சின்னாளப்பட்டி: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

9 Min Read

‘‘எதற்கும் தயாராக இருக்கவேண்டும் தோழர்கள்’’ என்று சொன்னோம்!
எங்கள் பின்னால் (திராவிடர் கழகத்தின்) வந்தால் எந்தப் பதவியும் கிடைக்காது; சிறைச்சாலைக்குதான் போக வேண்டும், வருகிறீர்களா? என்றோம்!
‘‘தாராளமாக வருகிறோம்’’ என்று தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பட்டியல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!

சின்னாளப்பட்டி, ஜூன் 30 ‘‘எதற்கும் தயாராக இருக்கவேண்டும் தோழர்கள்’’ என்று சொன்னோம்! வயது குறைவான இளைஞர்கள் வரவேண்டும் என்றவுடன், ஏராளமான தோழர்கள் உற்சாகமாக இன்றைக்குப் பட்டியல் கொடுக்கிறார்கள். எங்கள் பின்னால் (திராவிடர் கழகத்தின்) வந்தால் எந்தப் பதவியும் கிடைக்காது. சிறைச்சாலைக்குதான் போக வேண்டும், வருகிறீர்களா? என்றோம், ‘‘தாராளமாக வருகிறோம்’’ என்று தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பட்டியல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சின்னாளப்பட்டி: எதிர்நீச்சலில் வென்ற
பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – மாநாடு

கடந்த 26.6.2026 அன்று மாலை 5 மணியளவில், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில்’’, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

 ‘‘கொள்கை என்பது வேட்டி போன்றது;
பதவி என்பது மேல் துண்டு போன்றது!’’

அண்ணா சொன்னார், ‘‘கொள்கை என்பது வேட்டி போன்றது; பதவி என்பது மேல் துண்டு போன்றது’’ என்று.

மேல் துண்டு இல்லாமல் வரலாம்; ஆனால், வேட்டி இல்லாமல் வர முடியுமா? ஆனால், இன்றைக்கு நிறைய பேர், வேட்டி இல்லாமல் நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம்’’ என்கிறார்கள்.

இன்னுங்கேட்டால், வேட்டிக் கட்டிக் கொண்டிருப்ப வரைப் பார்த்து, ‘‘என்னய்யா, வேட்டி கட்டிக் கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்கக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். ஏனென்றால், ஊரில் பல பேர் வேட்டிக் கட்டாமல் இருப்பதால், வேட்டிக் கட்டிக் கொண்டு வருபவரைப் பார்த்தாலே அவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறது.

யாருக்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்?

இந்த இயக்கம் என்பது எதிர்நீச்சலில் வளர்ந்தது என்பதற்கு அடையாளம்தான் இந்த சின்னாளப்பட்டியில் நடத்தப்பட்ட கலவரமாகும். இங்கே மட்டுமல்ல, இன்னும் பல ஊர்களில், இந்த சம்பவத்தை இளைஞர்க ளுக்குச் சொல்லவேண்டும்.

தேர்தல் தோல்வி என்பது நிலையானதல்ல. யாருக்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்? எங்க ளுக்காக அல்ல; உங்களுக்காக, உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காக.

அறப்போராட்டக் களத்தில்  பங்கேற்கக் கூடிய இளைஞர்களின் பட்டியலை இந்த மேடையில் கொடுத்தார்கள்.

வருகின்ற 4 ஆம் தேதி, சேலத்தில், திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு, இரண்டு போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

‘நீட்’ தேர்வின் ஆபத்தினை
முதன்முதலில் சொன்னோம்!

ஒன்று, நீட் தேர்வின் கொடுமையால், நம் மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். முதன்முதலில் அந்த நீட் தேர்வை எதிர்த்தது தமிழ்நாடு தான்; நாம்தான் வழிகாட்டினோம், அந்த ஆபத்தினைச் சொன்னோம். அப்போது மற்றவர்கள் உணரவில்லை.

ஆனால், இன்றைக்கு இந்தியா முழுவதும் பார்த்தீர்களேயானால், நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.  தொடர்ந்து நாம் போராடவிருக்கின்றோம். அந்தப் போராட்டங்களைப்பற்றி, ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் முடிவு செய்வோம்.

‘‘எதற்கும் தயாராக இருக்கவேண்டும் தோழர்கள்’’ என்று சொன்னோம். நாங்கள் எல்லாம் வயதானவர்கள் இல்லை; நாங்களும் இளைஞர்கள்தான், வயதான இளைஞர்கள்.

எங்கள் பின்னால் வந்தால்,
சிறைச்சாலைக்குதான் போக வேண்டும்
!

