‘‘ஆயா ராம், காயா ராம்’’ அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!

5 Min Read

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில், சேலத்தில் கடந்த சனிக்கிழமையன்று (4.7.2026) கூடியது திராவிடர் கழகப் பொதுக் குழு!

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, அரசியல் சூழல், சுழலாகிப் போயிருக்கும் நிலையில், அந்தச் சுழலில் சிறு இலையும் உதிராத ஆலமரமாக, நிதானமாக அனைத்தையும் அணுகிய திராவிடர் கழகம் என்ன முடிவெடுக்கவிருக்கிறது என்ற ஆர்வம் அரசியல் கட்சிகளுக்கு! புதிய அரசியல் சூழலில் என்ன அறிவிக்கப் போகிறார் தமிழ்நாட்டின் மூத்த தலைவராம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் என்ற ஆர்வம் ஊடகங்களுக்கு! அறிக்கைகள் வாயிலாகவும், காணொலி வாயிலாகவும் ‘‘வாருங்கள்’’ என அழைத்தாரே தமிழர் தலைவர், தளராத அந்தக் கொள்கை வீரரைக் கண்டு ஊக்கம் பெறும் ஆர்வம் மூத்த தோழர்களுக்கு!

‘‘அறப் போராட்டக் கள வீரர்களாக ஆயிரம் பேர் பட்டியலைத் தாருங்கள்’’ என்றாரே ஆசிரியர் – ‘என்ன போராட்டத்தை அறிவிக்கப் போகிறார்’ என்ற ஆர்வம் இருபால் இளைஞர்களுக்கு! காலை முதலே குவிந்தனர் கருஞ்சட்டைகள்!

19 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. செதுக்கி எடுத்த சொற்களால் கட்டப்பட்ட  தீர்மானங்கள் ஒவ்வொன்றும் தீர்க்கமாக அமைந்தன.

சமூகத்திற்குப் பயனளித்த கழகத் தோழர்கள், இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பெருமக்களின் மறைவை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தியது முதல் தீர்மானம். தேர்தல் முடிந்த 70 நாட்களுக்குள் இயக்கத்தவர் ஆற்றியுள்ள இடைவிடாத பணிகளைப் பட்டியலிட்டுப் பாராட்டியது இரண்டாம் தீர்மானம். பிற்படுத்தப்பட்ட  சமூகநிலையும், கல்வி நிலை யும், மதம் மாறினால் மாறிவிடுமா என்ற கேள்வியை எழுப்பி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பரிகாரம் கோரியது மூன்றாம் தீர்மானம். அடுத்தடுத்து வந்த தீர்மானங்களுக்கு மத்தியில், ஊடகங்களுக்குப் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது ‘கட்சி மாறி களைக் கட்டுப்படுத்தச் சட்டத் திருத்தம் தேவை’ என்று முன்மொழியப்பட்ட ஒன்பதாம் தீர்மானம்.

அதன் முக்கியத்துவத்தை முன்னெப்போதையும் விட, அண்மைக்காலத்தில் அதிகம் உணர்ந்திருக்கின்றனர் இந்தியக் குடிமக்கள். தங்கம், பெட்ரோல் விலை நிலவரம், வானிலை நிலவரங்களைப் போல, இன்றைய எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் நிலவரம் என்று அன்றாடம்  கட்டம் கட்டி செய்தி போடும் அளவிற்குச் சீரழிந்து போயுள்ள அரசியல் காட்சிகளால், ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதே சேறு படிந்துள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தை இத்தனைக் காட்டமாக நிறைவேற்றுவதற்குத் தகுதியுள்ள ஒரே மக்கள் இயக்கம், பதவி நாற்காலிகளை நாடாத திராவிடர் கழகம் தானே!

‘சுதந்திரம்’ பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தியாவில்  முதல் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் தொடங்கிய காலத்திலேயே கட்சித் தாவல்களுக்கும், அணித் தாவல்களுக்கும் அடிகோலிடப்பட்டுவிட்டது. 1952 தேர்தலுக்குப் பிறகு ராஜாஜி ஆட்சியமைத்த வரலாறு அப்படிப்பட்டதுதான்.  கட்சித் தாவலைத் தொடங்கி வைத்த பெருமை ராஜாஜியையும் காங்கிரசையுமே சாரும்.  ‘இப்படித் தொடங்கிய ‘‘ஆயாராம், காயாராம்’’ அரசியலின்’ தொடர்ச்சியாக, ஏறத்தாழ இந்திய அளவில் 1960, 1970 களில் இதே நிலைதான்!

இதன் உச்சகட்டமாக 1967-இல் அரியானா மாநிலத்தின் ஹாசன்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த சுயேட்சை வேட்பாளரான காயா லால் என்பவர், முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ஒரு நாள் காங்கிரசிலிருந்து அய்க்கிய முன்னணி என்ற அந்த மாநிலத்தின் எதிர்க் கட்சிக் கூட்டணிக்குத் தாவி, அங்கிருந்து அதே நாளில் மீண்டும் காங்கிரசுக்குத் தாவி, அதன் பிறகு கடைசியாக ஒரு முறை அய்க்கிய முன்னணிக்குத்  திரும்பி, ஒரே நாளில் அவர் மூன்று முறை அணி மாறிய காலத்தில் பிரபலமானது ‘ஆயா ராம், காயா ராம்’ (ராமன் வந்தான்; ராமன் போனான்) என்ற சொல்லாட்சி! கடைசிவரை அந்த காயா லால் கட்சி மாறிக் கொண்டே இருந்தார் என்பது  வரலாறு!

இந்த அவல நிலைகளுக்கு முடிவு கட்டத்தான் 1985-ஆம் ஆண்டு பத்தாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது அன்றைய ராஜீவ்காந்தி அரசு. கட்சித் தாவலைத் தடுக்க அவைத் தலைவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததும், கொறடா உத்தரவை மீறுவதைப் பதவியிழப்புக்கான வாய்ப்பாக்கியதும் அதன் பின்னர் தான்!

ஆனால், அதற்குப் பிறகும் கட்சித் தாவல்கள் நின்ற பாடில்லை. இன்று அச் சட்டத்தை எப்படி வளைப்பது, நெளிப்பது என்று தனி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development) அணிகளையே வைத்திருப்பார்கள் போலும் பல கட்சிகளில்!

“தேர்தலில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டுவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க வழிகோலுவதும், கொள்கைகள், பிரச்சினைகளின் அடிப்படை யில் அல்லாமல் பதவிக்காகவும், பணத்துக்காகவும், வேறு பல சுயநலக் காரணங்களுக்காகவும் மொத்தமாக ஒரு கட்சியை விட்டுவிட்டு ஓடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ பதவியை விட்டு விலகி, வேறு ஒரு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டி யிட்டு பதவியைப் பிடிப்பதுமாகச் சட்டத்தை வளைத்து, நெளித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஒரு கட்சிக்கோ, ஓர் ஆட்சி அமைவதற்கோ ஆதரவளித்துத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றி – அவமதிக்கும் செயல் இது! இவர்கள் பதவி விலகுவதால், இன்னுமோர் (இடைத்) தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

இவர்களுக்குத் தண்டனையாக, அடுத்த 5 ஆண்டுகள் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்தத் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாத வகையிலும், தேவையின்றி இடைத் தேர்தலைத் திணித்ததற்காக, அச்செலவுகளை ஈடுகட்டத் தண்டம் கட்டும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம்” என்னும் தீர்மானத்தைச் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு நிறைவேற்றியுள்ளது.

கண் முன்னே நடக்கும் சமூக, அரசியல் அவலத்தைத் தடுத்து நிறுத்துவது தான் மக்களாட்சியின் மீதான நம்பிக் கையை மக்களிடம் தக்க வைக்கும்! இந்தக் கட்சித் தாவல்களை நடத்தியும், ஊக்குவித்தும், தங்களது பெரும்பான்மையைப் பெருக்கிக் கொண்டு இந்திய மக்களாட்சியையே கேள்விக் குறியாக்கும் ஆபத்து தீவிரமாகி வருகிறது. அதிலும் இப்போது நடப்பது கட்சித் தாவல்கூட இல்லை; கட்சிகளை உடைத்துக் கடத்துவதும், மொத்தமாகக் கட்சிகளையே கடத்துவதுமாக பா.ஜ.க. அதில் புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டமே இதனால்  ஆபத்திலிருக்கும் சூழலில், திராவிடர் கழகம் முன்வைத்துள்ள இந்தத் தீர்மானம், வருங்காலச் சட்டத்திற்கான ‘அடிக்கல்’ ஆகும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *