‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (2)

6 Min Read

முதல் “சட்ட” இடியை இறக்கிய ஆங்கிலேய அரசு 1829ஆம் ஆண்டு அடுத்த இடிக்கியை இயற்றியது. 1829இல் “வங்க ஒழுங்கு முறைச் சட்டம்” என்ற பெயரில் அமல்படுத்தப் பட்ட அந்தச் சட்டம் பார்ப்பனர்களின் “ஸநாதன” நடை முறைக்கு சாவுமணி அடிக்கும் மற்றொரு சட்டமாக இருந்ததால் அந்தச் சட்டமும் பார்ப்பனர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சதி என்ற உடன்கட்டை ஏற்றி பெண்களைக் கொல்லும் நடை முறையை ஒழிக்கும் சட்டமே அது. “புனிதமானது”, இந்துப் பெண்களின் கட்டாயக் கடமை என்றெல்லாம் கூறப்பட்ட இந்தக் கொலைச் சடங்கை பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற ஜாதியக் கட்டுப்பாட்டினை எதிர்த்து அவ்வப்போது சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டது.

ஆங்கிலேயர்களிடையே இந்த வழக்கம் இருவேறு கருத்துகளில் பரவியிருந்தது. இந்தப் பழக்கம் ஒரு கொடுமையான காட்டுமிராண்டி பழக்கம் இதைத் தடுக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆங்கிலேயர்கள் கூறினாலும், சிலர் “அது அவர்கள் மதம் சம்பந்தப்பட்டது. அதில் நாம் தலையிடத் தேவையில்லை” என்று நினைத்த ஆங்கிலேயர்களும் சிலர் இருந்தனர்.

வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவம் பார்ப்பன அதிகாரிகளாலும், பார்ப்பன சிப்பாய்களாலும் நிரப்பப்பட்ட ராணுவமாக இருந்தது. அப்பொழுது கிழக்கிந்தியக் கம்பெனியில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சதியை ஒழிக்கும் சட்டமியற்றத் தயங்கினார். அது தன்னுடைய சிப்பாய்களிடம் எதிர்ப்பை உண்டாக்கும் என்றும் அவர் அஞ்சினார்.

“உள்நாட்டு மக்களின் மத நம்பிக்கையில் வேரூன்றியிருக்கும் ஒரு வழக்கத்தை கட்டாயப்படுத்தி அடக்குவதால் எத்தகைய அபாயம் விளையும் என்று நான் உணர்ந்திருக்கிறேன். வங்க ராணுவத்தில் ஒரு கீழ்ஜாதிக்காரர் கூட சேர்க்கப்படுவதில்லை. எனவே அந்த வலுவான அமைப்பு முழுவதிலும் இருப்பவர்கள் உயர்ஜாதிப் பார்ப்பனர்களே.அவர்கள் தங்கள் குடும்ப கவுரவமும், நம்பிக்கையும் அடங்கி இருக்கும் ஒரு வழக்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களாகவே இருப்பர்.

இராணுவத்தின் உண்மையான ஒப்புதலும், ஒத்திழைப்புமின்றி அந்தக் கொடுமையான மூடநம்பிக்கையை ஒழிக்க சட்டமியற்றுவது ஆபத்தாகி விடும் என்பதில் சந்தேகமில்லை” என்று அவர் எழுதினார். அதனால் “சதி”க்கு எதிராக அவர் சட்டம் இயற்றவில்லை.

ஆங்கிலேயர்கள், சதி என்ற உடன்கட்டை ஏறும், (ஏற்றும்?) பழக்கத்தை எதிர்த்தாலும், பார்ப்பனர்கள் தங்கள் “மதச்சடங்கு”, “நம்பிக்கை” என்ற பெயரில் கடுமையான எதிர்ப்பைக் காட்டியதால் அந்தக் காட்டு மிராண்டி, பெண்ணை இழிவுபடுத்தும் வழக்கத்தை மாற்றத் தயங்கினர். பெண்கள் (மூளைச்சலவை செய்யப்பட்ட) பலர் தாங்களாகவேதான் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இதில் எங்கள் பங்களிப்பு ஏதும் இல்லை என்று அதிகாரிகளிடம் பார்ப்பனர்கள் சாதித்தனர்.