வயது குறைவான இளைஞர்கள் வரவேண்டும் என்றவுடன்,  ஏராளமான தோழர்கள் உற்சாகமாக இன்றைக்குப் பட்டியல் கொடுக்கிறார்கள்.  எதற்கு? எங்கள் பின்னால் (திராவிடர் கழகத்தின்) வந்தால் இந்தப் பதவி கிடைக்குமா? அந்தப் பதவி கிடைக்குமா? என்று பதவிக்காக அல்ல;  நாங்கள் வருகிறோம் என்று, எங்கள் பின்னால் வந்தால், சிறைச்சாலைக்குதான் போக வேண்டும்.  வர்றீங்களா? என்றால்,  தாராளமாக வருகிறோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், சிலர் இப்போது இருப்பதை விட்டுவிட்டு, பதவி கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டு, எல்லாரும் பதவிக்காகப் போகிறார்கள். காரணம் என்னவென்றால்,  மதத்திலயே அந்த உணர்வுகளை உண்டாக்கிவிட்டார்கள். இறந்து போன பிற்பாடு, கருமாதி பத்திரிகை அடிக்கும்போது, அதில் ‘‘உத்தரகிரியை பத்திரிகை’’ என்று போடுவார்கள். அது தமிழ் கிடையாது. இப்பொழுதுதான்  ‘‘நீத்தார் நினைவு நாள்’’ என்று  நம்முடைய இயக்கம் வந்த பிறகு அச்சடிக்கிறார்கள். உத்தரகிரியை பத்திரிகை என்றால் என்ன அர்த்தம்? இறந்து போன  தகவலைக் கொடுத்தாலே அன்றைக்குப் படிக்கத் தெரியாது. ஒரு கார்டு வரும், உங்களுக்கெல்லாம் தெரியும்,  உத்தரகிரியை பத்திரிகையின் ஒரு மூலையில், ஒரு கருப்பு சின்னத்தைப் பிரிண்ட் செய்வார்கள்.  இப்போது இருக்கின்ற போக்குவரத்து வசதிகள் அன்றைக்குக் கிடையாது. வெளியூருக்கு அந்தக் கார்டை அனுப்புவார்கள்.  எழுதப் படிக்க தெரியாது; ஒரு ஊருக்கு ஒரு அய்யர் படித்திருப்பார். அல்லது மேல் ஜாதிக்காரர் ஒருவர் படித்திருப்பார். அந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் அவர்களிடம் காட்ட வேண்டும். அந்தக் கடிதம் சாதாரணமான கடிதமா? எந்தக் கடிதம்? என்று பார்த்தவுடன் தெரிந்து கொள்வதற்காக, அந்தக் கடிதத்தின் மூலையில் கருப்பு  மையைத் தடவியிருப்பார்கள். அப்படியிருந்தால், அந்தக் கடிதத்தை அவசரமாக எடுத்துக்கொண்டு ஓடுவார்கள். இது ஏதோ துக்கக் கடிதாசி,  படித்துக் காட்டுங்கள்  என்று கேட்பார்கள்.

‘‘நீங்கள் சிவ மதமா?
வைஷ்ணவ மதமா?’’  என்று கேட்பார்

அந்தப் பத்திரிகையை அச்சடிக்கப் போனால்,  அதை அச்சடிப்பவர்,  ‘‘நீங்கள் சிவ மதமா? வைஷ்ணவ மதமா?’’  என்று கேட்பார். நாங்கள் இந்து மதம்தான். ஆனால், அதில் என்ன பிரிவு என்று தெரியாது என்பார்.

நீங்கள் நாமம் போடுகிறவர்களா? விபூதி (பட்டை) பூசுகிறவர்களா? என்று அவர் கேட்பார்.

எங்க அப்பா,  தாத்தா எல்லாம்  நாமம் போடுவார்கள் என்று இவர் சொல்வார்.

இன்றைக்குப் பல பேர் பதவிக்கு
ஆலாய் பறக்கிறார்கள்!

அப்படியா, சரி என்று சொல்லிவிட்டு, அவரே எழுதிவிடுவார்.  ‘‘சிறீ வைகுண்ட பதவி அடைந்ததை முன்னிட்டு’’ என்று போடுவார். அதே விபூதி (பட்டை) பூசுகிறவராக இருந்தால், ‘சிவலோக பதவி அடைந்ததை முன்னிட்டு’’ என்று போடுவார்.  இரண்டு இருக்கிறது, ஒன்று மேல்சபை; இன்னொன்று கீழ் சபை மாதிரி.  பதவி மோகம் என்பது, இறந்து போன பிற்பாடுகூட, அங்கேயும் பதவி கிடைக்காதா? என்று நினைப்பதினால்தான், இன்றைக்குப் பல பேர் பதவிக்கு ஆலாய் பறக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பட்டியல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்!

இப்படிப்பட்ட நிலையில், இங்கே வந்தால் பதவி கிடையாது; நீங்கள் சிறச்சாலைக்குதான் போக வேண்டும் என்று சொன்னால், அதற்குத் துணிந்து வரக்கூடிய தோழர்களும், எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய துணிவும் உள்ள தோழர்கள் நிறைந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். அதனால்தான், பட்டியல் கொடுப்பதில், இந்தச் சின்னாளப்பட்டி ஊரில்தான், திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முதலில் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாம் இளைஞர்கள்;  தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பட்டியல்களை அனுப்பிக் கொண்டி ருக்கிறார்கள்.

எங்களுடைய சொந்த விளம்பரத்துக்காகப் போராட்டம் செய்யக்கூடியவர்கள் அல்ல நாங்கள்!

உடனே அதற்காக, நாங்கள் பெரிய போராட்டத்தை ஆரம்பித்துவிடுவோம் என்பது கிடையாது. ‘விதை நெல்’ அதுதான் மிக முக்கியம். அதைச் சேர்க்க வேண்டிய  குதிரில் சேர்த்துக் கொண்டிருப்போம். தேவைப்பட்டால், அதைப் பயன்படுத்துவோம். எப்பொழுதுமே போராட்டத்துக்காக ஒரு போராட்டமோ அல்லது எங்களுடைய சொந்த விளம்பரத்துக்காகப் போராட்டமோ செய்யக்கூடியவர்கள் அல்ல நாங்கள்!

தந்தை பெரியார் அவர்கள், எதிர்நீச்சல் அடித்தார், ஒவ்வொரு முறையும். 1944 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான்  திராவிடர் கழகம்  உருவானது. கடலூரில் நடைபெற்ற நீதிக்கட்சிக் கூட்டம்தான், நான் சொல்கின்ற கூட்டம். அப்போது என்னுடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள், என்னை மேடையில் ஏற்றி விடுகிறார்.  அந்தக் கூட்டத்தில், அண்ணாவுக்கு ‘திராவிட நாடு’ நிதி வசூல் செய்து 103 ரூபாய் கொடுக்கிறோம்.  103 ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். அண்ணா அந்த நிதியை வாங்கிக் கொண்டு பேசுகிறார். அப்படிப்பட்ட கூட்டத்தில், என்னை, மேசைமீது ஏற்றிவிடுகிறார்கள், உயரம் போதவில்லை என்பதற்காக.

அய்யாவை, அன்னை மணியம்மையாரை முதன்முதலில் அன்றைக்குத்தான் பார்த்தேன்!

அடுத்த ஒரு மாதத்தில், சேலம் மாநாடு நடக்கிறது. ஆனால், அந்த 1944 இல் நடக்கிற கூட்டத்தில், எங்கள் ஊரிலேயே (கடலூர்) சின்னாளப்பட்டியைவிட மோசமாக இருக்கிறது. எதிர்நீச்சல் எப்படி என்பதை 10 வயதில் அந்த அனுபவத்தைப் பார்த்தேன் நேரில். அய்யா அவர்கள், முத்தையா டாக்கீஸ் அரங்கத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த டாக்கீஸ் யாருக்குச் சொந்தமோ, அவருடைய மருமகன் காங்கிரஸ்காரர், ஒரு வாலிபர். அவர், அய்யாவை ஒருமையில் பேசுகிறார்.  அவ்வளவு பெரிய கூட்டம், இயக்கத் தோழர்கள் ஏராளமாக இருந்தார்கள். அப்போது கருப்பு சட்டை வரவில்லை. நீதிக்கட்சி, இரண்டு கொடியாக இருக்கும். ஒன்று, புலிவில் கயல்! இன்னொன்று சிவப்பு வண்ணக் கொடியில், வெள்ளை வண்ணத்தில் தராசு சின்னம். முதன்முதலில் அய்யாவை,  ஒரு மாணவனாக, சிறுவ னாக இருந்து பார்த்த வாய்ப்பு. அய்யாவை, அன்னை மணியம்மையாரை அன்றைக்குத்தான் பார்க்கிறேன்.

அய்யா அவர்கள் பேசத் தொடங்கியவுடனே, நடுவில் இருந்த ஒரு இளைஞன் எழுந்து, ‘‘ஏய், ராமசாமி நாயக்கா, பேசாதே!’’ என்று சொன்னவுடன், எல்லாருக்கும் ஆத்திரம். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆத்திரம்.

