46 நாட்களில் 11 ‘நீட்’ படுகொலைகள்!

4 Min Read

எத்தனை முறை அழுவது? எத்தனை முறை கதறுவது? உரக்கக் குரல் எடுத்து எவ்வளவு நாள் முழக்கமிடுவது? இன்னும் எத்தனை ‘மாலைகள்’? எத்தனை ஏக்கங்கள்? தொடர்கதையாகியிருக்கும் நீட் தேர்வுப் படுகொலைகளுக்கு இனியும் எத்தனைப் பலிகள்?

பெயர்கள் மாறுகின்றன; ஊர்கள் மாறுகின்றன; மொழிகள் மாறுகின்றன; கடிதங்களின் வரிகள் கூட மாறுகின்றன; ஆனால் உணர்வு மாறவில்லை; வெடித்து அழும் பெற்றோரின் குரல் ஓயவில்லை. ‘கண்ணைப் போல வளர்த்த பிள்ளைகளின் வெற்றியை கண்ணாரக் காண்போம்’ என்ற கனவை, அந்தக் குழந்தைகளின் உடல்களோடு சேர்த்துப் புதைப்போம் என்று எண்ணியும் இருக்க மாட்டார்களே!

‘நீட்’டுக்கான மறு தேர்வு எழுதத் தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த 19 வயது மாணவி அனு கீர்த்தனா புதன்கிழமையன்று (ஜூன் 17) தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த மாணவி, ஏற்ெகனவே இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதியிருந்த நிலையில், மீண்டும் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். வினாத்தாள் கசிவு காரணமாக மீண்டும் நடத்தப்படவுள்ள நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் அனு கீர்த்தனாவை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. “கடந்த தேர்வில் (அண்மையில் வினாத்தாள் கசிந்த  ‘நீட்’ தேர்வு) நன்கு எழுதியிருந்தேன். எப்படியும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று கருதியிருந்தேன்; ஆனால், இந்த முறை திரும்பவும் தேர்வு (மறுதேர்வு) எழுதினால், நான் தேர்ச்சி பெறுவேனா என்பது தெரியவில்லை. அதன் பின்னர் என் தந்தையைக் காண எனக்குத் தைரியமில்லை” என்று தனது சித்தப்பாவுக்கு வாட்ஸ் அப் அனுப்பியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களில் இத்தகைய செய்திகள் நாடெங்கும் வந்து நம்மைக் கலங்கடிக்கின்றன. ‘நீட்’ தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக நடக்கும் மாணவர் தற்கொலைச் சம்பவங்களில், கடந்த இரண்டு நாட்களில் பதிவான மூன்றாவது சம்பவம் இது என்று குறிப்பிடுகின்றன செய்தி ஏடுகள்!

டேராடூனின் சந்திரபானி பகுதியில், ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த 23 வயது ரியா குமாரி என்ற இளம்பெண் நேற்று  (18.6.2026) தற்கொலை செய்து கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ரியா
12-ஆம் வகுப்பில் 96.7 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர். பின்னர் கல்லூரியிலும் முதலிடம் பிடித்திருந்தார். அவர் பல ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்காகத் தயாராகி வந்த நிலையில், வரவிருக்கும் மறுதேர்வு குறித்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர் மாண்ட அறையில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குறிப்பில், ரியா தனது பெற்றோர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தியதோடு, தனது படிப்பு மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல் போனதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.

அகமதாபாத்தில், ‘நீட்’ மறுதேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது சிறுவன் – ஒரு வழக்குரைஞரின் மகன். நேற்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளான். நள்ளிரவில் கட்டடத்திலிருந்து கீழே குதித்து மாண்டுள்ளான்.

“அதிகாலை 12:45 மணியளவில், அதே குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கட்டடத்தின் கீழே அந்தச் சிறுவன் கிடப்பதைக் கண்டார். சிறுவனுக்கு இன்னும் சுவாசம் இருப்பதை உணர்ந்த அவர், அவசர மருத்துவ ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்) அழைப்பு விடுத்தார். ஆனால், மருத்துவக் குழுவினர் நிகழ்வு இடத்திற்கு வந்தபோது, அவர் ஏற்ெகனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்,” என்று அவர் கூறினார். ‘விபத்து மரணம்’(!) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளது குஜராத் காவல்துறை!

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் 551 நகரங்களில் 22.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். வினாத்தாள் கசிவு காரணமாக அன்று நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
எம்.பி.பி.எஸ். இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட்டுக்கு ஜூன்
21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை (NTA) அறிவித்ததன் பிறகு, நாடு முழுவதும் இந்த 46 நாட்களில் 11 பேர் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த 11 பேரில் மேலே சொன்ன அகமதாபாத் சம்பவம் இடம் பெறவில்லை. அதுதான் விபத்தாயிற்றே!

கொஞ்சமும் ஈவு இரக்கமில்லை; அறிவுச் செல்வங் களான பிள்ளைகள் தங்களை மாய்த்துக் கொள்ள நெருக்கடியைத் தருகிறோமே, ‘படுகொலை’ செய்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியில்லை ஒன்றிய அரசுக்கு! அதன் முதலாளிகளுக்குக் கொழுத்த லாபம்! பல்லாயிரம் கோடியில் வணிகம்! இந்தச் செய்திகள் வர வர, அச்சம் கொள்ளும் பெற்றோர், அடுத்து தங்கள் பிள்ளைகளைத் தேர்வு எழுதாவிட்டாலும் தாழ்வில்லை என்று அமைதிப்படுத்தி, பின்னர் கையறு நிலைக்குச் செல்லுவார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள் ஊக்கமிழப்பர். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு அதுதானே வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் திருவிழா போல நடக்கிறது ‘நீட்’ தேர்வு. திருவிழாவுக்கு ‘ரத்தக் காவு’ கொடுப்பது போல நடக்கின்றன உயிரிழப்புகள்! எல்லாம் அவர்கள் சாஸ்திரப்படி தானே நடக்கிறது. பாதகமில்லை என்ற மனநிலை அவர்களுக்கு!

அரசியலமைப்புச் சட்ட மீறல், மாநில உரிமை பறிப்பு, கல்வி உரிமை பறிப்பு என்றாலும் மக்கள் விரோத ’நீட்’டை நடத்த இந்திய விமானப்படை பயன்படுத்தப்படுகிறதாம், வெட்கமின்றி விளம்பரப்படுத்துகிறார்கள். ராணுவத்தின் துணையோடு நடத்த வேண்டிய அளவுக்கு ‘ஓட்டைகள்’ நிறைந்த ஓர் அமைப்பை வைத்துக் கொண்டு தான், இளம் பிஞ்சுகளின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன என்பதே நமக்குப் பீதியாக இருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளராக இருக்கும் அனுகீர்த்தனாவின் தந்தை செந்தில் குமார், “அனிதாவில் தொடங்கியது அனுகீர்த்தனாவோடு முடியட்டும்” என்று மன்றாடியிருக்கிறார். இந்தக் குரல் எட்டுமா செங்கோட்டையை ஆள்வோரின் செவிகளில்?

குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல! தேர்வுகள் எதற்கும் முடிவல்ல! முடிவு கட்ட வேண்டிய ‘நீட்’டுக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *