விழுப்புரம், ஜூலை 10 ‘‘சமூகநீதித் துறை என்று பெயர் வைத்தது கெட்ட நோக்கம் அல்ல என்றாலும்– திராவிடர் என்பது வரலாற்றுப் பெயர் – தவிர்க்கப்படக் கூடாதது! துணைவேந்தர் தேர்வுக் குழுவில் 5 பேர் என்பது தவறு – அதனை ஏற்கக்கூடாது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விழுப்புரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டி!
விழுப்புரத்தில் நேற்று (9.7.2026) காலை நடை பெற்ற மணவிழாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: ஆதிதிராவிடர் துறையை, சமூகநீதித் துறை என்று மாற்றியிருக்கிறதே, தமிழ்நாடு அரசு அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட, ஜாதிப் பிரிவாக இருக்கிறது. அதனால், மற்றவர்களையும் அதில் இணைக்க முடியாத ஒரு சூழல் உள்ளது என்று காரணம் சொல்லப்படுகிறது.
ஆனால், ஆதிதிராவிடர் என்ற சொல்லுக்கு விரிவான பொருள் உண்டு. அயோத்தியாதாசர் போன்றவர்களே கூட, ‘திராவிடம் என்பது ஓர் அடையாளம்’ என்று சொன்னார்கள்.
சமூகநீதி, முதலில் ஆதிதிராவிடர்களுக்குத்தான் வழங்கப்படவேண்டும். ஏனென்றால், சமூக அநீதியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிதிராவிடர்கள் என்பது வரலாறு.
நீண்ட காலமாக இருக்கின்ற
ஒரு வரலாற்றுப் பெயர்
ஒரு வரலாற்றுப் பெயர்
சமூக அநீதியைப் போக்குவதற்காக, சமூகநீதித் துறை என்று பெயர் வைத்துள்ளார்கள். அதற்குக் கெட்ட நோக்கம் கிடையாது என்றாலும்கூட, அது பரவலான பொருள் உடையது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை என்று தனியாக இருக்கிறது. அதுவும் சமூகநீதிதான். அதுபோல, பெண்களுக்குப் பாலியல் நீதி வந்தாலும், அதுவும் சமூகநீதிதான்.
‘சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் வைத்தபோது, அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் ஆகியவையும் அடங்கும் – அது வேறு.
ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கும் சொல் அல்ல. சமூக அநீதியினால், ஒடுக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதாகும்.
எனவே, ‘திராவிடர்’ என்பது தவிர்க்கப்படக் கூடாது. ஏனென்றால், அது நீண்ட காலமாக இருக்கின்ற ஒரு வரலாற்றுப் பெயர்.
ஆகவே, இந்தச் சிறு குழப்பங்கள் எல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.
செய்தியாளர்: துணைவேந்தர் தேர்வுக் குழுவில், ஏற்கெனவே இருந்த தி.மு.க. அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைந்திருந்தது. இப்போது இருக்கின்ற த.வெ.க. அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்தி ருக்கிறதே?
ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி சட்டம் உண்டு;
தனித்தனி விதிகள் உண்டு
தனித்தனி விதிகள் உண்டு
தமிழர் தலைவர்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பல்கலைக் கழகங்களுக்கு ‘அட்டானமி ஆஃப் தி யுனிவர்சிட்டி’ உண்டு. அதாவது முழு சுதந்திரம், அந்தந்தப் பல்கலைக் கழகங்களுக்கு உண்டு.
ஏனெனில், ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி சட்டம் உண்டு; தனித்தனி விதிகள் உண்டு. எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு ஒன்று என்று சொல்ல முடியாது.
பல்கலைக் கழகங்களுக்கு நிதியே கொடுக்காதவர்கள், மானியக் குழு என்ற பெயரால், உள்ளே நுழைகிறார்கள். அது தவறு, அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம் – அதனை ஏற்கக் கூடாது.
செய்தியாளர்: த.வெ.க. அரசின் ‘குதிரைப் பேரம்’பற்றி உங்கள் கருத்து என்ன?
மக்களின் வாக்கு வாங்கிய மனிதர்களுக்கு நல்ல விலை!
தமிழர் தலைவர்: முன்பெல்லாம் மாட்டுச் சந்தை உண்டு; ஆடு வியாபாரம் உண்டு. இப்போதுதான் அண்மையில், குதிரைச் சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. குதிரை சந்தை என்பது அரேபியா போன்ற நாடுகளில் நடைபெறும். ஆனால், இப்போது மலிவாக, எல்லோரும் பார்க்கக் கூடிய அளவிற்கு, வாக்களித்த மக்களை ஏமாற்றக்கூடிய அள விற்கு, புதிய வளர்ச்சியாகத் தமிழ்நாட்டில், ‘குதிரைச் சந்தை’ நடைபெறுகிறது.
குதிரைச் சந்தையில், குதிரைகள் நல்ல விலைக்குப் போகும். இப்போது அதிகமான விலை யாருக்கு என்று சொன்னால், மனிதர்களுக்குத்தான் – குறிப்பாக மக்களின் வாக்கு வாங்கிய மனிதர்களுக்கு நல்ல விலை!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
