சென்னை மாவட்ட 6-ஆவது சுயமரியாதை மாநாடு’, 1945-ஆம் ஆண்டு, டிசம்பர் 15-ஆம் நாள், செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு, சுயமரியாதை இயக்கப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
வரவேற்புரை ஆற்றிய எம்.எஸ்.முத்து, “வீணர்களும் பிறரைச் சுரண்டி செல்வம் திரட்டுவோரும் பெருகி, அகங்காரமும் ஆணவமும் தாண்டவமாடி, கொடுங்கோலாட்சி ஓங்கி, வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் பசியும் பெருகியதால்தான் ரஷ்யாவில் சமதர்மம் தோன்ற வேண்டியதாயிற்று. அதுபோலவே, இந்தியாவில் அறியாமையை வளர்த்து, மத மூடப் பழக்கவழக்கங்களைப் பெருக்கி, ஜாதி சமய வேறுபாடுகளைப் புகுத்தி, ஜாதிக்கொரு நீதியென வகுத்து வைத்து, பிராமண ஆதிக்கம் கொடுங்கோலாட்சி நடத்திவருமாறு ஆரியம் அடிகோலி விட்டிருப்பதால்தான், இங்கே ‘சுயமரியாதை இயக்கம்’ தோன்றவேண்டியது இன்றியமையாததாகிவிட்டது” என்றார்.
மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய வி.சின்னதம்பி, “அணுகுண்டின் தன்மையைவிட அதிகம் சக்திவாய்ந்த ‘பகுத்தறிவு’ என்னும் வலிய ஆயுதத்தை நமது பெரியார், நம் ஒவ்வொருவரிடமும் அளித்துள்ளார். அதன் துணைக்கொண்டு, திராவிட தனிப்பெரும் பழமையை நிலைநாட்டல், ஆரிய அகந்தையை அழித்தல், தன்மான உணர்ச்சியை உணரச்செய்தல், தீண்டாமையைப் போக்குதல், பாட்டாளிகளின் துயர் துடைத்தல், திராவிட தனி ஆட்சி நிறுவுதல் ஆகிய அரும்பெரும் காரியங்களை நாம் செய்து முடிப்போம்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
அதன்பிறகு, ‘நம் நாடு’ என்ற தலைப்பில், ஜனார்த்தனமும், ‘எது கலை?’ என்ற தலைப்பில், நாவலர் நெடுஞ்செழியனும் பேசினர். பின்னர், பாலு ஸ்டோர்ஸ் உரிமையாளர் பாலகந்தரம், ‘சென்னை நகர திராவிட மாணவர்கள்’ சார்பில் பழநி கனகசபாபதி ஆகியோர் பெரியாருக்கு கறுப்புத்துணி மாலை அணிவித்து வரவேற்றனர். பரங்கிமலை, ஆதம்பாக்கம் ‘பகுத்தறிவு இளைஞர் கழகத்தார்’ பெரியாருக்கு கைத்தடி ஒன்றைப் பரிசாக வழங்கினர்.
அதன்பிறகு பேருரையாற்றிய பெரியார், இளைஞர்கள் போராட்டக் களத்திற்குத் தயாராக வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அடுத்து, ‘மறுமலர்ச்சி’ என்பது பற்றி, அறிஞர் அண்ணா சொற்பொழிவு நிகழ்த்தினார்.
திருச்சி 4-ஆவது சுயமரியாதை மாகாண மாநாட்டின் தீர்மானங்கள், இங்கு அப்படியே ஏற்கப்பட்டன. அப்போது, கொலை வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த என்.எஸ்.கலைவாணர், தியாகராச பாகவதர் இருவரையும் கருணை காட்டி விடுதலை செய்யுமாறு, ஆளுநர் மற்றும் வைசிராயை இம்மாநாடு கேட்டுக் கொண்டது.
பாடப் புத்தகங் களில் மதக்கலவியைப் புகுத்தக் கூடாது, புராணப் பிரசங்கம் செய்யும் அகில இந்திய வானொலி, சுயமரியாதை இயக்க செய்திகளைப் புறக் கணிப்பதற்குக் கண்டனம், ஒரே வகுப்பில் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தை விடுத்து, ஜாதி கடந்த திருமணங்களைப் புரிய முன் வர வேண் டும், மடாதிபதிகளாக வும் – சங்கராச்சாரி களாகவும் – ஜீயர்ளாக வும் இருப்பவர்கள், மதத்தின் பெயரால் பல்லக்குகளில் ஏறிக்கொண்டு ஆட்கள் மீது சவாரி செய்யும் அநாகரிக வழக்கத்தை சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அப்போது ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய சர்தார் பணிக்கர், வர்ணாசிரம தர்மத்தையும், மதத்தின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும், அறியாமையில் ஆழ்த்தப்பட்டு வருவதையும் கண்டித்துப் பேசியிருந்தார். இனிமேல், பட்டமளிப்பு விழாக்களில் சொற்பொழிவு ஆற்றும் தலைவர்கள், பணிக்கரைப் போல பேச வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி: ‘முரசொலி’ பாசறை 30.6.2026
