களப்பணிக்கு தயார்…. களப்பலிக்கு தயார்… தயார்…. – த.சீ. இளந்திரையன் –

2 Min Read

திராவிடர் கழகம் ஒரு கொள்கைப் பாசறை இயக்கம்! சோர்வறியா கடமை அணி! கொள்கைப் போராளியாகவே நம்மை வரித்துக் கொண்டவர்கள் நாம்! தலைமையின் கட்டளையை எதிர்நோக்கி, மாளாத பணியாக இருப்பினும் மனங்கோணாது நின்று கொள்கை எதிரிகளை சந்திக்க அஞ்சாத, பகை வெல்லும் படைக் கூட்டம்! மானம் பாரா, நன்றி பாராத நல்லியக்கம்! இவ்வியக்கத்தின் இடையறா பணிகளை வென்று முடிக்க ஆயிரம் இளைஞர்கள் பட்டியலோடு சேலம் பொதுக்குழுவுக்கு அழைத்துள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆசிரியர் கேட்கும்
இளைஞர் பட்டியல் ஏன்?

பெரியார் விடையளிக்கிறார்,

‘‘நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடை பெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களாலேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை.

ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். “இளங்கன்று பயமறியா”தென்ற பழமொழிக்கொப்ப அவர்களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி பட ரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உத வக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.

எனவே, கழகத்தோழர்களே இளைஞர் பட்டாளத்தோடு- பட்டியலோடு வாருங்கள்.

சட்ட எரிப்பு, ஹிந்தி எதிர்ப்பு வீரர்களின் குருதிச்சூடு இன்னும் குறையவில்லை!

தோழர்களே! நான், மூன்று ஆண்டு களுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் போது கையாண்ட எந்த விதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட அவைகளுக்கு பயப்பட்டு என் லட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை! கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விட வேண்டியதில்லை; பயந்து விடவும் மாட்டீர்கள். சட்டத்தை பார்த்துப் பயந்துவிட்டதாக பேர் வாங்காதீர்கள்! ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்!”

என்று நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அறிவித்தார்.  (‘விடுதலை’, 8.11.1957)

இதுபோன்றதொரு அழைப்புதான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அழைப்பு.

ஜாதியை ஒழிக்க தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்ற வாளாடி சிறுவன் பெரியசாமி முதல், கட்டிளங்காளையர்கள், புதுமணம் புரிந்தோர், நிறைமாத பெண்கள், வயது மூப்பினர் என பல்லாயிரவர் சட்டத்தை கொளுத்த பெயர் கொடுத்தனர்.  கொளுத்தினர் சட்டத்தை. இதனால் சிறை ஏகினர். மன்னிப்புக்கடிதம் கொடுக்காமல் ஜாதி ஒழிப்புக்காக தண்டனையை ஏககாலத்துக்கும் ஏற்றனர்.

ஜாதி ஒழிப்புப் போரிலும், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரிலும் உயிர்நீத்த ஈகியர்களின் இரத்தச்சூடு இன்னும் எங்களிடம் குறையாமல் அப்படியேதான் இருக்கிறது.

ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்பை எதிர்க்கவும், ஒன்றிய அரசின் திணிப்புகளுக்கு மாநில அரசு வந்தனம் செய்யாமல் தடுக்கவும், ஸநாதனத்துக்கு பொலிவூட்டும் போக்கை எதிர்க்கவும், சமூகநீதியைக் காக்கவும், பாலியல் சமத்துவத்தை பேணவும், மண்ணுரிமை, சுற்றுச்சூழல்  பாதுகாப்புக்கும் ஆயிரமாயிரம் இருபால் இளைஞர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைக்காக காத்திருக்கிறோம்.

தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே கட்டளையிடுங்கள்

உங்கள் இளைஞர் சேனை களப்பணிக்கும் தயார்,

களப்பலிக்கும் தயார், தயார்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *