ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : செந்தில் பாலாஜிக்கு ஒன்றிய அரசு அனுப்பிய எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கை கொடுத்தும் பிணை இல்லை? அதே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சரத் சந்திர ரெட்டிக்கு முதுகுவலி என்றதும் பிணை கொடுக்கிறது நீதிமன்றம் – ஏன் இந்த வேறுபாடு?
– மா.தாமரைச்செல்வன், மாங்காடு

பதில் 1 : ‘அவர் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’ – (கிராமப்புற பழமொழி). அது எங்கு எவர் வயலில் மேய்ந்தாலும் யாரும் அதை விரட்டாமல் தடவிக் கொடுக்க வேண்டும். அவர் மேல்ஜாதி ஆயிற்றே! சூத்திர செந்தில் பாலாஜி மனுதர்மப்படி – குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே – உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ள அவர் நீதி மன்றத்திற்கு வரும்போது பார்க்கும் எவருக்கும் அவரது உடல்நிலை குறித்து நன்கு புரியும். ஏனோ இந்த நீதி மயக்கம் என்பது -. நியாயப்படி சரியல்ல.
1. சட்டத்தின்படி “Bail is general rule. Jail is an exception” என்பது குற்ற வழக்குகளில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை.
வட மாநில வழக்கொன்றில் இதே போல அமலாக்கத் துறையினரால் சிறையில் வைக்கப்பட்டவரின் உரிமை என அண்மையில் அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி, அவரது அடிப்படை உரிமையை பறிக்கக் கூடாது என்று தீர்ப்பினையும் எழுதி அவர் வெளியே வந்துள்ளார்!
அதன்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சிறையில் பல மாதங்கள் கழித்தவர்கள் பிணையில் வர வேண்டியது நியாயப்படி, சட்டப்படி, தார்மீகப்படி தேவையானதாகும்!

கேள்வி 2 : ஒன்றிய அமைச்சர், இரண்டு மாநில ஆளுநராக இருப்பவர், சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் போட்டியிட நெருக்கடி கொடுக்கும் பா.ஜ.க., நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்களை போட்டியிட வைக்காதது ஏன்?
– வெ.வேல்முருகன், வேலூர்
பதில் 2 : அவாள் நோகாமல், ‘பதவி’க்கு வருவதற்கே. மக்களை நேரிடையாக தேர்தல் மூலம் சந்திக்க இயலாத – நிதிப் பற்றாக்குறையாளர்களும் ஆயிற்றே(!)

கேள்வி 3: தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவருமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிலையில், இவர்கள் எப்படி பாமர மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
– எஸ். பூபாலன், திண்டிவனம்
பதில் 3 : நல்ல நேரம், சகுனம் ஆகியவற்றிற்கு எல்லா வேட்பாளர்களையும் வெற்றியாளர்களாக ஆக்கும் சக்தி உண்டா? பரிதாபத்திற்குரிய பதவியாசை பவிசின் லட்சணம் அது! பகுத்தறிவை பதவிக்காக தள்ளி வைத்த மவுடீகம் எப்போது மறையுமோ?

கேள்வி 4 : தேர்தல் பத்திர ஊழல் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ‘இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்’ கூறியுள்ளது குறித்து?
– வே.செங்குட்டுவன், மதுரை
பதில் 4 : ஊழல்வாதிகளுக்கு இவர்கள் தரும் சர்டிபிகேட் – அனுபவம் மிக்கவர்கள் போலும்! மகா வெட்கம்!

கேள்வி 5: “உங்கள் தயாரிப்புகள் தரமற்றவை – விளக்கம் கொடுங்கள்” என்று மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் விளக்க அறிக்கை அனுப்பிய பிறகு, அறிக்கை பெற்றவர்கள் பாஜகவிற்குத் தேர்தல் பத்திரம் மூலம் பணம் கொடுத்துள்ளனர். பிறகு அந்த விளக்க அறிக்கை என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இது மக்களின் உயிரோடு விளையாடும் பயங்கர ஆபத்து இல்லையா?
-ஆ.வெற்றிவேல், திருவண்ணாமலை
பதில் 5 : கேள்வியிலேயே பதில் உள்ளதே!

கேள்வி 6: தேர்தல் சின்ன விவகாரத்தில் இவ்வளவு வெளிப்படையாகவே பாஜகவிற்கு சாதகமாக முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்குமா?
– கெ.வேணுகோபால், மாமல்லபுரம்


பதில் 6 : மில்லியன் டாலர் கேள்வி. எளிதில் எவரும் பதில் கூற முடியாத கேள்வி.

கேள்வி 7: லடாக்கை பிரித்தது போல், இனி பிற மாநிலங்களையும் பிரித்து அதை யூனியன்களாக மாற்றி – கேட்பார் இன்றி கொள்ளை அடிக்கும் ஆபத்து உங்கள் முன்னே நிற்கிறது என்று லடாக் சூழியல் போராளி சோனம் வாங்சுக் எச்சரித்துள்ளாரே? இந்த எச்சரிக்கையை யாரும் உணர்ந்துகொண்டதாக தெரியவில்லையே?
– வீ.அருணகிரி, சேலம்


பதில் 7 : இருண்ட எதிர்கால மணியோசை. நோயை வருமுன் தடுக்கத் தெரியாத அறியாமையாகும்.

கேள்வி 8: உடன் பயின்ற அய்.பி.எஸ். அதிகாரியையே அண்ணாமலை போட்டியிடும் தொகுதிக்கு பாதுகாப்புத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதே தேர்தல் ஆணையம்?
– க.சாக்கியமுனி, காஞ்சி
பதில் 8 : தேர்தல் ஆணையத்தின் போக்கிற்கு நல்ல சாட்சியம் இது! என்றாலும் சட்டப்படி தடுக்க இயலாதே!

கேள்வி 9: “சுரங்க ஊழல் பேர்வழி, பாரத மாதாவிற்கு துரோகமிழைத்தவர்” என்று பாஜக அமைச்சர்களால் குற்றம் சாட்டப்பட்ட, உச்சநீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளான காங்கிரஸ் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிந்தால் பாஜகவில் இணைந்த 3 நிமிடங்களில் அரியானா குருசேத்திரா தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளதே?
– தே.காளிதாஸ், திருவள்ளூர்


பதில் 9 : அதுதான் பா.ஜ.க.வின் – ஏழைகளின் ஆபத்பாந்த கட்சியின் பரிவு போலும்!

கேள்வி 10: “கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிடுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு சவால் விட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் உள்ளூர் பாஜக தலைவர்கள் கூட மவுனம் சாதிக்கின்றனரே? பிறகு எந்த நம்பிக்கையில் “நாங்கள் தமிழ்நாட்டில் வெல்வோம்” என்று கூறுகிறார்கள்?
– இல.ஏகலைவன், செங்கை
பதில் 10 : ஆசைகளைக் குதிரைகளாக்கி அதில் சவாரி செய்வது அவர்களது பலவீனமான உரிமை.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *