நவில்தொறும் நூல்களை நாள்தோறும் படித்து மகிழும் வாய்ப்புதான் நமது அறிவினை மேலும் மேலும் விரிவு செய்து, புதிய அரிய செய்திகளை அறிந்துகொள்ள உதவும்.
‘கல்லாதது உலகளவு’ என்பதைக் குறைக்க வேண்டும்; கற்க வேண்டிய நூல்களைக் கற்கத் தவறலாமா? கூடாது; கூடவே கூடாது!
ரோஜா முத்தய்யா ஆய்வு நூலகம் சிந்துவெளி ஆய்வு மய்யம் ஆகியவை சார்பில் அண்மையில் வெளிவந்த நூல் – மிக ஆழமான பல வரலாற்றுச் செய்திகளை செறிவுடன் அறிந்து கொள்ளவும், நமது 5,000 ஆண்டு நாகரிக –பண்பாட்டின்மீது எப்படி ஒரு புதிய தாக்குலும், படையெடுப்பும் நடத்தப்படுகிறது என்பதை விரிவாக விளக்கி உணர்த்துகின்ற துல்லியமான நூல்.
இதன் தலைப்பு:
‘‘ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’’
ஆர். பாலகிருஷ்ணன் – சுந்தர் கணேசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துத் தரும் ஓர் அருமையான நூல் இது!
பழைமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை முதன் முதலில் தக்க தரவுகளுடன் வெளிப்படுத்தியவர் சர். ஜான் மார்ஷல்! தொல்பொருள் துறை ஆய்வாளர்களில் அவர்தான் மொகஞ்சதாரோ, ஹரப்பா பழம் தோண்டலில் (அகழாய்வு) கிடைத்த வியக்கச் செய்வனவற்றை ஆதாரங்களுடன் விளக்கினார். இதோ நூலிலிருந்து…
ஜான் மார்ஷலுக்கு முன்பு:
இந்தியத் துணைக்கண்ட வரலாறு
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட வில்லையென்றால், இந்திய வரலாறு எப்படி இருந்திருக்கும்? வேதங்கள், புராணங்கள், இதி காசங்கள் முதலியவை வரலாறாக இருந்திருக்கும். 1924ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்திய வரலாறு என்பது வேதங்களோடு தொடர்புபடுத்தியே பேசப்பட்டது; எழுதப்பட்டது. சமஸ்கிருதம் அறிந்த நிலப்பகுதிகள் ‘ஆர்ய வர்த்தம்’ என்று அழைக்கப்பட்டன. 1893ஆம் ஆண்டு அமெரிக்காவில் உரையாற்றிய விவேகானந்தர் வேதங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியா பற்றி எடுத்துரைத்தார். ஒருவேளை சிந்துவெளிப் பண்பாடு குறித்தும் அதன் பன்மைத்தன்மை குறித்தும் அவர் முன்னமே அறிந்திருந்தால், அந்த புகழ்பெற்ற உரையின் தன்மை எப்படி இருந்திருக்கும்? தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவைக் குறித்த பிம்பமே வேறுவகையில் அமைந் திருக்கும்.

இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்கியவர்களில் முக்கிய மானவர் மாக்ஸ் முல்லர் (Max Muller). 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியவியலாளரான மாக்ஸ் முல்லர், ஆரியப் பண்பாடு குறித்தும், பண்டைய இந்திய வரலாறு குறித்தும் கருத்தாக்கங்களை உருவாக் கினார். மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து வந்த வர்கள் ஆரியர்கள், அவர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம், அது இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது, அவர்களின் புனித நூல் வேதம் போன்ற கருத்துகளை முன்வைத்தார்.
சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்கள் இந்தியாவின் பழமையான நூல்களாகக் கருதப்படுகின்றன. வேதங்களே இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படை என்றும், இந்திய மரபுகளுக்கு ஆதாரம் என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என நான்கு பிரிவுகளாக உள்ளன. இவற்றில் தேவர்களைப் போற்றிப்பாடும் மந்திரங்கள், அவர்களுக்கான வேள்விகள் மற்றும் பலி செய்வதற்கானச் சடங்குகள், இந்திரன், அக்னி, வாயு போன்ற பலரைப் புகழ்ந்து பாடும் மந்திரங்கள் முதலியவை காணப்படுகின்றன. இவையே இந்தியாவின் ஆன்மிக மரபிற்கு அடிப்படை என்றும் கட்டமைக்கப்பட்டன.
இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியைப் பேசிய ஆரியர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்கள்தான் வேதங்களை இயற்றியதாகவும், அதுவே இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படை என்றும் கூறப்பட்டது. ஆனால் தொல்லியல், மொழியியல் தரவுகளும் சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பும் இந்தக் கருத்துகள் தவறானவை என்று உலகிற்குக் காட்டின.
இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் சிந்துவெளி நாகரிகம் என்பதே ‘வேத நாகரிகம்’ என்ற கருத்தாக்கங்களும் உருவாக்கப்பட்டன. அவை அடிப்படைத் தரவுகளற்றவை. இந்த வாதத்தில் காணப்படும் தவறான தரவுகளைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத் துரைத்துள்ளனர். ஆரியர்கள் அடிப்படையிலேயே நாடோடி களாக இருந்ததால் அவர்கள் ஒரு பெரும் நாகரிகத்தை உருவாக்கும் செயல்பாட்டிற்கு வெளியே இருந்தனர். அதாவது நகர உருவாக்கம், வணிகச் செயல்பாடுகள், அதற்கான உற்பத்திகள் உள்ளிட்ட எதனையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஓர் இடத்தில் சில காலம் தங்குதல், வேள்விகளை நடத்தி அச்சடங்குப் பீடங்களை எரித்துவிட்டு, வேறொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல் என நாடோடி நிலையைத்தான் ஆரியர் கொண்டிருந்தனர். அதன் எச்சங்களாக இன்னும் ஆரியர்களின் இறப்புச் சடங்குகள் தீயுடன் சம்பந்தப்பட்டதாய் இருப்பதைக் காணலாம். இதனடிப்படையில் பார்த்தால் வேத நாகரிகம் என்று கூறுவது தவறான கருத்தாகும்.
இது மட்டுமின்றி, சிந்துவெளி நாகரிகம் ஆரியப் பண்பாட்டிற்கு முற்பட்டது என்பதைப் பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துரைத்து வந்துள்ளனர். அதாவது, ஆரிய மொழி பேசுவோர் தெற்காசியாவிற்கு பொ.ஆ.மு. (கி.மு.) 1500களுக்குப் பிறகே வந்துள்ளனர். அக்காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் சரிவடைந்திருந்தது. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காணப்படும் விலங்கினங்களில் குதிரையும் தொல்பொருட்களில் ஆரக்கால் சக்கரங்கள் உடைய தேரும் இல்லை என்பது முக்கியமானது. அதாவது ஆரியர்களுடன் தொடர்புடைய குதிரையும் அவர்கள் நாடோடியாகப் பல்வேறு இடங்களுக்கு நகரும்போது பயன்படுத்திய ஆரக்கால் சக்கரங்கள் உடைய வண்டிகளும் சிந்து வெளியில் காணப்படவில்லை.
(தொடரும்)
