ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
வெனிசுலா, ஜூன் 25- வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கம் காரணமாக வெனிசுலா தலைநகர் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக வெனிசுலாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யத்தின்படி, பிரதான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:04 மணிக்கு ஏற்பட்டது. இதன் மய்யப்புள்ளி, கராகஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 186 மைல் தொலைவில், நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள மொன்டால்பான் அருகே அமைந்திருந்தது. இந்த வகையான ஆழமற்ற நிலநடுக்கம் பொதுவாக அதிக தீவிரமாக உணரப்படுவதுடன், மேற்பரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்த கூடிய அதிக சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது என கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் மய்யம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்
பீஜிங், ஜூன் 25– பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் பங்கேற்க டில்லி வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடியிடம், ‘‘இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், உணர்திறன் மிக்க விவகாரங்களை சரியாக கையாளவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது’’ என கூறியதாக சீன அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
