பிரயாக்ராஜ், ஜூலை 2- பிரிந்து வாழும் மனைவிக்கு அவரது பெற்றோர் பணம் கொடுத்து உதவுவதைக் காட்டி, கணவர் தனது வாழ்வூதியம் வழங்கும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பின்னணி என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த் சாகர் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன்-மனைவி இடையே வாழ்வூதியம் கோரி வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2023 டிசம்பரில் தீர்ப்பளித்த குடும்ப நல நீதிமன்றம், “பிரிந்து வாழும் மனைவிக்கு அவரது பெற்றோர் பணம் தருவதால், அவருக்கு கணவர் பராமரிப்புத் தொகை வழங்கத் தேவையில்லை” எனக் கூறி மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது. அதே சமயம், அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.3,000 பராமரிப்புச் செலவு வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி கரிமா பிரசாத், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றியமைத்து பின்வரும் முக்கியக் கருத்துகளையும் தீர்ப்பையும் வழங்கினார்:
மனைவியின் பெற்றோருடைய வருமானத்தையோ அல்லது அவர்கள் தரும் பணத்தையோ, மனைவியின் சொந்த வருமானமாகக் கருத முடியாது. பெற்றோர் மகளுக்கு ஆதரவாக இருப்பதாலேயே, கணவன் தன் மனைவியைப் பராமரிக்கும் கடமையிலிருந்து விடுபட முடியாது.
ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் செல்லாது: மனைவி மீது கணவர் சுமத்திய ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலோ, வெற்று குற்றச்சாட்டுகளையோ முன்வைத்து ஒரு பெண்ணுக்கான பராமரிப்புத் தொகையை மறுக்கக் கூடாது. உயர்த்தப்பட்ட வாழ்வூதியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் வாழ்வூதியத் தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
பயனாளிகள் பழைய தொகை
புதிய (மாற்றப்பட்ட) தொகை மனைவி ரூ.0 (மறுக்கப்பட்டது) ரூ.5,000 (மாதம்) குழந்தைகள் (இருவர்)தலா ரூ.3,000.
தலா ரூ.4,000 (மாதம்) குடும்ப நல நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உரிய தொகையை முறையாக வழங்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
