யார் யார் – எத்தகை நட்புகள்? புரிந்து கொள்வோம் (5)

3 Min Read

நட்பு பற்றி திருக்குறலில் வள்ளுவர் ‘பழைமை’ என்ற தலைப்பில் 10 குறள் பாக்களைத் தந்தது பற்றி முன்பு பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு எச்சரிக்கை மணியோசயைத் தரத் தயங்காது இடித்துச் சொல்லுகிறார்.

‘தீ நட்பு’ என்ற தலைப்பில் ஒதுக்க வேண்டிய போலி நட்பாளர்கள் என்ற நச்சரவங்களோடு பழகுவதோ, அவர்களைப் பாலூற்றி வளர்ப்பதோ மிகப் பெரிய ஆபத்து; பெருங் கேடு பயக்கும் ஒரு விஷப் பரிட்சை என்பதை பல அருமையான குறள் பாக்களைத் தமது எச்சரிக்கை மணியோசை மூலம் தொடர்ந்து சுட்டிக்காட்டி, சுயமரியாதைச் சூடு போடுகிறார்! என்னே கருத்தாழம்!

போற்றத்தக்கது மட்டுமா?

வியக்கத்தக்கது மட்டுமா?

பின்பற்றி வாழ்வின் பெரிய

‘விபத்துகளிலிருந்து’ தப்ப வேண்டாமா?

‘‘அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை’’     (குறள் – 814)

‘‘போர் ஏற்படும்போது போர்க் களத்தில், தன்மீது அமர்ந்திருக்கும் வீரரைக்  கீழே தள்ளி விட்டு ஓடிப் போகக் கூடிய தன்மை கொண்ட, போர்த்திறனை அறிந்து செயல்படாத குதிரையைப் போன்றவர்கள், உற்றார் போலிருந்து நட்புக் கொள்ளும் நிலைமையைவிட ஒருவர் தனிமையாக இருப்பதே பெருமைக்குரியதாகும்.’’

இதைப் படிக்கும் வாசகப் பெரு மக்களுக்கு இப்போதாவது ‘‘இன்றைய  அரசியல் நடப்புகள்’’ நினைவுக்கு வருகிறதா?

அனுபவ ரீதியாக மற்றொன்றும் கீழே தள்ளும் குதிரைகளைப் பற்றிய முதுமொழியாக நாட்டில் உலா வருகிறது. நீங்கள் அனைவரும் அறிந்ததுதானே!

‘‘குதிரை கீழே தள்ளியது மாத்திரம் அல்ல

கூடவே குழியும் பறித்தது என்ற கதைபோல’’  இந்த சொல்லாக்கம் நினைவுக்கு வருகிறதா?

‘தீ நட்பு’ என்பதை எப்படி குதிரை உவமை மூலம் ‘பளிச்’ சென வள்ளுவர் சுட்டிக்காட்டி நமக்கு எளிய பாடம் போதிக்கிறார் பார்த்தீர்களா?

மேலும் ஒருபடி முன்னேறி தனது எழுத் தாணியை, சாட்டையை சொடுக்குவதுபோல சொடுக்கி நம்மை விழிப்புக் கொள்ளச் சொல்லுகிறார் அந்த வித்தகப் பெருமான் நமது மாந்தநேயரான திருவள்ளுவர்.

‘‘பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்’’ (குறள் – 816)

‘‘அறிவில்லாதவர்களிடம் கொள்ளும் மிகச் செறிந்த நட்பினைக் காட்டிலும், அறிவுடையவர்களது பகைமையானது, கோடி மடங்கு நன்மை பயப்பதாக இருக்கும்’’

சரியான ஆணியடித்துச் சொல்லும் துணிவு மிக்க மேலான  அறிவுரை – அறவுரை வள்ளுவரின் இந்த மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்த அதிர்ச்சியுரை!

ஆம்; அறிவுள்ள பகைவனையாவது தேடு; ஆனால் அறிவற்ற நண்பனைக் கட்டிக் கொண்டு வீழாதே என்கிறார்.

பயனற்ற முயற்சி காட்டில் காய்ந்த நிலாபோல!

எட்டி பழுத்தால் எவருக்கு லாபம்? எனவே துணிவாகச் சுட்டிக்காட்டி அறிவுச் சாட்டையைச் சுழற்றுகிறார்!

வாழ்வில் இவைகள் மனதிற் செதுக்கப்பட்ட அறிவு சொல்வெட்டுகள் அல்லவா?

அதுமட்டுமா? மேலும் கேளுங்கள் வள்ளுவர்தம் அறிவுப் போர் முழக்கத்தை!

‘‘எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு’’ (குறள் – 820)

‘‘தனியாக வீட்டில் இருக்கும்போது, தம்மோடு நெருங்கிப் பழகிக் கொண்டு இருந்து விட்டு, பலர் கூடும் பொது மன்றத்தில், தம்மைப் பழித்துப் பேசுபவருடைய நட்பானது, எப்படியும் தன்னை அணுகிவிடாதபடி, ஒருவர் அதனை நீக்கி வைக்க வேண்டும்.’’

நேரில் புகழுவது, பிறகு முதுகில் குத்துகின்ற ‘நட்பு ரகங்களில்’ இது ஒரு வகை!

இதன் மறுபக்கமும் ஒன்று உண்டு.

பொது மேடையில் தலைவர்களைப் புகழ்ந்து கைதட்டல் வாங்கிய பிறகு, மேடையை விட்டு கீழே இறங்கிய பிறகு தனித்த திண்ணைப் பிரச்சாரத்தில் யாரைப் புகழ்ந்தாரோ அவரைப் பற்றி அவதூறுகளை அடுக்கி, அடுக்கிக்கூறி ‘மன அரிப்பை’ அளவற்றுக் கொட்டும் புறங்கூறும் புல்லர்கள் உண்டு!

என்ன செய்வது, எல்லோரையும் கண்டு, உண்டு, பிறகு உணர்த்தும் அவர்கள் இரட்டை வேடம் கண்டு ஒவ்வொருவரும் – பட்டபின்புதான் புரிந்து கொள்ளும் விசித்திர அனுபவங்களுக்கும் ஒவ்வொருவர் வாழ்வு, ஒவ்வொரு ரகம்!

முடிந்தவரை ‘‘வெளுத்தல்லாம் பாலல்ல’’,

என்று புரிந்து கொள்ள பட்டறிவு கொண்ட

பகுத்தறிவையும் பலன்தரும்

சோதனைக் கருவியாக்கி, முடிந்தவரை

ஏமாறாத வாழ்க்கை இனியாவது

நமதாகட்டும்!

நல்ல நட்பு என்பது

கை மாறுகருதாது

கஷ்ட – நஷ்ட காலங்களில்

துணை நிற்பதே!

உடனே ‘பசுமை’யைத் தேடி பறந்தோடுவது அல்ல!

புரிந்து கொள்வீர்!

(நிறைவு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *