் இல்லை; தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவில் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்களே ஆதிக்கம் செலுத்துவதும், அதில் ஆசிரியர்கள், பல்கலைக்கழகச் சங்கங்கள், மாநில அரசுகள், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை; அதுமட்டுமின்றி, ஒன்றிய அல்லது மாநில அரசு அதிகாரியைத் தலைவராக நியமிப்பதற்கு யு.ஜி.சி.யில் அவ்வாறு நியமிப்பதற்கு முடியாத வகையில் சட்டப் பிரிவு உண்டு; ஆனால்,
வி.பா.சி.அ. சட்டவரைவு அதனைத் தடை செய்யவில்லை. எனவே, ‘கல்வியாளர்கள் அல்லாத, தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை ஒன்றிய அரசால் தலைவராக்கிவிட முடியும் ஆபத்து உண்டு’ என்று பல மாநிலங்களும், அதன் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதைவிட மோசம் என்ன தெரியுமா? ஒழுங்காற்றுதல், அங்கீகாரம் வழங்குதல், தர நிர்ணயம் போன்றவற்றுக்கான அமைப்புகளில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர் மட்டும் பிரதிநிதியாக இருப்பாராம். அவரும் சுழற்சி முறையில் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவாராம். ஒட்டுமொத்தமாக மாநில அரசுகளின் குரலை, கல்வித் துறையில் நசுக்கும் வேலை இது!

மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு பிரச்சினையில் ஒன்றிய அரசுக்கு  அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இச்சட்டத்தின் பிரிவு 4 அமைந்திருப்பதும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், வரைமுறைப்படுத்தவும், கலைக்கவும் உள்ள அதிகாரங்களை ஒன்றிய அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் காங்கிரசின் திக்விஜய் சிங்.

இப்போது இந்த எதிர்ப்பு, அய்.அய்.டி, அய்.அய்.எம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்தும் கிளம்பியிருக்கிறது. இந்த ‘விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டானி’லிருந்து தங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டுமாம். அவை மட்டும் எப்போதும் நெய்யில் பொறித்தவை போலும்! (முன்பு, நீட் தேர்விலிருந்து, எய்ம்ஸ் உள்ளிட்ட ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருந்ததைப் போல.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அவசர நிலைக் காலத்தில் ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘ஒழுங்காற்றுகிறோம், நெறிப்படுத்துகிறோம், தரம் உயர்த்துகிறோம்’ என்று விதம் விதமாகக் காரணம் சொல்லி, அதை ஒன்றிய அதிகாரத்துக்குட் பட்டதாக ஆக்குவதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு சூழ்ச்சி களுள் முத்தாய்ப்பான ஒன்றுதான் இந்தச் சட்ட வரைவும்.

நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. இந்தச் சட்டத்தின் ஆபத்தையும், ஒற்றையாட்சியைக் கொண்டுவருவதற்கான முன்னறிவிப்பாக வரும் இத்தகைய மணியோசைகளையும் அடையாளம் கண்டு, கடும் கண்டனம் எழுப்பி இந்தச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *