புதுடில்லி, மே 26 மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
‘நீட்’ தேர்வு
நடப்பு 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் யுஜி தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசிய தேர்வு முகமையை மாற்றக் கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (25.5.2026) விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த முக்கிய கருத்துகள் மற்றும் உத்தரவுகள் பின்வருமாறு:
பாடம் கற்றுக் கொள்ளவில்லை
“கடந்த முறை முறைகேடுகள் நடந்தபோதே நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தது. உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. இவ்வளவு பிரச்சினைகள் எழுந்தும், தேசிய தேர்வு முகமை இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.”
கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தேசிய தேர்வு முகமை உடனடியாக தனது நிலை அறிக்கையை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அக்குழுவின் தலைவரான கே. ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசும், சிபிஅய்-யும் பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் தாக்கீது பிறப்பித்துள்ளது. மேலும், இவ்வழக்கின் நகல்களை ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் மறுதேர்வு தேதி குறித்துக் குறிப்பிட்ட போது, “நாங்கள் இப்போது தேர்வு தேதியைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
