சென்னை. மே 6- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என, தொழில் நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் கல்வி ஆண்டில் (2026-2027) அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமா படிப்பில் முதலாம் ஆண்டு சேரவும், பகுதி நேர டிப்ளமா படிப்பில் சேரவும் இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர படிப்பில் சேர 2 ஆண்டு கால அய்டிஅய் முடித்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் ரூ.150. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சிறப்புப் பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள், விண்ணப்பதாரர் ஒளிப்படம் ஆகியவற்றை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணைய வழியில் விண்ணப் பிக்கக் கடைசி நாள் மே 30ஆம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அதில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
