ராமன் கோயிலில் நடந்தது ஊழல் இல்லையாம் – திருட்டாம்!

மின்சாரம்

பாபர் மசூதியை இடித்து அயோத்தியில் ராமன் கோயிலை கட்டிய கூட்டம் இந்தியாவின் ஆட்சியைத் தன் அக்குளில் வைத்துள்ளது.

இப்பொழுது அந்த ராமன் கோயிலில் நடைபெற்றுள்ள ஊழல்களும், திருட்டுகளும், மோசடிகளும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. வகையறாக்களுக்குக் கிலி பிடிக்கச் செய்துவிட்டது.

அதற்கு அத்தாட்சி வேறு எங்கும் போக வேண்டாம். இந்த வார ‘துக்ளக்’ இதழின் (15.7.2026) தலையங்கத்தின் ஒப்பாரியே போதுமானது. அயோத்தியில் ராமன் கோயிலில் நடைபெற்று வரும் மோசடிகள், தில்லுமுல்லுகள், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி ஆட்சியைக் குடை சாய்த்து விடுமோ என்று ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள் பதறுகிறார்.

ராமராஜ்யத்தைக் கொண்டு வருவோம் என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதிக்கு, இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஊடகங்கள் எழுதுகின்றன என்று பிலாக்கணம் பாடுகிறார்.

திருடர்களின் குகை, கோயில் என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள உறைகிரி குகைகளைக் குறிப்பிட்டவர் புகழ்பெற்ற பிரிட்டீஷ் தொல்பொருள் ஆய்வாளர் சர்.அலெசாண்டர் கன்னிங்ஹாம்

இப்பொழுது அது பரவலாகிவிட்டது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்பட்டதற்கு ஆன செலவு ரூ.3264 கோடி என்று சம்பந்தப்பட்ட அறக்கட்டளை கூறுகிறது.

இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்டுள்ள அந்த ராமன் கோயிலில் நடக்கும் பணம், காணிக்கை, நகைகள் மோசடி பற்றி ஒவ்வொரு நாளும் மந்தை மந்தையாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “கருப்புச் சட்டைக்காரர்கள் கோயில்கள் பற்றியும், கடவுள்கள் பற்றியும் சொன்னது சரியாகத் தானிருக்கிறது” என்று பக்தர்களும் பேசும் அளவுக்கு விஷயம் புரையோடி விட்டது.

“வந்தது – வந்தது ஆபத்து – இந்தக் குழவிக் கற்களையும், பித்தளைகளையும் கடவுள்கள் என்று சொல்லி, புராணக் கட்டுக் கதைகளை எழுதி வைத்து பக்திப் போதையில் சொக்கிய மக்களைச் சுரண்டிக் கொழுத்த பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுந்து விட்டதே” என்று நடு நடுங்கி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதை இவ்வார ‘துக்ளக்’ தலையங்கத்தைப் படிப்பவர்களுக்குப் ‘பேஷா’ புரியும்.

அயோத்தி கோயிலில் நடந்தது வெறும் திருட்டு தானாம் – ஊழல் இல்லையாம்.

“அது ஒரு திருட்டு. பணத்தைக் கையாளும் கீழ்நிலை ஊழியர்கள் எளிதாகச் செய்யக்கூடிய, அப்படி அவர்கள் செய்த திருட்டு இது. இதில் உயர் மட்டம் ஈடுபட்டிருந்தால் தான் அது ஊழல்”. உயர்மட்டம் ஈடுபட்டு இருந்தால்தான் ஊழலாம். இந்த மோசடியில் கூட உயர்மட்டம் கீழ்மட்டமோ! கைது செய்யப்பட்ட எட்டு பேரில் மிஸ்ராக்கள் தானே அதிகம். இது மேல்மட்டமா, கீழ்மட்டமா? குருமூர்த்திக்குத் தான் வெளிச்சம்!

நாணயமின்றி இப்படியெல்லாம் எழுதக் கூடிய ‘துக்ளக்’கை என்னவென்று சொல்லுவது!

ஊடகங்களின் உதவியுடன் அரசியல் தலைவர்கள் திருட்டை ஊழல் போல் சித்தரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் புலம்புகிறார் திருவாளர் குருமூர்த்தி.

எவ்வளவு சாமர்த்தியமாக எழுதினாலும், பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்களே. அதற்கு ஆதாரம் இதே ‘துக்ளக்’ தலையங்கத்தில்…

“ஒரு ரூபாய் திருடப்பட்டாலும், அது சிறீராமனுக்குச் செய்யப்பட்ட துரோகம்” என்று எழுதி இருப்பதும் சாட்சாத்  இவரே!

ஒரு கேள்விக்குத் ‘துக்ளக்’ கூட்டம் பதில் சொல்லட்டும். அதன் கூற்றுப்படியே ராமன் கோயிலில் திருடியவர்கள் ராமப் பக்தர்கள் தானே! கடவுளை மறுக்கும் நாத்திகர்கள் அல்லவே!

‘துக்ளக்’ வகையறாக்களுக்கு மிகவும் பிடித்தவரான காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டினால் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.

“பத்துப் பதினைந்து வருடங் களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகின்றது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மென்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட, துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்த போதும், பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன”.

(காஞ்சியிலே கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி பேசிய பேச்சு இது (‘தினமணி’, 7.7.1976)

‘துக்ளக்’ குருமூர்த்தி தமது படுக்கை அறையில் கூட காஞ்சி மகா பெரியவாள் சந்திரசேகேரேந்திர சரஸ்வதியின் படத்தைத்தான் மாட்டியிருப்பதாக அவரே எழுதி இருக்கிறார் – அதாவது தூங்கி எழுந்தவுடன் அந்தப் பெரியவாள் முகத்தில் தான் விழிக்க வேண்டுமாம்.

அத்தகு பெரியவாள் என்ன சொல்லுகிறார்?

“நம் தேசத்தில் கூட பண்புக் குறைவான போக்கு – கிளர்ச்சி, டெமான்ஸ்ட்ரேஷன்கள் புரட்சி ஆகிய எல்லாம் கடந்த 40, 50 வருஷங்களாகத்தான் உண்டாகி இருக்கின்றன. அதாவது மற்ற தேசங்கள் மாதிரி நாமும் வெளியில் சமத்துவம் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்த பிறகுதான் உண்டாகி இருக்கின்றன.” (‘கல்கி’, 4.4.1976)

புரிகிறதோ! நம் நாட்டில் பண்பு குறைந்து போனதற்கே காரணம் சமத்துவத்துக்காகப் போராடுவதுதானாம்.

இவர்தான் குருமூர்த்திகளுக்கு – மகா பெரியவாள்!

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ராமன் கோயில் கட்டி பக்திப் பரவசத்தை ஊட்டும் கூட்டம் பகவான்(?)  ராமன் கோயிலையே ஆட்டைப் போடுகின்றனவே – இதற்கு என்ன பொருள்?

(வளரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *