புனே, ஏப்.26 மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (வயது 25). புல் லாங்குழல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசை பள்ளியில் முதுகலை இசைப் படிப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 6-ஆம் தேதி ரேணுகா தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பவுட் காவல்துறையினர் ரேணுகாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேணுகாவின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதன் விவரம் வருமாறு:-
ரேணுகாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. இதற்கு தீர்வு காண்பதற்காக அவர் சமூக வலைதளம் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். சாமியாரான அவர், ‘உன் பிரச்சினைகள் தீர சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரேணுகா, கடந்த 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அந்த சாமியாரின் வங்கிக்கணக்கிற்கு சுமார் ரூ.74 ஆயிரத்தை இணைய தளம் மூலம் அனுப்பி உள்ளார்.
ரேணுகா தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்ட பிறகும், அந்த சாமியார் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், நீ பணம் கொடுக்காவிட்டால் உனக்கும். உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரேணுகா, மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் அடையாளம் தெரியாத அந்த சாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலை மறைவாக உள்ள சாமியாரை பிடிக்க ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயில்
சென்னையில் வாகன ஓட்டிகளுக்காக
40 இடங்களில் ‘பசுமை பந்தல்கள்’ அமைப்பு!

சென்னை, ஏப்.26 தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகளை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் முக்கிய சாலை சந்திப்புகளில் ‘பசுமை பந்தல்கள்’ அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மதிய நேரங்களில் வெயில் உச்சத்தை தொடுவதால், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், வாழ்வாதாரத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். குறிப்பாக டிராபிக் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது, நிழல் இல்லாமல் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘பசுமை பந்தல்’ திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் 8 இடங்களில் மட்டுமே பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கையை உயர்த்தி, சென்னை முழுவதும் 40 முக்கிய இடங்களில் பந்தல்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மே 4-ஆம் தேதி தொடங்கவுள்ள ‘கத்திரி வெயில்’ தாக்கத்திற்கு முன்னதாகவே இந்தப் பணிகளை முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது வரை பின்வரும் முக்கிய பகுதிகளில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன:
வடக்கு உஸ்மான் சாலை அடையாறு சந்திப்பு அண்ணா நகர் 3-ஆவது அவென்யூ வள்ளுவர் கோட்டம் சிக்னல் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள ஈ.வெ.ரா பெரியார் சாலை ஜி.எஸ்.டி சாலை (AGS சந்திப்பு) மூலக்கடை மற்றும் பேசின் பிரிட்ஜ் சாலை
தொழில்நுட்ப மாற்றங்கள்
இந்த பசுமை பந்தல்கள் சாலையின் அகலத் திற்கு ஏற்ப 20 முதல் 40 அடி நீளம் வரை அமைக்கப் படுகின்றன. கடந்த காலங்களில் பலத்த காற்றின் காரணமாக பந்தல்கள் கிழிந்ததை கருத்தில் கொண்டு, இந்த முறை பந்தல்களின் உயரம் சற்று குறைக்கப்பட்டு, உறுதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“சிக்னல்களில் காத்திருக்கும்போது தலைக்கு மேலே நிழல் இருப்பது பெரும் நிம்மதியைத் தருகிறது. வெயிலின் உக்கிரம் தெரியாமல் சிக்னலை கடக்க இது மிகவும் உதவியாக இருக்கிறது” என இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
