மதுரை, ஜூன் 21 மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் உள்ள குண்டாற்றில் (வைகை ஆற்றின் துணை நதி) சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக, கள்ளிக்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, கள்ளிக்குடி வட்டாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட பகுதியில் எவ்வித சட்டவிரோத மணல் குவாரியும் செயல்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மனுதாரர் தரப்பில் அதற்கு மாறாக, அந்தப் பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதை நிரூபிக்கும் வகையிலான ஓளிப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
நீதிபதிகளின் அதிரடி உத்தரவுகள்
இருதரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:
அதிகாரிகள் மீது நடவடிக்கை: மணல் கொள்ளை விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) உடனடியாகத் தலையிட்டு, தவறு செய்த அதிகாரிகள் மீது தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வழக்கு குறித்து விசாரணை: மணல் கொள்ளையை எதிர்த்த மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் எஸ்சி, எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை முடிவில் வழக்கு பொய்யானது எனத் தெரிய வந்தால், அதுகுறித்த அறிக்கையைச் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அடுத்தகட்ட விசாரணை: இந்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஆரோக்கியத்தைப் பாதிக்கும்
16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு தடை
புதுடில்லி, ஜூன் 21 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரிய மிக்க மருந்துகள் குறிப்பிட்ட அளவில் கலக்கப்பட்டு மாத்திரையாகவோ, கிரீம்களாகவோ, காப்ஸ்யூலாகவோ தயாரிக்கப்படுவது கூட்டு மருந்து எனப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழி காட்டுதலைத் தொடர்ந்து, கூட்டு மருந்துகள் மீது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு நடத்தியது. இதன் அடிப்படையில், 16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இது, பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக் களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 16 கூட்டு மருந்துகள் சிகிச்சைக் கான நியாயப்படுத்துதலை கொண்டிருக்கவில்லை என்பதாலும், அவற்றில் உள்ள அபாயங்களை கருத்தில் கொண்டும் அவற்றின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் வழங்கல் ஆகியவை நாடு முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 16 கூட்டு மருந்துகளில் ஆன்டிபயாடிக் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்துகள், வயிற்று வலி மற்றும் வலி நிவாரண மருந்துகள், சர்க்கரை நோய் மற்றும் இதர மருந்துகள், தோல் பராமரிப்பு மற்றும் அழகுசாதன லோசன்கள் ஆகியவை அடங்கும்.
