இந்தியாவைக் காக்கும் எச்சரிக்கை மணி

4 Min Read

பாரதிய ஜனதா கட்சி என்பது மற்றுமோர் அரசியல் கட்சி என்ற அளவில் பார்க்கப்படக் கூடியதல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம். ஆர்.எஸ்.எஸ். என்பது வர்ணாசிரமத்தைக் காக்க, ஸநாதனத்தைக் கலாச்சாரமாக முன்னிறுத்தி, ஹிந்து மதம் என்ற பெயரால் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான நெடுங்காலத் திட்டத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் ஒவ்வொரு செயல்பாடும், அவர்களின் நீண்ட காலக் கனவான ஹிந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கித்தான் அமைந்திருக்கும். ஹிந்துராஷ்டிரம் என்பது பார்ப்பன ராஜ்ஜியமே! அதில் சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பின்மை, பகுத்தறிவு, சமத்துவம், ஜனநாயகம் எதற்கும் இடமில்லை.

இவற்றை முன்னிறுத்தியதால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.சால் ஏற்க முடியவில்லை. அதன் ‘குருஜி’ கோல்வால்கர், தனது ஞான கங்கை (Bunch Of Thoughts) நூலில் வெளிப்படையாகவே அதனைக் குறிப்பிடுகிறார்.

“நமது தற்போதைய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், ‘ஒரே சீரான தேசிய இனம்’ என்ற கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நமது நாடு இப்போது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது. முந்தைய நிர்வாக அமைப்பில் வெறும் மாகாணங்களாக இருந்தவை, இப்போது பல தனித்துவமான அதிகாரங்களுடன் கூடிய ‘மாநிலங்கள்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. உண்மையில், கடந்த காலத்தில் நமது ஒற்றைத் தேசிய வாழ்வு பல தனித்தனி அரசியல் அலகுகளாகப் பிளவுபட்டதே, தேசத்தின் சிதைவுக்கும் தோல்விக்கும் வித்திட்டது. தற்போதைய கூட்டாட்சி அமைப்பிலும் அத்தகைய பிளவுக்கான அதே விதைகள் அடங்கியுள்ளன.”

“இதற்காக, நமது நாட்டின் அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி அமைப்பு குறித்த பேச்சுகளை என்றென்றும் கைவிடுவது மிக முக்கியமான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். ‘பாரதம்’ என்ற ஒரே நாட்டின் எல்லைக்குள் இருக்கும் ‘தன்னாட்சி’ அல்லது ‘பாதி தன்னாட்சி’ கொண்ட ‘மாநிலங்கள்’ என்ற நிலையை ஒழித்துக்கட்டி, ‘ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம்’ என்பதை நாம் பிரகடனப்படுத்த வேண்டும். இதன் மூலம், நமது ஒருங்கிணைந்த நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடிய பிரிவினைவாதம், பிராந்தியவாதம், வகுப்புவாதம், மொழிவாதம் அல்லது வேறு ஏதேனும் வகையான அடையாளப் பெருமைகளுக்கு இடமளிக்காத சூழலை உருவாக்க வேண்டும். இந்த ஒற்றையாட்சி முறையை நிறுவும் வகையில் அரசியலமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு மீண்டும் வரைவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம், புவியியல் ரீதியான அருகாமை மற்றும் ஒரே மாதிரியான அந்நிய ஆதிக்கத்தின் காரணமாகத் தற்செயலாக ஒன்றாக இணைக்கப்பட்ட, தனித்தனி ‘இனக்குழுக்கள்’ அல்லது ‘தேசிய இனங்களின்’ தொகுப்பு மட்டுமே இந்தியா என்ற தவறான பிம்பத்தை, ஆங்கிலேயர்களால் பரப்பப்பட்டு, தற்போதைய தலைவர்களாலும் அறியாமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தத் தீய பிரச்சாரத்தை நாம் திறம்பட முறியடிக்க முடியும்…

நம்மை அச்சுறுத்தும் பிளவுக்கான ஆபத்துகளை உணர்ந்து, தவறான புரிதலுடன் எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களை எதிர்கொண்டு, தற்போதுள்ள தவறான கூட்டாட்சி அமைப்பை மாற்றி, ஒரே சரியான அரசாங்க வடிவமான ‘ஒற்றையாட்சி’ முறையை உறுதியான நடவடிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்கிறார் கோல்வால்கர்.

“நமது அரசியலமைப்பில் ‘நமக்கே உரியது’ என்று சொல்லக்கூடியது எதுவும் இல்லை; அது மேற்கத்திய அரசியலமைப்புகளின் ஒரு நகல் மட்டுமே! … ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மை நிர்வகித்து வந்த சட்டங்கள் ‘மனுஸ்மிருதி’யில் இருந்தன” என்று இந்திய அரசியலமைப்புக்குப் பதில் மனுஸ்மிருதியை எடுத்துக் காட்டினார் ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவகர்த்தாவான கோல்வால்கர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் இப்போது ஒப்பு நோக்குங்கள். அவை அனைத்தும் எம்.எஸ்.கோல்வால்கரின் ‘ஞான கங்கை’யிலிருந்து அள்ளித் தெளித்தவை தான்! மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, இந்தியா என்பது பல இனங்களின், பன்மொழிகளின், பன்மதங்களின் கூட்டமைப்பு என்பதை ஒழித்து, ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவருவதற்கான சூழ்ச்சிகளே கடந்த 12 ஆண்டுகளாக நடந்துள்ளவை அனைத்தும்! அதன் உச்சகட்டம் தான் தொகுதி மறுவரையறை என்ற பெயரிலும், நாடாளுமன்ற இடங்களை உயர்த்துதல் என்ற பெயரிலும் கொண்டு வரப்பட்ட சட்ட வரைவுகள்.  அதற்குக் கவசமாகப் பயன்படுத்தப்பட்டதுதான் மீண்டும் கொண்டுவரப்பட்ட (ஏற்கெனவே 2023-இலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது) மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா!

இந்த முகமூடியைக் கிழித்து, அந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்ற நிலையில், அதைத் தராமல், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மசோதாக்கள் அனைத்தையும் தோற்கடித்தனர். ஆனால், எப்படியேனும் அதை நிறைவேற்றிட வேண்டும் என்னும் நோக்கோடு மீண்டும், அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியுள்ள சூழலில், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட சட்டப்படி 33% இடஒதுக்கீடு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக் கூடாது என்றும் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. பா.ஜ.க.வின் அரசியல் கட்சி உடைப்பு முயற்சிகள் வெற்றிபெற்று, அக் கட்சி 2/3 பெரும்பான்மை பலம் பெற்றால், அது இந்திய நாட்டுக்கும், அதன் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பேராபத்துகளை விளைவிக்கும் என்பதைக் கடந்த 3.7.2026 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை தெளிவாக்கும். குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.சால் ஏற்படவிருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அளவில் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின், சமூகநீதியாளர்களின், ஜனநாயகவாதிகளின் கடமையாகும் என்பதைத் தான் திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *