கரூர், ஜூலை 11- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (10.7.2026) கரூரில் நடைபெற்ற கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலமைச்சரின் இந்த வருகையையொட்டி, அவர் மக்களைச் சந்திக்கும் கலையரங்கம் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஸ்மார்ட் போர்டில் அரசியல் பேச்சு
இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அரசியல் பேச்சை, அந்தப் பள்ளியின் வகுப்பறையில் உள்ள ‘ஸ்மார்ட் போர்டு’ (Smart Board) மூலமாக மாணவர்களுக்கு ஒளிபரப்பியுள்ளனர்.
அரசுப் பள்ளியில் அரசியல் பேச்சு ஒளிபரப்பப்பட்ட இந்த காட்சிப் பதிவு சமூக வலைத் தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானது. இது கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, “அரசுப் பள்ளிகளில் அரசியல் சார்ந்த எந்தவொரு நிகழ்ச்சியையோ, பிரச்சாரங்களையோ நடத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையில், விதியை மீறி முதல்வரின் அரசியல் பேச்சு பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.
அதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி செயல்பட்ட கிருஷ்ணராயபுரம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