உண்மையில் தன் இணையர்மேல் அளவிறந்த அன்பும், பாசமும் உள்ள மற்றவர் தன் இணையில்லாமல் வாழ விரும்பாமல் உண்ணா நிலையிருந்து உயிரை விட்டு விடுவர். இதை”அனுமரணம்”என்று கூறுவர்.அதே போல் தன் இணையை இழந்தவர் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டும் சிலர் இறந்து விடுவர். அதற்கு “நவ கண்டம்”என்று பெயர்.

ஆனால் “சதி” அப்படிப்பட்டதல்ல. கணவன் இறந்து விட்டால் மனைவி மற்ற ஆணோடு சேர்ந்து விடுவாள் என்று, பெண்களைப் பற்றிய ஓர் இழிவான நம்பிக்கை, ஆணாதிக்க சமூகத்தில் ஆழமாகப் பரவியிருந்ததால் ஒன்றும் அறியாத, அப்பாவிப் பெண்கள் (பல நேரங்களில் கிழவர்களின் சிறு வயது மனைவிகள்) அந்தக் கிழவர்கள் இறந்த உடனே நெருப்பில் தூக்கி வீசி அனு, அனுவாக சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று மதச் சீர்திருத்தம் பேசியவர்கள் நினைத்தனர். ஆனால் பார்ப்பனர்கள் “ஸநாதனம்” என்றெல்லாம் பேசி அதைத் தடுத்து விட்டார்கள். (சான்று: “எனது இந்தியா” – எஸ்.ராமகிருஷ்ணன்)

பார்ப்பனர்களின் ஸநாதன தர்மத்தில் “சதி” ஒரு முக்கியமான சடங்கான போதிலும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதற்கு எதிர்ப்பாகப் போராட்டங்கள் தோன்றத் துவங்கின. அதற்கு முன் பல ஆயிரக் கணக்கான பெண்கள் சதியை முன்னிலைப்படுத்தி கொன்று குவிக்கப்பட்டனர். ஒருசில பெண்கள் தப்பிக்க முயன்றாலும் அடித்து, உதைத்து, மீண்டும் சிதையின் நெருப்பில் அப்பெண்களைத் தள்ளிக் கொலை செய்வது வழமை யான நிகழ்வாக மாறிப் போனது. டில்லியை ஆண்ட சுல்தான்கள் பெண்(மனைவி) சதிக்கு சம்மதம் என்று ஒத்துக்கொண்ட பின்னே உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

ஆனால் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் ஆண்கள் பெண்களைக் கட்டாயப்படுத்தி சம்மதம் வாங்கி உடன்கட்டை ஏற்றினர்.அதனால் இந்தச் சட்டம் பலனற்றுப் போனது. முதலில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் “சதி” என்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை, அதில் தலையிடக் கூடாது” என்ற கொள்கையைக் கடைபிடித்தார்.ஆனால் அக்பர் ஆட்சியில் இந்தப் பழக்கம் தடை செய்யப்பட்டு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் திருட்டுத்தனமாக பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருந்தது. அவுரங்கசீப் காலத்தில் மேலும் கடுமையாக இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் அதிகாரிகளுக்குக் கையூட்டுக் (லஞ்சம்) கொடுத்து நடத்தப்பட்டது. முகலாயர்கள் காலத்திலேயே ஊடுருவிய அய்ரோப்பியர்களான போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் ஆகியோர் அவர்கள் ஆண்ட சிறு பகுதிகளில் சதியைத் தடை செய்தனர்.

கடைசியாக வந்த ஆங்கிலேயர்கள்தான் நாட்டின் பெரும்பகுதியை ஆண்டனர். அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தில் “சதி”யைத் தடை செய்வதில்தான் பல சிக்கல்கள் நேர்ந்தன. (சான்று: “எனது இந்தியா” – எஸ்.ராமகிருஷ்ணன்.)

பதினெட்டாம் நூற்றாண்டுவரை பொதுவாக இந்தக் கொடுமையான பழக்கம் பொதுமக்களிடையே கட்டாயக் கடமையாக இருந்தது. பெண்களை “சொர்க்கத்”திற்கு அனுப்பும் வழி என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தனர். நெசவாளர்கள் இனத்தில் இறப்பிற்குப் பின் எரிக்கும் வழக்கம் இல்லை; புதைக்கும் வழக்கம்தான்!

