சென்னை, ஜூலை 20– தமிழ்நாட்டின் மின்நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது.
தமிழ்நாட்டில் நீர்மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி,சூரிய மின்சக்தி மற்றும் வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து பிரி வினருக்கும், சீரான மின் விநியோகத்தை மின் வாரியம் வழங்கி வருகிறது.
பொதுவாக, கோடைக் காலங்களை பொறுத்தவரை மின்நுகர்வு 350 முதல் 370 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மாதமே 471 மில்லியன் யூனிட் வரை உயர்ந்தன. மேலும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவழை நம்பி இருந்த சூழலில் எதிர்ப்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதுதவிர, எல்நினோ சூழல் உள்ளிட்டவற்றால் பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நீடித்து வருகிறது. இதனால் மின்சார பயன்பாடு வழக் கத்தை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் ஜூலை மாதம் தொடக்கம் முதலே படிப் படியாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த 15.7.2026 அன்று 472.26 மில்லியன் யூனிட்களும், 16.7.2026 அன்று 473.57 பதிவான நிலையில் கடந்த 17.7.2026 மாநிலத்தின் நாள் தோறும் மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது.
இது மின்வாரியத்தின் வரலாற்றிலேயே ஜூலை மாதத்தில் பதிவான மிக உயர்ந்த தினசரி மின்நுகர்வு சாதனையாகவும் பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
