செய்திச் சிதறல்கள்….

கடல் கடந்த தமிழ் நாகரிகத்திற்கு மேலும் ஒரு சான்று!

தாய்லாந்தில்
2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை மோதிரம் கண்டெடுப்பு

பெட்சாபுரி,  ஜூலை 8  கடல் கடந்து பரவியிருந்த பண்டைய தமிழர்களின் வணிகம் மற்றும் பண்பாட்டு தடயங்களுக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சான்று கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடந்த அகழாய்வில், 2000 ஆண்டுகள் பழைமையான தங்க முத்திரை மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தொடக்கத்தில் ‘பிராமி’ எழுத்துகள் என தவறாகப் படிக்கப்பட்டன.

ஆனால் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘சார்’ குழுவின் ஆய்வாளர் ரஞ்சித் குமார் மேற்கொண்ட ஆய்வில், அது இடவல மாற்றமாக அதாவது Mirror Image-இல் பொறிக்கப்பட்ட ‘தமிழி’ எழுத்துக்கள் என்பது உறுதியாகி யுள்ளது.

‘அளர் வைரதன்’ – தமிழரின் பெயர்

அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாக பொறிக்கப்பட்டு உள்ள அந்த மோதிரத்தில் ‘அளர் வைரதன்’ என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இப்படி ஒரு ஜாதி வெறியா?

 ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகள் உயிருடன் இருக்கும்போது மகளுக்கு ‘இறுதிச்சடங்காம்!’

ராஞ்சி, ஜூலை 8 ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் குடும்பத்தாரின் விருப்பத்தை எதிர்த்து ‘அக்னிவீர்’ ராணுவ வீரரான மாற்றுச் சமூக (OBC) இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெண்ணின் பெற்றோர், மகள் உயிருடன் இருக்கும்போதே அவரது புகைப்படத்துடன் கூடிய உருவ பொம்மையைச் செய்து, அதற்கு பாடை கட்டி, மயானத்தில் எரித்து திதி உள்ளிட்ட மரணச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

கல்லூரித் தேர்வு எழுதச் சென்ற மகள், தங்களுக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாலும், சமூக அழுத்தம் காரணத்தினாலுமே இந்தச் சடங்குகளைச் செய்ததாக பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெண்ணின் குடும்பத்தினர் அளித்த கடத்தல் புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரையும் விசாரித்தபோது, தான் 21 வயதுடையவர் என்றும், சுய விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதாகவும் அந்தப் பெண் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

இத்திருமணத்தை மணமகன் வீட்டார் ஏற்றுக்கொண்ட போதிலும், தங்களுக்கு மறைமுக மிரட்டல்கள் வருவ தாகவும், மகனின் ராணுவ வேலையைப் பாதிக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் காட்சிப் பதிவுகள் பரப்பப்படுவதாகவும் மணமகனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரங்களுடன் புகாரளித்தால் மணமகன் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி வழங்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்திருக்கிறது.

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்புப் பலகைகளில்
வெளியிட வேண்டும்:
உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 8 தனியார் பள்ளிகள் கல்வி கட்ட ணத்தை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்படி தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடும்படி அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தர வையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதும் கூட, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். எனவே, நியாயத்தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *