மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த நிகழ்வில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை, ஜூன் 29 “‘கொள்கைதான் முக்கியம்’ என – தி.மு.கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள்!” என்றும், “தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும் கடமையும் தி.மு.கழகத்திற்குத்தான் அதிகமாக இருக்கிறது” என்றும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, வானகரத்தில் நேற்று (28.6.2026) மாற்றுக் கட்சியினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–
நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகிழ்ச்சி யோடு, உறுதியோடு, உற்சாகத்தோடு வந்து இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் முதலில் வருக! வருக! என நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தலைமைக் கழகத்தின் சார்பில் தலைமைத் தொண்டனாக உங்கள் அனைவரையும் நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கலைஞர், அரை நூற்றாண்டு காலம்
தாங்கிப் பிடித்த இயக்கம்!
எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து, பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். ஒரு முறை, இரண்டு முறை அல்ல; ஆறு முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, அனைத்து வகைகளிலும் இந்த மாநிலத்தை வளர்த்தெடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், அரை நூற்றாண்டு காலம் தாங்கிப் பிடித்த தனிப்பெரும்இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்த கழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதுமட்டுமா, அவர் பொருளாளராக இருந்து செயல்பட்ட இயக்கத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் அவர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
தனிக்கட்சி கண்ட பிறகும், தலைவர் கலைஞர் அவர்களைச் சட்டமன்றத்தில் ஒருவர், பெயரைக் குறிப்பிட்டுப் பேசியபோது, அன்றைக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள், அதைக் கண்டித்தார். என்ன சொல்லிக் கண்டித்தார் தெரியுமா? “உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்; ஆனால், எனக்குத் தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி, அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொன்னார். இது வரலாறு!
அன்று நான் ஒரு சாதாரணத் தொண்டனாக – இளை ஞனாக இருந்தேன்; இன்று அதே இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக இருந்து, உங்கள் அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
‘கொள்கைதான் முக்கியம்’ என –
தி.மு.கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள்!
பொதுவாக, ஒரு தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்ற இயக்கத்தை நோக்கி நிறையப் பேர் சேர்வார்கள். எதிர்க்கட்சியில் இருந்து விலகி, ஆளுங்கட்சிக்குத்தான் நிறையப் பேர் சென்று சேர்வார்கள். ஆனால், இங்கு என்ன என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பதவிக்காக அல்ல; பவுசுக்காக அல்ல; பொறுப்புக்காக அல்ல; நீங்கள் எல்லாம் “கொள்கைதான் முக்கியம்” என்று உணர்வோடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அதுதான் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்.
திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக இருந்தால்தான், தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்பி, இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.
‘தினமும் ஒரு திட்டம்’ என்று சொல்லத்தக்க வகையில் திட்டங்களை உருவாக்கினோம்!
கடந்த அய்ந்து ஆண்டுகளாக, எந்தத் துறையை எடுத்தாலும், இதுவரை தமிழ்நாடு கண்டிராத வளர்ச்சியை, நம்முடைய தமிழ்நாடு பார்த்தது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாட்டை நாம் உயர்த்தினோம். ‘தினமும் ஒரு திட்டம்’ என்று சொல்லத்தக்க வகையில் திட்டங்களை உருவாக்கினோம். அனைத்துத் தரப்பு மக்களையும் நாம் கவரும் வகையில் திட்டங்கள் தீட்டினோம். திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தன.
நமது ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையால்தான், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்தன; தொழில் தொடங்கினார்கள். அதுமட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்புகள் பெருகியது. அண்டை மாநிலங்களில் ஆட்சி செய்யும், அரசியல் ரீதியாக நமக்கு எதிரணியில் இருக்கும் தலைவர்கள்கூட இதனை வெளிப்படையாகப் பாராட்டினார்கள்; சில பேர் பொறாமைப்பட்டார்கள்.
ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள்ளேயே, தமிழ்நாடு இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
தொழில் நிறுவனங்கள் இந்தப் புதிய ஆட்சியை நம்பித் தமிழ்நாட்டுக்கு வரப்பயப்படுகிறார்கள், தயங்குகிறார்கள்; அதனால், வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டி ருக்கிறார்கள். என்ன காரணம்?
சட்டம்–ஒழுங்கைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளை கள் மற்றும் அராஜகங்கள் – டி.வி.யைப் பார்த்தாலே, பேப்பரைப் படித்தாலே இந்தச் செய்திகள்தான் நம் கண்களில் படுகின்றன. அதிலும் குறிப்பாக, நிறைய குற்றங்களில் ஆளுங்கட்சிக்காரர்களே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதுதான் வேதனை!
இன்னொரு பக்கத்தில், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், “டேக் டைவர்ஷன்” என்று திசைதிருப்பும் வேலைகளில் இந்த ஆட்சியாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்களுடைய இந்த ‘டெக்னிக்’ மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது. இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “தவறு செய்துவிட்டோம்” என வாக்களித்தவர்களும் கஷ்டப்படு கிறார்கள்; வாக்களிக்காதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களே தன்னெழுச்சியாகப் பல இடங்களில் இப்போது போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு அமைச்சர்கள் எங்காவது காரில் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, வழிமறித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சூழலில், மக்களுக்குத் துணையாக நாம்தான் இருக்க வேண்டும்.
எத்தனையோ வெற்றியைப் பார்த்திருக்கிறோம்; எத்தனையோ தோல்வியையும் பார்த்திருக்கிறோம்!
தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும் கடமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஏன் என்றால், நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை, சீரழிய விடக் கூடாது.
ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழப்பது என்பது,