 ‘‘நான் பேசிக் கொள்கிறேன், நீங்கள் யாரும் பதற்றப்படவேண்டாம்’’– தந்தை பெரியார்!

அதைப் பார்த்த அய்யா அவர்கள், ‘‘அமைதி, அமைதி’’ என்று தோழர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ‘‘நான் பேசிக் கொள்கிறேன், நீங்கள் யாரும் பதற்றப்படவேண்டாம்’’ என்று சொன்னார்.

‘‘என்ன செய்தி? உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்’’ என்றார்.

அவர் கேட்டார், அய்யா அவர்களும் பதில் சொன்னார். வெட்கப்பட்டு வெளியே போய்விட்டார் அந்த இளைஞர்.

கடலூர் மஞ்சநகர் மைதானத்தில் பொதுக்கூட்டம்!

அன்றைக்கு மாலை, பொதுக்கூட்டம். கடலூர் மஞ்சநகர் மைதானம், பெரிய மைதானமாகும். அங்கே ஏராளமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நாங்க ளெல்லாம் சின்ன பிள்ளைகள், அந்த மாநாட்டில் கலந்துகொண்டோம். அந்த மாநாட்டைப் பார்க்கிறோம். ஆசிரியர் ஆ. திராவிடமணி அவர்கள், மாணவர்களைத் தயார் செய்தார். நாங்கள் எல்லோரும், அந்த மாணவ வயதுக்காரர்கள்– எல்லா வேலையும் செய்வோம். அதே அளவிற்கு இயக்கப் பெரியவர்களும் இருந்தார்கள். அன்றைக்குக் கடுமையான மழை பொழியத் தொடங்கியது. அய்யா அரை மணிநேரம் பேசினார். தொடர்ந்து கூட்டம் நடத்த முடியவில்லை. அடுத்த நாள் சென்னையில் மாநாடு. அதற்காகத் தந்தை பெரியார் அவர்கள் மஞ்சநகர் மைதானத்திலிருந்து, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்குக் கைரிக்ஷாவில் புறப்பட்டார். கையில் எப்பொழுதும் ஒரு பெட்டி வைத்திருப்பார்.

அய்யா அவர்கள், கைரிக்‌ஷாவில் அமர்ந்திருக்க, ரிக்‌ஷாவை இழுத்துக் கொண்டு வருகிறார்கள். கெடிலம் ஆற்றுப் பாலத்தில்  வரும்போது, மின்சாரம் நின்று போனது. அய்யா வருகின்ற ரிக்‌ஷாவைச் சுற்றித் தோழர்கள் அனைவரும் வந்துகொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு சத்தம். ‘‘பாம்பு, பாம்பு, பாம்பு!’’ என்று. அது தண்ணீர் பாம்புதான், போங்கள் என்று சொல்லி, அந்தப் பாம்பைத்  தள்ளிவிட்டாயிற்று.

ரிக்‌ஷாக்காரரைப் பார்த்து,
‘‘வண்டியைத் திருப்புப்பா!’’ என்றார்!

திடீரென்று தந்தை பெரியார் அவர்கள், ரிக்‌ஷாக்கா ரரைப் பார்த்து, ‘‘வண்டியைத் திருப்புப்பா!’’ என்று சொன்னார். எதற்காகத் திருப்பச் சொல்கிறார் என்று  தெரியாது.

ரிக்‌ஷாகாரரும், ரிக்‌ஷாவைத் திருப்பிக் கொண்டு போனார். கடைசிவரைக்கும் போனதும், ‘‘வண்டியைத் திருப்புப்பா’’ என்று மீண்டும் பெரியார் அவர்கள் சொன்னார்.

எதற்காக என்று எங்கள் யாருக்கும் புரியவில்லை.  இதெல்லாம் சாதாரணமாக நடக்கிறது. இதுகுறித்து மற்றவர்களுக்கும் பெரிய அளவுக்குத் தெரியாது. அருகில் இருந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

‘‘ரிக்‌ஷாவை நான் திருப்பச் சொன்னேனே, ஏன் என்று நீங்கள் கவனித்தீர்களா?’’

நேராக, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். அய்யா அவர்கள் ரயில் வரும்வரையில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களும் அமர்ந்திருந்தார்.  அய்யா அவர்கள், தோழர்களிடம்  மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தார். அப்படிப் பேசும்போது, அய்யா, ‘‘ரிக்‌ஷாவை நான் திருப்பச் சொன்னேனே, ஏன் என்று நீங்கள் கவனித்தீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘ஏதாவது காரணம் இருக்கும். மின்சாரம் இல்லாததால், இருட்டாக இருந்தது. அதனால் நாங்கள் யாரும் கவனிக்கவில்லை’’ என்றோம்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *