கொல்கத்தா, ஜூன் 21 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதன் உச்சகட்டமாக, கட்சியின் ரூ.440 கோடி இருப்பு கொண்ட 3 முக்கிய வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் வசதி அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிதி நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் முன்னாள் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ரிதப்ரதா ஆகியோருக்கு இடையே கடும் அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், ரிதப்ரதா தலைமையிலான 10 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் பிதான்நகர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், கட்சியின் 3 வங்கி கணக்குகளில் உள்ள நிதியின் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பியதுடன், அவற்றின் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
முன்னதாக, தலைமைத்துவம் குறித்த உட்கட்சிப் பிரச்சினை தீரும் வரை கட்சியின் டெபாசிட் தொகையைப் பாதுகாக்க பரிவர்த் தனைகளை நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் வங்கிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, மம்தாவின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் குணால் கோஷ் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில்: “கடந்த 5-ஆம் தேதி நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில், அரூப் பிஸ்வாஸ் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக சுபாஷிஷ் சக்கரவர்த்தி நியமிக்கப்பட் டுள்ளார். எனவே, கட்சியின் நிதி நிர்வாகம் குறித்துப் பேச அரூப் பிஸ்வாஸுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.”
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நிதி விவகாரத்தில் கட்சியின் முக்கியத் தலைவர் களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் மேற்கு வங்க அரசி யலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
