சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமித்துள்ளார்.
மாநிலத் தலைவர் பதவி கார்த்தி சிதம்பரம், ஜோதி மணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஅய்) இணைந்தார்.
கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014 பொதுத் தேர்தலில் இத் தொகுதியில் தோல்வியடைந்தார்.
கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
