சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத் தலைவர் மு.சக்திவேல் நேற்று (25.6.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சுமார் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் 9,896 பேர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.10 ஆயிரம் பெற்று வருகின்றனர்.
கடந்த 2013-இல் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 16,508 தூய்மைப் பணியாளர்கள், 2020-ஆம் ஆண்டு முதல் ரூ.8,500 சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருகின்றனர். தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஊராட்சிகளில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.20 ஆயிரம் அல்லது கால முறை ஊதியம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
