விரைவுத் திட்டத்தில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார்!

2 Min Read

சிவகங்கை, ஜூலை 11– சிவகங்கை மாவட்டத்தில் விரைவுத் திட்டத்தில் (தட்கல்) விண்ணப்பித்து 6 மாதங் களாகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இலவச விவசாய மின்சாரத்துக்கு விரைவுத் திட்டத்தில் (தட்கல்) ஆண்டு தோறும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணைப்புகளை மின்வாரியம் வழங்குகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 2025-2026-க்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டன.

இதில் மாநிலம் முழுவதும் 47,554 விவசாயிகள் விண்ணப்பம் செய்தனர். அவர்களிடமிருந்து 5 ஹெச்.பி. மோட்டார் திறனுக்கு ரூ.2.50 லட்சம், 7.5 ஹெச்.பி-க்கு ரூ.2.75 லட்சம், 10 ஹெச்.பி.-க்கு ரூ.3 லட்சம், 15 ஹெச்.பி-க்கு ரூ.4.5 லட்சம் என வைப்புத் தொகைகள் பெறப்பட்டன.

இத்திட்டத்தில் விண்ணப்பித்த 47,554 பேரில் 10,000 பேருக்கு மட்டும் முதல்கட்டமாக இணைப்புக் கொடுக்க மின்வாரியம் உத்தர விட்டது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 1,179 பேரில் 229 பேருக்கு இணைப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதில், இதுவரை 124 பேருக்கு மட்டுமே இணைப்பு கொடுக்கப்பட்டன. மேலும், 105 பேருக்கு இணைப்புகள் கொடுக்கவில்லை. அதுபோக பணம் செலுத்திக் காத்திருக்கும் 950 பேருக்கும் இணைப்புக் கொடுப்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

இதனால், ஒவ்வொரு விவசாயியும் பல லட்சம் ரூபாய் வரை வைப்புத்தொகை செலுத்தி 6 மாதங்களாக இணைப்புக் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டியைச் சேர்ந்த விவசாயி அப்துல் ரகுமான் கூறியதாவது: விரைந்து மின் இணைப்பு கொடுப்பதற்காகத்தான் விரைவுத் திட்டத்தை (தட்கல்) மின்வாரியம் அறிமுகப்படுத்தியது.

இதை நம்பி விவசாயிகள் பலர் கடன் வாங்கி வைப்புத் தொகை செலுத்தினர். அருகிலேயே மின்கம்பங்கள் இருந்தால் 15 நாட்களிலும், புதிதாக மின்கம்பங்கள் ஊன்ற வேண்டுமென்றால் 90 நாட்களுக் குள்ளும் இணைப்புக் கொடுக்க வேண்டும்.

ஆனால், 6 மாதங்களாகியும் மின் இணைப்புக் கொடுக்கவில்லை. மின் வாரிய அலுவலகத்துக்கு அவ்வப்போது சென்று அதிகாரிகளிடம் கேட்டால் குறிப்பிட்ட தேதி வரை பதிந்தோருக்கு மட்டுமே இணைப்புக் கொடுப்பதாகக் கூறுகின்றனர். அதிலும் பலருக்கு இணைப்புக் கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் இணைப்புக்காக அலைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி களிடம் கேட்டபோது, ‘மின்வாரிய உத்தரவுப்படி 2025 டிச.18ஆம் தேதி வரை பதிவு செய்த 229 பேருக்கு இணைப்புக் கொடுத்து வருகிறோம். இதுவரை 124 பேருக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பணி தொடர்கிறது.அடுத்தகட்ட அறிவிப்பு வந்ததும் 950 பேருக்கு படிப்படியாக இணைப்புக் கொடுக்கப்படும்,’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *