லக்னோ, ஜூன் 23 உத்தரப் பிரதேச மாநிலத்தில், சிறுபான்மைச் சமூகத்தைக் குறிவைத்து நடைபெறும் தாக்குதல் களின் அடுத்த கட்டமாக, ஷாம்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாகக் கூறி, மணமகன் மற்றும் அவரது உறவினர்களைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அந்த திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்குத் தயார் செய்யப்பட்டிருந்த உணவை காவல் துறையினர் அப்புறப்படுத்தியதுடன், மணமகன் தரப்பினர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதும், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளது. உணவுப்பழக்கம் என்பது தனிப்பட்ட உரிமையாகவும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் கலாசாரமாகவும் இருக்கும் சூழலில், இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகத்தினருக்கு மேலும் அழுத்தம் தர யோகி ஆதித்யா அரசு தயாராகிவிட்டதாக மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மகிழ்ச்சியான மணவிழாவின்போது, உணவு தொடர்பான சர்ச்சைகளைத் தூண்டி, மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இக்கட்டான சூழலுக்குத் தள்ளுவது, அவர்களின் உரிமை களை மறுப்பதாகவே அமைகிறது என்றும், சட்டத்தின் பெயரால் இத்தகைய தலையீடுகள் ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறையாகவே பார்க்கப்படுகிறது என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
