சென்னை, ஜூலை 10 தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே நிகர்நிலை பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்தைப் பெற்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்க வேண்டிய 650 எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் பறிபோகும் நிலை உருவாகி, ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்ெகனவே நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 கல்லூரிகள் என மொத்தம் 6 கல்லூரிகள் இந்த தகுதியை பெறவுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற அனுமதி (NOC) கோரி இக்கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகியபோது, அரசிடமிருந்து உரிய நேரத்தில் பதில் வராததால், அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி சாதகமான உத்தரவைப் பெற்றுள்ளனர். மேலும், பெரம்பலூரைச் சேர்ந்த 2 தனியார் கல்லூரிகள் மாநில அரசை அணுகாமலேயே நேரடியாக இந்த தகுதியை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும்போது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அவை முழுமையாக விடுபடுகின்றன. இதனால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்:
இட ஒதுக்கீடு கிடையாது: நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பாதிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடும் இக்கல்லூரிகளில் இனிப் பொருந்தாது.
இடங்கள் இழப்பு: இதன் காரணமாக, நடப்பு ஆண்டிலேயே சுமார் 461 முதல் 650 வரையிலான மருத்துவ இடங்களை மாநில அரசு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் விளக்கம்: “இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோ சித்து வருகிறோம். ஒன்றிய அரசிடமும் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு கல்வி மற்றும் மருத்துவத்தை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான்” என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும் அடுக்கடுக்கான கேள்விகள்: நிர் வாகத் தவறா? திட்டமிட்ட அலட்சியமா?
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறினாலும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிகளின்படி 60 நாட்களுக்குள் ஏன் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விவகாரத்தில், 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் கோப்புகளை பரிசீலிக்காத நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு?
எந்தெந்த உயர் அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்?
இது வெறும் அதிகாரிகளின் அலட் சியமா? அல்லது தனியார் நிறுவனங் களுக்கு சாதகமாக செயல்பட விடுக்கப் பட்ட அரசியல் அழுத்தமா?
வலுக்கும் கோரிக்கை
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது மட்டுமே இதற்கு தீர்வாகாது. ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த இந்த விவகாரத்தில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நிர்வாகப் பிழையின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிப்படையான விசாரணை மூலம் அரசு வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