கணவன் இறந்தால் உயிரோடு அவன் மனைவியையும் புதைத்தக் கொடுமைகள் ஆயிரக்கணக்கில் நடந்தன. பெண்களை ரத்தமும், சதையும் உள்ள உயிருடையவள் என்று எண்ணாமல் ஒரு ஜடப்பொருள் என்ற எண்ணமே இந்த ஆணாதிக்க சமூகத்தில் நிலவி வந்ததன் விளைவுதான் இதற்குக் காரணம். எப்படி வீடு, நிலம், சொத்துகள் மனிதனின் உடமைகளாக இருந்ததோ, அதேபோல் அவனது மனைவியும் ஓர் உடமையாகவே எண்ணப்பட்டாள்.

எப்படி அவன் உடமைகளை மற்றவர்கள் அனுபவிப்பதையோ, உரிமை கொண்டாடுவதையோ அனுமதிக்கமாட்டானோ அதேபோல் அவனது உடமையான அவளை அவனைத் தவிர வேறு யாரும் அனுபவித்துவிடக் கூடாது என்ற ஆணாதிக்கத் திமிரும், அகம்பாவமுமே உடன்கட்டை வழக்கத்தை சமூகத்தில் உண்டாக்க அடிப்படைக் காரணம் “பெண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை” என்ற சொலவடைக்கு ஏற்ப இவன் மனைவி இறந்தால் இன்னொரு பெண்ணோடு இவன் வாழ்வான். ஆனால் இவன் செத்தால் இவன் மனைவி மட்டும் இவனோடு சேர்ந்து கருகிச் சாக வேண்டும்.

என்ன ஒரு பாலியல் அநீதி(!) கல்கத்தாவில் வங்காளப் பார்ப்பனர்கள் சிறிது கூட ஈவு இரக்கமின்றி ஏராளமான பெண் கொலைகளை ஈவு இரக்கமின்றி செய்தனர்.ஒரு சில ஆண்டுகளிலேயே 500க்கும் மேற்பட்ட பெண்கள் சதியின் பேரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இந்தியாவில் பெண்களை கற்புக்கரசிகளாக தான் வாழ விடுவோம் என்ற பெயரில் “சதி”யால் ஒரு ஆண்டுக்கு 8125 பெண்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டிருந்தது.

“சதி”க் கொடுமையை ஒழிக்க ஆங்கிலேய அரசாங்கம் பலவகைகளில் முயன்றாலும், ஸநாதன பார்ப்பனர்கள் அதற்கு பலத்த எதிர்ப்பையே காட்டி வந்தனர். அரசாங்கம் “சதி”யைக் கொலைக்குற்றமாக அறிவித்த பின்தான் பார்ப்பனர்கள் பயப்படத் தொடங்கினர். அதற்கு முன் பனாரஸ் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

(“பிராமணன் கொலையே செய்தாலும், தலையை “முண்டிதம்” (மொட்டையடித்தல்) செய்வதே மரண தண்டனைக்கொப்ப தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு மரண தண்டனை உண்டு”. -அத்தியாயம் 8, ஸ்லோகம் 379. -பார்ப்பான் கொலை செய்தால் “சிகைச் சேதம்” (முடியை வெட்டுதல்), மற்றவர் கொலை செய்தால் “சிரச்சேதம்” (தலையை வெட்டுதல்). – (அசல் மனுதர்ம சாஸ்திரம் – இராமனுச்சாரியார்).

இந்தக் கொடுமையை மாற்றி அனைத்து ஜாதியின ருக்கும் (பார்ப்பனர் உட்பட) குற்றமிழைத்தால் ஒரே வகையான தண்டனை என்று 1817இல் “ஒழுங்கு முறைச் சட்டம்” என்ற சட்டத்தை ஆங்கிலேய அரசு அமலாக்கியது.

பனாரஸ் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையி லிருந்து அளிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்பட்டதும், “சதி” யைக் கொலை செய்வதற்கு நிகரான செயல் என்று 1829இல் “வங்க ஒழுங்கு முறை சட்டம் XVII” கூறியதால் பார்ப்பனர்கள் பம்மத் தொடங்கினர். அப்படியும் அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுத்து, திருட்டுத்தனமாக இந்தச் செயல் சில இடங்களில் நடந்தன. ஆனால் கடைசியாக இந்தச் செயல் ஒழிக்கப்பட்டது. அதே வங்க தேச பார்ப்பனர் ஒருவரின் தீவிர முயற்சியாலும், ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாலும் இந்தக் கொடுமை முடிவுக்கு வந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *